ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் தேவ் நடிக்கும் ‘வளையம்’ !
ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும் அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் ‘வளையம்’ திரைப்படம் எளிய பூஜையுடன் தொடங்கியது!
தமிழ்த் திரையுலகம் எப்போதுமே இளம் இயக்குநர்களின் புது சிந்தனைகளுக்கு ஆதரவு மற்றும் அங்கீகாரம் கொடுக்கும். கடந்த 10 வருடங்களாக ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு இப்படியான இளம் திறமைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சுலர்’ மற்றும் பல படங்களை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில்குறிப்பிடலாம். டிஜி வைஷ்ணவ் கல்லூரி பட்டதாரியான மனோ பாரதி டி.வி சேனல்கள், மீடியா ஹவுஸ் மற்றும் பல வெற்றிகரமான குறும்படங்கள் போன்றவற்றை இயக்கியுள்ளார். அவரது இயக்கத் திறமையைக் கண்டறிந்து அவருடைய புதுப்படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு கைக்கோத்துள்ளார்.
இந்தப் படம் ‘வளையம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அதிரடி த்ரில்லராக உருவாகி வரும் இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான தேவ் நடிகராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியில் கூறும்போது,”சமூகத்துக்குத் தேவையான தரமான, நல்ல கருத்துள்ள படங்கள் மற்றும் பொழுதுபோக்கு கதைகளை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் பயணித்து வருகிறோம். இந்த 10 வருடங்களில் நல்ல படங்களை உருவாக்க முடிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஆதரவு கொடுத்தத் திரையுலக நண்பர்கள், பத்திரிகை ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு எனது நன்றி. அனைவருக்கும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் எங்களின் அடுத்தப் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையிலும், மேலும் சில கூடுதல் காட்சிகள் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பேராடி மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோருடன் மேலும் சில முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜின் முன்னாள் உதவியாளரான மகேந்திர எம். ஹென்றி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பூபதி படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
‘லிஃப்ட்’ படப்புகழ் மைக்கேல் பிரிட்டோ படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை பிரதீப் கவனித்துக் கொள்வார். அவர் முன்பு பல்வேறு விளம்பரங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல கதையம்சத்துடன் இத்தகைய திறமையான குழு ஒன்று சேரும் போது, ‘வளையம்’ நிச்சயம் பார்வையாளர்களை கவர்வது உறுதி.