மிரட்டும் ‘கஸ்தூரி வீடு’: டிரெய்லர் விழா நட்சத்திரங்கள் சுவாரஸ்ய பேச்சு!
‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது. தயாரிப்பாளர்கள், பிரபல இயக்குநர்கள் மற்றும் படத்தில் நடித்த நடிகர்-நடிகையரின் பங்கேற்போடு நடைபெற்ற இவ்விழாவில், திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு படக்குழுவினரைப் பாராட்டிப் பேசினர்.
இவ்விழாவில் பங்கேற்றவர்கள் பேசிய விரிவான கருத்துகள்:
-
தயாரிப்பாளர் லயன் டாக்டர் வகேஷ்: ஒரு பிசினஸ் மீட்டிங்கில் இயக்குநரைச் சந்தித்தபோதுதான் கதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அரைக மணி நேரத்தில் அவர் சொன்ன கதையில் இருந்த சுவாரசியமும் நம்பிக்கையும் படத்தைத் தொடங்க வைத்தது. இயக்குநர் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயலாற்றுபவர். பல தொழில்களில் வெற்றி பெற்றது போல திரைப்படத் துறையிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
-
தயாரிப்பாளர் ராணி ஸ்ரீ ரெட்டி: கணவருடன் சேர்ந்து கதையைக் கேட்ட மறுநாளே விரிவான கதையைக் கேட்டோம். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா என முடிவாகி, அடுத்த பத்து நிமிடங்களில் பூஜை போட்டுப் படத்தைத் தொடங்கினோம். பெற்றோரின் ஆசீர்வாதமும் கணவரின் ஆதரவும் வணிகத்தில் ஜெயிக்க உதவியது போல, ஊடகங்களின் ஆதரவோடு திரைப்படத்திலும் வெற்றி பெறுவோம்.
-
ஜி. கே. எம். தமிழ்க்குமரன் (தயாரிப்பாளர் சங்கத் தலைவர்): சினிமா என்பது பெரிய கனவுகளோடு வரும் உலகம். முதல்முறையாகப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் படும் சிரமங்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். சினிமா நல்ல தொழில், அதைச் சரியாகச் செய்ய வேண்டும். ‘மண்டாடி’ படம் பெரிய வெற்றி பெற்று லாபம் கொடுத்தது போல, இந்த ‘கஸ்தூரி வீடு’ திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகள்.
-
இயக்குநர் பவித்ரன்: சினிமாவை நேசித்த உரிமையாளரின் கமலா திரையரங்கில் நடக்கும் இவ்விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் விஜய் ஆனந்த் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் வித்தியாசமான படத்தைக் கொடுத்துள்ளார். புதிய கலைஞர்களுக்கு ஊடகங்களும் மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
-
இயக்குநர் ராஜகுமாரன்: கமலா திரையரங்கில் ‘பூவே உனக்காக’, ‘சூரியவம்சம்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படங்களின் வெற்றி விழா கேடயங்கள் வாங்கிய நினைவுகள் வருகின்றன. இயக்குநர் விஜய் ஆனந்த் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் வந்து அழைப்பிதழ் கொடுத்த கடின உழைப்பாளி. நடிகர் சமுத்திரக்கனி உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற எளிய மனிதர்; அவர் வெற்றி பெற வாழ்த்துகள்.
-
இயக்குநர் பேரரசு: ஆந்திரா, கேரளா என பல மொழிகளில் பேனர் போஸ்டர்களில் இடம் பெறும் பான் இந்தியா நடிகரான சமுத்திரக்கனி, சிறிய படங்களுக்கு ஆதரவு கொடுத்து நடித்திருப்பது பாராட்டத்தக்கது. ஆண்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பெண்கள் பெயரில்தான் வீடு அமையும் என்பதற்கு ‘கஸ்தூரி வீடு’ உதாரணம். பேய்ப் படங்களுக்கும் ஆக்சன் படங்களுக்கும் வித்தியாசமில்லாத சூழலில், ஆன்மீகம், பேய், சென்டிமென்ட், அறிவியல் அனைத்தும் கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

-
இயக்குநர் விஜய் ஆர். ஆனந்த்: ஒரிசாவில் படப்பிடிப்பில் இருந்தபோது தொலைக்காட்சி விளம்பரத்தில் சமுத்திரக்கனியைப் பார்த்து கதையின் நாயகனாக யோசித்தேன். பூரி ஜெகநாதர் கோயிலில் வைத்துதான் ‘கஸ்தூரி வீடு’ தலைப்பும், ஹாரர் கதைக் களமும் உருவானது. ஐம்பதாயிரத்தில் தொடங்கப்பட்ட படம், சமுத்திரக்கனி வந்த பிறகு பெரிய படமாக மாறியது. நாயகி தனுஜா கிளிசரின் இல்லாமல் பயந்து அழும் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். நான்கு மடங்கு செலவு அதிகமானாலும் தரமான படமாக உருவெடுத்துள்ளது.
-
நடிகர் டேவிட் டிட்டோ: இயக்குநர் பட்ட சிரமங்களுக்கு முன்னால் நாங்கள் பட்ட சிரமங்கள் சாதாரணம். நிஜமான பேய் வீட்டில் படப்பிடிப்பு நடந்ததாலும், தத்ரூபமான பேய் மேக்கப்பைப் பார்த்ததாலும் படப்பிடிப்பு தளத்தில் பயமாக இருந்தது.

-
நடிகை தனுஜா: முந்தைய படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்த நிலையில், இப்போது படம் முழுக்க வரும் வாய்ப்பைக் கொடுத்த எனது அப்பாவுக்கு நன்றி. மரியாதைக்குரிய சமுத்திரக்கனியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது.
-
நடிகர் சமுத்திரக்கனி: புதிய படைப்பாளிகளுடன் பயணிப்பது இறைவன் கொடுத்த கொடை. சிறிய படங்களுக்கு யாராவது ஒரு முகமாக நிற்க வேண்டும் என்பதால் இதில் இணைந்தேன். ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரியின் அசுர உழைப்பு திரையில் தெரிந்தது போல, நாம போடும் 100% உண்மையான உழைப்பு திரையில் அரணாக நின்று மேஜிக் செய்யும்.

