“திறமையானவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும்!”: ‘அன்பில் அவன்’ வெற்றி விழாவில் அசோக் செல்வன்! எண்ணம்!
அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் ஜோடியின் கலக்கலான நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் ‘அன்பில் அவன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் படுஜோராக நடந்துள்ளது! பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசுகையில், ரசிகர்களின் அமோக ஆதரவால் திரையரங்குகளும் காட்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார். விளம்பரப் பணிகளை முன்னெடுத்த கவிதா, படத்தின் மீது மக்கள் காட்டும் அன்பும் விமர்சனங்களும் தங்களுக்கு அசுர பலத்தைத் தந்துள்ளதாகச் சிலாக்சித்தார்.
ஆர்ட் டைரக்டர் மணிகண்டன், மூணாறு செல்லாமல் சென்னையிலேயே பிரம்மாண்ட செட்களை அமைத்து தயாரிப்புச் செலவைக் குறைத்ததைச் சுட்டிக் காட்டினார். காஸ்ட்யூம் டிசைனர் பெனிடா, தனது முதல் பட அனுபவம் ஒரு அற்புதமான கற்றல் பயணம் என்றார். ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மகன் கிரண் ஹெய்ன், படக்குழுவின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் மக்களிடம் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகப் பேசினார்.
கிரியேட்டிவ் புரொடியூசர் ஆப்ரஹாம், இப்படத்தின் வெற்றி வெறும் வசூலை மட்டும் குறிக்காமல், மக்களின் மனங்களை ஆழமாகத் தொட்ட கலாச்சார உரையாடலாக மாறியுள்ளதை வியந்து பாராட்டினார். எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சேது தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
இயக்குநர் கார்த்திகேயன், அசோக் செல்வன் தனக்கு ஒரு வழிகாட்டியாக நின்று இப்படத்தை முழுமையாக்க உதவியதைக் கூறி நெகிழ்ந்தார். மஹா டெல்லி கணேஷ், தன் திரைப்பயணத்தில் இப்படம் திருப்புமுனையாக அமைந்ததற்கு அசோக்கிற்கு நெகிழ்ச்சியுடன் நன்றிகூறினார். கதிர் பாலு, வழக்கமான வில்லன் பாணியை மாற்றி தனக்கு முற்றிலும் புதிய அடையாளத்தைத் தந்த இப்படத்திற்கு நன்றி தெரிவித்தார். நடிகர் ஆகாஷ், தனது குறும்படத்தைப் பார்த்து வாய்ப்பளித்த அசோக்கிற்கும் இயக்குநருக்கும் தன் நன்றியைச் சமர்ப்பித்தார்.
நாயககி ப்ரீத்தி முகுந்தன், படத்தின் வெற்றியை நினைத்துத் தன் கண்ணீர் கலந்த மகிழ்ச்சியையும், திரையரங்கப் படிகளில் நின்றுகொண்டே முழுப் படத்தைப் பார்த்த சிலிர்ப்பான அனுபவத்தையும் அழகாக விவரித்தார்.
இறுதியாகப் பேசிய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அசோக் செல்வன், திறமையான கலைஞர்களுக்குச் சரியான மேடை அமைத்துக் கொடுத்து அழகு பார்ப்பதில்தான் தனக்கு ஆனந்தம் என்றார். படம் தற்போது லாபகரமான நிலையை எட்டியிருப்பதாகக் கூறி, காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்தப் பொக்கிஷத்தைத் திரையரங்குகளில் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கமாறு அனைவரையும் உற்சாகமாக அழைப்பு விடுத்தார்!

