”நல்ல படத்துக்கு ஏம்பா, பார்ட் டூ?” : ‘சூது கவ்வும் 2’ விழாவில் கலாய்த்த மிர்ச்சி சிவா!
சி.வி.குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 13ஆம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இப்படத்திற்கு எட்வின் லூயிஸ், விஸ்வநாத் ஹரி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மிர்ச்சி சிவா, ‘எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. மேடையைப் பார்த்தால், பாய்ஸ் ஹாஸ்டலில் இருப்பது போல் இருக்கிறது. அதற்காக படத்தின் ஹீரோயின் இல்லை என்று நினைக்காதீர்கள். ஹீரோயின் கதாபாத்திரம் கற்பனையான கதாபாத்திரம். அதனால் இங்கும் ஹீரோயின் இருக்கிறார்கள் ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை.
சி.வி.குமாரை அலுவலகத்தில் சந்தித்த போது ‘சூது கவ்வும் 2’ படத்தை உருவாக்கவிருக்கிறோம் என்றார். உடனே எனக்குள் சூது கவ்வும் நல்ல படமாச்சே, ஏன் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்று தோன்றியது. அதாவது அந்த நல்ல படத்தை ஏன் மீண்டும் எடுக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வியாக இருந்தது.அதில் நான் நடிக்கிறேன் என்றாலும், அப்போது இயக்குநர் அர்ஜுன் இந்த திரைப்படம் சூது கவ்வும் திரைப்படத்தின் ப்ரீகுவலாக உருவாகிறது. அதன் பிறகு தற்போதைய படத்துடன் தொடர்பு ஏற்படும் என்றார். அத்துடன் அதற்காக அவர் சொன்ன திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த கதைக்குள் நான் வருவது, கருணாகரனை சந்திப்பது, என பல சுவாரசியமான திருப்பங்கள் இருந்தன. அதன் பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்கினோம்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் தமிழ் திரை உலகிற்கு ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பா. ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்களை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிதி சிக்கல் குறித்து தயாரிப்பாளர் பல மேடைகளில் கண் கலங்கி பேசி இருப்பதை பார்த்திருக்கிறேன்.
சினிமாவை நேசிப்பவர்களை சினிமா கைவிடாது என்பார்கள். சினிமாவை அவர் அளவு கடந்து நேசிப்பதால் தான் நான் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். நாம் இதுவரை ’என்டர் தி டிராகன்’ படத்தை பார்த்திருக்கிறோம். அவர் இப்போது ’ரிட்டன் தி டிராகன்’ ஆக வருகை தந்திருக்கிறார். ‘சூது கவ்வும் – தர்மம் வெல்லும்’ என்று அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக சொன்னார். ஆனால் அந்த படத்தில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று சொல்லவில்லை. இருந்தாலும் அந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன்.
இந்த படத்திற்கு மற்றொரு தயாரிப்பாளர் தங்கராஜ். அவர் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அதனால் படப்பிடிப்பு நடைபெறும் போது வயிறார உணவளித்தார். அவர் பெயரைப் போலவே தங்கமான மனதுடையவர். இந்தப் படத்தைப் பற்றி எல்லோரிடமும் பாசிட்டிவாக பேசக்கூடியவர். அவருடைய ஒத்துழைப்பிற்கு நன்றி.
இந்தத் திரைப்படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர், கருணாகரன், வாகை சந்திரசேகர், அருள்தாஸ் என அனைவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். அதிலும் குறிப்பாக வாகை சந்திரசேகர் உடன் இணைந்து நடிக்கிறேன் என்று என் அம்மாவிடம் சொன்னேன். அவர் ஆச்சரியப்பட்டு அவருடன் நடிக்கிறாயா? அவர் நல்ல தமிழ் பேசுவாரே என்றார்.
‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்து இன்று வரை அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா மீது அவர் வைத்திருக்கும் அன்பும், நேசமும் இதன் மூலம் தெரிகிறது. அவரைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாகரன் கொடுத்த பில்டப் சற்று அதிகம். என்னுடைய பேச்சை கேட்பதற்காக பாண்டிச்சேரியில் இருந்து வந்திருக்கிறேன் என்றார். அவர் பாண்டிச்சேரியில் எப்படி இருந்தார் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவரும் ஒரு திறமையான நடிகர். அவருடைய முதல் படம் கலகலப்பு. அதில் நானும் அவருடன் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் சந்திக்கும் போது நாமெல்லாம் எப்போதும் பரபரப்பாக இருக்க வேண்டும் என சொல்வார்.அந்தப் படப்பிடிப்பு தளத்தில் நான் கருணாகரன் மற்றும் யோகி பாபுவுடன் தான் இருப்பேன். இன்று யோகி பாபு நடித்த படத்தை அவரே திரையரங்கத்திற்கு சென்று பார்க்க முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார். அதைவிட சந்தோஷம் கருணாகரன் நூறு படங்களில் நடித்துள்ளதாக கூறினார். அவர் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இந்த திரைப்படத்தின் திரைக்கதையை மூன்று வருடமாக எழுதினோம் என்றார்கள். அப்படி எல்லாம் கிடையாது. டைட்டானிக், அவதார் போல் எடுக்கவில்லை. இரண்டு வருடம் கரோனா. அதனால் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. இதுதான் உண்மை. மூன்று வருடம் திரைக்கதையை எழுதினால் அவதார், டைட்டானிக் போன்று படம் எடுக்க வேண்டும். இப்படம் அது போன்று இல்லை.
இயக்குநர் அர்ஜுன் பேசும்போது 15 சவரன் தங்க நகையை தொலைத்து விட்டதாக குறிப்பிட்டார். இந்த படம் வெற்றி பெற்றால் படத்தின் தயாரிப்பாளர் அந்த 15 சவரன் தங்க நகை பரிசாக வழங்க வேண்டும் என்பதற்காக அதனை கூறினார். அதனால் இந்த படம் வெற்றி பெற்ற பிறகு அவருக்கு மறக்காமல் 15 சவரன் தங்க நகையை தயாரிப்பாளர்கள் பரிசாக வழங்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். சூது கவ்வும் முதல் பாகம் கல்ட் திரைப்படம், சூது கவ்வும் இரண்டாம் பாகம் ஜாலியான நகைச்சுவை திரைப்படம். இந்தத் திரைப்படத்தை அனைவரும் வரும் டிசம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம்” என கூறினார்.