“உன் மூஞ்சி கேமராவுல தெரியுமா?”: கேலிகளை உடைத்து திரையில் ஜொலிக்கும் அர்ஜுன் சக்கரவர்த்தி!

“உன் மூஞ்சி கேமராவுல தெரியுமா?”: கேலிகளை உடைத்து திரையில் ஜொலிக்கும் அர்ஜுன் சக்கரவர்த்தி!

புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2: த மிஸ்டரி ஆஃப் மணி’ இணைய தொடர் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகியிருப்பவர் அர்ஜுன் சக்கரவர்த்தி. இத்தொடரில் ‘சுந்தரேசன்’ என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து, தன்னிச்சையான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அவர், கலைத்துறைப் பயணம், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட சிறப்புப் பேட்டி இதோ:

 திரைத்துறைக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

என் தந்தை சினிமாத் துறையில் பணியாற்றுபவர். சிறுவயதில் அவர் படப்பிடிப்பு சம்பவங்களை சுவாரசியமாக விளக்குவார். விடுமுறையில் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று, தொழிலாளர்களின் உழைப்பைப் பார்த்து திரைத்துறை ஆசை வளர்ந்தது. 12-ம் வகுப்பு முடித்து விஸ்காம் படிக்க நினைத்தேன். ஆனால் தந்தை அறிவுரைப்படி சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறேன்.

ஆரம்பக்கட்டத்தில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்?

ஆடிசன்களுக்குச் சென்றபோது என் உருவத்தையும் கருப்பு நிறத்தையும் வைத்து சிலர் கேலி செய்தனர். “உன் மூஞ்சியெல்லாம் கேமராவுல தெரியுமா?” எனக் கேட்டனர். அதுவே எனக்கு வெறியை ஏற்படுத்தியது. கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி, டேஞ்சர் மணியிடம் சண்டைப் பயிற்சி, நடனம், மைம் கலையைக் கற்றுக்கொண்டேன். உடற்பயிற்சி கூடம் சென்று உடலையும் ஆரோக்கியமாகப் பராமரித்து வருகிறேன்.

 ‘வதந்தி சீசன் 2’ வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது?

என் தந்தை வால்வாட்சர் ஃபிலிம்ஸில் பணியாற்றுவதால் அங்கே நெருங்கிய தொடர்பு இருந்தது. புஷ்கர் – காயத்ரி சார் என்னை பார்த்து ஆடிஷன் வைத்தனர். அதில் தேர்ச்சியடைந்ததும், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஆடிஷன் வைத்து சுந்தரேசன் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தார்.

படப்பிடிப்பில் மறக்க முடியாத சம்பவம் எது?

சுந்தரேசன் கதாபாத்திரத்தை தலைகீழாகக் கட்டித் தொங்கவிடும் காட்சி ஒன்று இருந்தது. அதற்காகக் காலையிலிருந்து சாப்பிடாமல் காத்திருந்தேன். இரவு 8 மணிக்குத் தொடங்கி விடியற்காலை 5 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. உடல் வலியால் அழத் தொடங்கிவிட்டேன். ஊழியர்கள் தூக்கிச் சென்று காரில் அமர வைத்தனர். ஒரு வாரம் ஓய்வெடுத்தேன். வலி இருந்தாலும் அதை சுகமாகவே அனுபவித்தேன்.

நீங்கள் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

ஆக்சன் ஹீரோவை விட பசுபதி சார் போல நல்ல நடிகராக அறியப்படவே விரும்புகிறேன். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பொருந்தி நடிக்கத் தயார். நான் பக்கா விஜய் ரசிகன். ‘வதந்தி சீசன் 2’ தொடரை விஜய் சார் பார்த்துவிட்டு என்ன சொல்வார் என்ற பதற்றம் இருக்கிறது.

எதிர்காலத் திட்டங்கள் என்ன?

மக்கள் மனதை மகிழ்விப்பதே என் இலக்கு. சினிமாவில் நடிக்காவிட்டாலும் ஏதேனும் ஒரு துறையில் இயங்கிக் கொண்டிருப்பேன். “தெய்வத்தால் ஆகாது எனினும்” என்ற குறள் போல என் உழைப்பை முழுமையாகக் கொடுப்பேன்.

Related Posts