யூ-டியூப் மகப்பேறு!: தடுக்கப்பட வேண்டும் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023-ஆம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும் என்று இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். யூ-டியூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பிரசவ கால தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்தில் ஐ.நா. பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பிரசவ கால தாய்மார்கள் இறப்பு விகிதம் பார்க்கும் போது குறைந்துள்ளது. இருந்தாலும் ஐ.நா நிர்ணயித்த சதவீதத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.
2017-18 காலத்தில் மகப்பேறின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கேரளா, மராட்டியத்திற்கு அடுத்த படியாக இருந்த தமிழகம் இப்போது தெலுங்கானாவுக்கு பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் 2016-17 ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் ஒரு லட்சம் மகப்பேறு களில் கேரளாவில் 13, மராட்டியத்தில் 8, ஆந்திரா தெலுங்கானம் தலா 7 குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 மட்டும் குறைந்துள்ளது. ஆந்திராவுடன் சமநிலையில் உள்ள தமிழகம் விரைவில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படலாம்.
தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023-ஆம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும். இது மிகவும் சவாலானது. ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 108 அவசர ஊர்திகள் அதிகரிப்பது உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
யூ-டியூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதை அகற்றுவதுடன் மகப்பேறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிருக்கான மகப்பேறு கால நிதியுதவி ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
– யாழினி சோமு

