‘வேட்டுவம்’: அழிவுக்குப் பிந்தைய புதிய உலகை அறிமுகப்படுத்தும் பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட படைப்பு

‘வேட்டுவம்’: அழிவுக்குப் பிந்தைய புதிய உலகை அறிமுகப்படுத்தும் பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட படைப்பு

‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற திரைப்படங்கள் மூலம் தனித்துவமான திரைமொழியைப் பதிவுசெய்த இயக்குநர் பா.இரஞ்சித், தனது அடுத்தப் படைப்பான ‘வேட்டுவம்’ மூலம் முற்றிலும் வித்தியாசமான களம் நோக்கிப் பயணித்துள்ளார். Neelam Productions மற்றும் Learn and Teach Production ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம், பேரழிவுக்குப் பிந்தைய (Post-Apocalyptic) புதியதொரு உலக பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன சூழலில் வெவ்வேறு குழுக்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் மோதல்களையும் மையமாகக் கொண்டு இதன் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் பின்னணியை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக “World of Vettuvam” என்ற சிறப்பு அறிமுகக் காணொளி வெளியாகியுள்ளது. இந்திய அளவில் கவனத்தைப் ஈர்க்கும் வகையில் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இக்காணொளிக்கு, தமிழ் பதிப்பில் இயக்குநர் பா.இரஞ்சித்தே குரல் கொடுத்துள்ளார். இந்தி பதிப்பில் பங்கஜ் திரிபாதி, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் சௌபின் ஷாஹிர் மற்றும் கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் பின்னணி குரல் வழங்கியுள்ளனர்.படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகள் வழக்கமான சினிமா பாணியில் இல்லாமல், அடிமுறை மற்றும் மால்கம் போன்ற நமது பாரம்பரிய தற்காப்புக் கலைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காகப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் சிறப்புத் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை மேற்கொண்டு இயல்பான முறையில் நடித்துள்ளனர்.

ஆர்யா, தினேஷ், ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கலை இயக்குநராக எஸ்.எஸ். மூர்த்தியும், ஒளிப்பதிவாளராக ரூபேஷ் ஷாஜியும், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே.வும், ஸ்டண்ட் இயக்குநராக திலீப் சுப்பராயனும் பணியாற்றுகின்றனர். படத்தின் திரைக்கதையை எழுத்தாளர் சந்தோஷ் நாராயணனும், வசனங்களை ப்ராங்ளினும் எழுதியுள்ளனர்.அழிவுக்குப் பிறகு உருவாகும் உலகத்தில் மனிதர்களின் அதிகார வேட்கை எப்படி இருக்கும் என்பதைப் பிரம்மாண்டமான ஆக்ஷன் அம்சங்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது படக்குழு. இந்த உலகத்தை அறிமுகம் செய்து ஆர்வத்தைத் தூண்டியுள்ள நிலையில், “அந்தச் சூழலில் வேட்டுவம் யாருடைய கதையாக இருக்கும் என்பதை அறியக் காத்திருங்கள்” எனக் கூறி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

Related Posts