ஈஷா சார்பில் வேளாண் காடு வளர்ப்பு’’பிப்.9 திருச்சியில்

ஈஷா வேளாண் காடுகள் திட்டம் சார்பில் வேளாண் காடு வளர்ப்பு முறைகள் குறித்து அறிந்துகொள்வதற்கான ஒரு களப் பயணம் திருச்சியில் பிப்.9-ம் தேதி நடைபெற உள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் வேளாண் காடு வளர்ப்பு முறை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இதனால், இம்முறையை தமிழக விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஈஷா வேளாண் காடுகள் திட்டம் பல ஆண்டுகளாக செயல் செய்து வருகிறது. இதன்பயனாக, தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பு முறைக்கு மாறியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையை காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் லட்சக்கணக்கில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேளாண் காடு வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் ஈட்டிவரும்  முன்னோடி விவசாயிகளின் காடுகளுக்கு மாதந்தோறும் களப் பயணம் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன் தொடக்கமாக முதல் களப் பயணம் திருச்சியில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சேரிமலை அடிவாரத்தில் 150 ஏக்கரில் அமைந்துள்ள லிட்டில் ஊட்டி வேளாண் காட்டையும், கரிக்காலி பகுதியில் உள்ள வள்ளலார் தோட்டத்தையும் சுற்றிப்பார்க்கும் வகையில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இப்பயணத்தில் நிலம், நீரின் தன்மை மற்றும் விவசாயிக்ளின் தேவை அறிந்து மரங்களை தேர்வு செய்து நடும் வழிமுறைகள், வேளாண் காட்டை லாபகரமான முறையில் அமைப்பதற்கான தொழில்நுட்பங்கள், அந்த காட்டில் இருந்து தின வருமானம், மாத வருமானம், வருட வருமானம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள், கால்நடை வளர்ப்பு போன்ற அம்சங்கள் குறித்து நேரடியாக தெரிந்துகொள்ள முடியும். மேலும், புது விவசாயிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக வெற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த களப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90068 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.