Aalan Trailer Launch : “இளைஞர் மனதில் வன்முறையை விதைப்பது பெரிய பாவம்!”:  இயக்குநர் ஆர் சிவா ஆவேசம்!

Aalan  Trailer Launch : “இளைஞர் மனதில் வன்முறையை விதைப்பது பெரிய பாவம்!”:  இயக்குநர் ஆர் சிவா ஆவேசம்!

வெற்றி, மதுரா, அனு சித்தாரா உள்ளிட்ட பலர் நடிக்க, ஆர். சிவா தயாரித்து இயக்கியுள்ள ‘ஆலன்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், கோபிநாத், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் ஆர். சிவா பேசியபோது, ”இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர்களைப் பற்றி பேசி இருக்கிறேன். ஏன் எழுத்துக்களை பற்றி பேசினேன்? என்றால்.. என்னுடைய 12 வயது முதல் 18 வயது வரை நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன்.

வாழ்க்கைக்கு புத்தகத்தை படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். இயக்குநர் கே. பாக்யராஜ் எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகத்தை தேடி வாசித்த பிறகு தான் சினிமா மீது எனக்குள் ஒரு ஆவல் வந்தது. நாமும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும்… இயக்குனராக வேண்டும்… என்று எண்ணி சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு முயற்சித்தேன்.

ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாகவும், குடும்ப பொறுப்பினை சுமக்க வேண்டும் என்பதற்காகவும் சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு என்னுடைய வாழ்க்கை முப்பது ஆண்டுகள் கழிந்தது. அங்கு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

கோவிட் காலகட்டத்தில் எனக்கு நான்கு மாதம் ஓய்வு கிடைத்தது. அப்போதுதான் என் ஆழ் மனதில் விதைத்த விதை எட்டிப் பார்த்தது. ஏதாவது எழுத வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும்.என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் தான் இரண்டாவது படமாக ‘ஆலன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை.

ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2018 ஆம் ஆண்டில் ஐநா சபையில் கிரேட்டா என்ற ஒரு இளம் பெண் இந்த உலகத்தினரை பார்த்து ஒரு கேள்வியை கேட்கிறார். அவர் துணிச்சலாக கேட்ட கேள்விக்கான காரணம் என்ன? புவி வெப்பமயமாதல். இந்த பூமியில் 1. 5° செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. இந்த உலகம் எங்களுக்கானது. காற்று எங்களுக்கானது நீர் எங்களுக்கானது இதை அசுத்தம் செய்வதற்கு நீங்கள் யார்? என ஒரு சின்ன பெண் இந்த கேள்வியை கேட்டார். இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல. நமது சந்ததிகளுக்குமானது.

அடுத்த தலைமுறையினருக்கும் இதனை விட்டுச் செல்ல வேண்டும். அந்தப் பெண் நாம் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினார். நாம் ஏதோ இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். திரும்பிப் பார்க்கிறோம். கிட்டத்தட்ட அதே போல் தான் இந்த படமும் இருக்கும்.‌

இந்தத் திரைப்படம் ஆலன் அனைவருக்கும் பிடிக்கும். கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஜெர்மனி, காசி, வாரணாசி, ரிஷிகேஷ், காரைக்குடி, கொடைக்கானல், ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.

இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தால் தயாரிப்பில் எந்த சமரசமும் இன்றி வன்முறையில்லாமல் தரமாக உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வன்முறை கலந்து என்னால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் கதையின் நாயகன் அந்த வன்முறையையும் கடந்து செல்கிறான்.

வாழ்க்கையை பார்வையிடுகிறான். ஒரு பலசாலியை எளியவன் தாக்க முடியுமா? எளியவன் திருப்பித் தாக்க முடியாத ஒரு விசயத்தை நாம் ஏன் திணிக்கிறோம்? எல்லாம் கலந்தது தான் இந்த உலகம் என்ன சொல்வார்கள். இல்லை என்று நான் மறுக்கவில்லை‌. ஆனால் இங்கு எது அதிகம் தேவைப்படுகிறது? அன்பும் காதலும் தான். அதுதான் அதிகம் தேவை. இயற்கையை கொண்டாடுங்கள். அன்பை கொண்டாடுங்கள். காதலை கொண்டாடுங்கள். இந்த உலகம் அமைதியாக வாழும். இந்த தலைமுறை அமைதியாக பாதுகாப்பாக வாழும். வீட்டில் மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் போதாது. வெளியில் செல்லும்போதும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு நான்கு ஐந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு வயது தான் இருக்கும். அவர்களில் ஒருவன் ஓடி வந்து என்னிடம் இது திரைப்படமா? எனக் கேட்டார். ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, நடிக்கிறாயா? என கேட்டேன். வில்லனாக நடிக்கிறேன் என பதில் அளித்தான். ஏன்? என்று கேட்டபோது, ‘அப்போதுதான் வெட்டலாம். குத்தலாம்’ என பதில் அளித்தான்ஒரு பிஞ்சு மனதில் எந்த மாதிரியான நஞ்சினை விதைத்திருக்கிறோம் என அதிர்ச்சி அடைந்தேன். வன்முறையை.. அவனுக்கு இங்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய பாவம் இல்லையா? மனசாட்சி இல்லையா? எதை விதைக்கிறோம்..? இங்கு நான் நல்ல விசயத்தை சொல்வதற்கு .. புத்தகத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நான் இங்கு வர வேண்டியதாக இருக்கிறது.

நான் இங்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. இது என் மனசின் ஆதங்கம், வேதனை, வலி” என்றார்.

Related Posts