E 1: திரை விமர்சனம்: A 1 சோசியல் த்ரில்லர்!

E 1: திரை விமர்சனம்: A 1 சோசியல் த்ரில்லர்!

சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைப் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை மையமாக வைத்து, சமூக அக்கறையுடன்  உருவாகி இருக்கும் படம். அதே நேரத்தில் சுவாரஸ்யமான த்ரில்லராக கவர்ந்திழுக்கவும் செய்கிறது.

கதை:

ஊரைவிட்டு ஒதுங்கி இருக்கும் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில்… கணவன் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட, மனைவி கைக் குழந்தையுடன் தனியாக இருக்கிறாள்.  இரவு நேரடம்… திடுமென வீட்டுக்குள் நுழைகிறான் ஒருவன்.. தவிர ஒரு பிணம்… எப்படி இருக்கும் அவளுக்கு?

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

 நடிகர்கள்:

சதா நாடார்-குமார் மற்றும் மோனிகா செலினா இருவரும் கதை, இயக்கம், தயாரிப்பு எனப் பல பொறுப்புகளைத் தாண்டி, நடிப்பிலும் தங்களது முழு பங்களிப்பையும் கொடுத்துள்ளனர்.

கொலை காரனாக வரும் சதா நாடார், மிரட்டுகிறார். அதே நேரம் கொலைக்கான காரணத்தை அவர் விவரிக்கும் காட்சியில் நெகிழவும் வைக்கிறார்.

மோனிகா செலினா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.  வீட்டில் கணவன் இல்லாத இரவு.. கைக்குழந்தையுடன் தனியாக கழிக்க வேண்டிய சூழல். பயந்து, நடுங்கி… சிறப்பான நடிப்பு.

இவர்களுடன் பாண்டி, பேபிஷிவ் மற்றும் குழந்தை நட்சத்திரத்தின் பங்களிப்பும் கதைக்குப் பொருத்தமாகவும் எதார்த்தமாகவும் அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு:

எம்.எஸ். மனோகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். அந்த அடுக்குமாடி குடியிருப்பை, பறவைப் பார்வையில் காட்டும்போதே பகீர்  என்கிறது.  அறைக்குள்ளேயே பல காட்சிகள் இருந்தாலும், கோணங்களில் வித்தியாசப்படுத்தி, ரசிக்க வைக்கிறார்.

இசை:

ஜான்சனின் பின்னணி இசை படத்தின் த்ரில்லர் மூட் மற்றும் டென்ஷனைத் திரையில் கூட்டுகிறது. இ.ஜே.  சுதந்திரனின் வரிகளில் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன

எடிட்டிங்:

பரணிசெல்வத்தின் கச்சிதமான எடிட்டிங், அருமை. அடுக்ககத்தின் வெளியில் காருக்கு அருகில் ஒருவர்  தண்ணீரில் முகம் கழுக.. அடுக்ககத்தின் உள்ளே வீட்டில் இன்னொருவர் பாத்ரூமில் முகம் கழுவ..இரண்டையும் மாறி மாறி இயல்பாக இணைத்தது உட்பட பல காட்சிகளில் கவர்கிறார்.

இயக்கம்:

சதா நாடார்-குமார் மற்றும் மோனிகா செலினாக் கூட்டணியின் இயக்கம் சிறப்பு. கதையைத் தேவையின்றி  இழுக்காமல், வெறும் 75 நிமிடங்களில் கச்சிதமாக அடக்கி இருப்பதும் பாராட்டுக்கு உரியது. த்ரில் உணர்வு குறையாமல் இறுதிவரை கதையை நகர்த்திச் சென்ற விதம், இடையில் சொன்ன முக்கியமான சமூகச் செய்தி என இவர்களை பாராட்ட பல விசயங்கள் உண்டு.

மொத்தத்தில் படம் எப்படி உள்ளது?

 குறுகிய நேரத்தில் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையை எந்தவித ஆபாசமும் அதிர்ச்சியும் இன்றி நேர்த்தியாகப் பேச முயன்ற வகையில் ‘E 1’  படம் ரசிக்க மட்டுமல்ல.. பாடமும் கற்றுத் தருகிறது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங்: 3.7/5

Related Posts