எஸ்.வி.சேகர் வெளியிட மறுத்த விளம்பரம்!

தான் நடிக்க மறுத்த விளம்பரம் குறித்து பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் ரம்மி விளையாடி பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள். இதுபோல் பணத்தை இழந்த, ஐ.டி. ஊழியர் ஒருவர், தொடர்ந்து கடன் வாங்கி விளையாடினார். அதிலும் தொடர் தோல்வி ஏற்பட, கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து சொந்த ஊரான பண்ருடிட்டிக்குச் சென்றார். அங்கும் வந்து கடன் காரரர்கள், பணத்தைக் கேட்கவே, அவரும், அவரது தாயாரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இது கடந்த வருடம் நடந்த சம்பவம்.

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான டி.வி.எஸ்.சோமு, இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, முகநூலில் பதிவிட்டார்.

அதில், “பொறியியல் பட்டதாரி இளைஞர்; சென்னையில் ஐ.டி. துறையில் நல்ல சம்பளம். அதே துறையில் பணியாற்றும் பெண்ணை மணந்தார். சிறு குழந்தை உண்டு.

மகிழ்ச்சியான ஓடியது குடும்பம்.

இடையில் அந்த இளைஞருக்கு, ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட… பணமெல்லாம் போனது… கடன் வாங்கி விளையாட அதுவும் போனது.

கடன்காரர்கள் ஒருபுறம் நெருக்கினாலும், வேறிடத்தில் கடன் வாங்கி விளையாடி… தோற்றுக்கொண்டே இருந்தார்..

மனைவி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அழுத கண்களுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார் மனைவி.

அந்த இளைஞரை கடன் கொடுத்தவர்கள் நெருக்க.. சென்னையை விட்டு சொந்த ஊருக்கு ஓடிவந்தார். அங்கு தாயார் வசித்துவந்தார்.

கடன் கொடுத்தவர்கள் அங்கும் வந்து பணத்தைக் கேட்க…

தாயும், மகனும் தூக்கில் தொங்கிவிட்டார்கள்.

கடந்த வருடம் இதே நாள் வெளியான செய்தி..

ஆனால், இன்னமும், “ஆன்லைனில் ரம்மி விளையாடுங்கள்.. ஆயிரக்கணக்கில் சம்பாதியுங்கள்; வாழ்க்கையில் வெல்லுங்கள்!” என விளம்பரங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன!” என குறிப்பிட்டு இருந்தார்.

இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, நெட்டிசன்கள் பலர் பின்னூட்டம் இட்டிருந்தனர்.

பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது பின்னூட்டத்தில், “என் எஸ்.வி.எஸ். 50டிவி (SVES50TV) யில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விளம்பரத்தை ஒளிபரப்பச் சொன்னார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

“மக்களை சீரழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் இது போன்ற விளம்பரங்களை, எஸ்.வி.சேகர் புறக்கணித்தது, பாராட்டத்தக்கது.  தொலைக்காட்சி நிறுவனங்களும் இதே போல செயல்பட்டு, ஆன்லைன் விளம்பரங்களை நீக்க வேண்டும்!” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த முகநூல் பதிவு..

 

https://www.facebook.com/reportersomu/posts/2167150486762483