“உலகத்துல எதுவும் இலசவம் கிடையாது!” : ‘Yourbackers play’ ஓ.டி.டி. விழாவில் எஸ்.வி.சேகர்!
திரைப்படங்களை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், அதனூடே சமூக மாற்றத்தையும் விதைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாக ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளில் படங்களை விநியோகம் செய்து, ‘மனிதம்’ போன்ற படங்களைத் தயாரித்த கிஷோர் ஆதித்யா இதன் நிறுவனர் ஆவார். பயனர்கள் கட்டணமின்றி இலவசமாகப் படங்கள் பார்க்கவும், விரும்பினால் வழங்கும் நன்கொடைத் தொகையை ஆதரவற்றோரின் சேவைக்குப் பயன்படுத்தவும் வழிசெய்யும் இந்தத் தொடக்க விழா, தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
அந்த விழாவில் ஒலித்த அதிரடி மற்றும் சுவாரஸ்யப் பேச்சுகளின் தொகுப்பு:
-
கிஷோர் ஆதித்யா (நிறுவனர்): “கடலுக்குள்ள போய் பிளாஸ்டிக்கை கிளீன் பண்ணி கின்னஸ் சாதனை பண்ணினோம், பிரதமர் மோடியே பாராட்டியிருக்காரு! இப்ப சின்னப் படங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க கட்டணமே இல்லாத இலவச ஓடிடியைக் கொண்டு வந்திருக்கோம். நீங்க கொடுக்குற நிதியிலும் பெரும்பகுதி சமூக சேவைக்குத்தான் போகும். பெண்களுக்கு பாதுகாப்பு தரும் ‘SOS’ வசதி, AI படங்கள்னு அடுத்தடுத்து மாஸ் காட்டப்போறோம்!”
-
ஆர்.கே.செல்வமணி (FEFSI தலைவர்): “ஒரு காலத்துல சினிமாவுக்கு உதவ வந்த ஓடிடி, இப்ப சினிமாவையே ஆட்டிப்படைக்குது! இந்த லாபத்துல 20% தொழிலாளர்களுக்குத் தரேன்னு கிஷோர் சொல்லியிருக்காரு, அதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷம். பெட்டிக்குள்ள முடங்கிக் கிடக்குற 1000 படங்கள்ல இருக்குற நல்ல படங்களை வாங்கி ரிலீஸ் பண்ணுங்க!”
-
எஸ்.வி. சேகர் (நடிகர்): “பொதுவா சில விழாக்களுக்கு வர்றவங்க சம்பந்தமே இல்லாத விஷயத்தைப் பேசி, விழாவோட நோக்கத்தையே பாழாக்கிடுவாங்க. ஆனா நான் விஷயம் சார்ந்ததை மட்டும்தான் பேசுவேன்! 6 வருஷமா சமூக சேவை செய்ற இந்த ஃபவுண்டேஷன், லாப நோக்கமில்லாத ஓடிடியை ஆரம்பிச்சிருக்கிறது ரொம்பவே பாராட்டுக்குரிய விஷயம். ‘கஜானா’ன்னு ஒண்ணை அறிமுகப்படுத்தி, பணம் போடுறவங்களுக்கு வெள்ளை அறிக்கையும் விடுறாங்க. ஆனா நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க, பணம் போடுறவங்களுக்கு திரும்ப பணம் வந்தாதான் அது பிசினஸ்! உலகத்துல எதுவுமே இலவசம் கிடையாது. ஃப்ரீயா தர்றீங்கன்ற ஒரே காரணத்துக்காகவே மக்கள் கண்டென்ட்டை பார்த்திட மாட்டாங்க. தரம் ரொம்ப ரொம்ப முக்கியம்! அதனால நல்ல தரமான கண்டென்ட்டை பார்த்து வாங்கி ரிலீஸ் பண்ணுங்க. பெரிய பெரிய ஓடிடி நிறுவனங்கள் கோலோச்சுற இந்த களத்துல ஜெயிக்கணும்னா, அனுபவசாலிகளோட ஆலோசனைகளைக் கேளுங்க… மக்களின் ரசனையைப் புரிஞ்சுகிட்டு செயல்படுங்க, நீங்க செய்ற நல்ல சேவையே உங்களைக் காப்பாற்றும்!”
-
போஸ் வெங்கட் (நடிகர்): “ஓடிடினாலே பண முதலைகளின் கோட்டை! நெட்ஃபிலிக்ஸ், அமேசான்ல லட்சக்கணக்கான படங்கள் இருந்தாலும் நாம பார்த்து பார்த்துதான் தேர்ந்தெடுக்கிறோம். புதுப்புது ஐடியாக்களோட வர்ற இளைஞர்களின் கற்பனைக்கு வாய்ப்பு கொடுங்க!”
-
மைம் கோபி (நடிகர்): “நடிப்பு சொல்லித் தர வந்த எனக்கு, திடீர்னு தனக்கு வந்த வாய்ப்பையே தூக்கித் தந்தவர் கிஷோர் சார்! எவனோ ஒருத்தன் ஆரம்பிக்கிறதை நாம வேடிக்கை பார்க்காம, முதல் அடியை நாம எடுத்து வைக்கும்போதுதான் அது வரலாறாகுது!”
-
மதியழகன் (தயாரிப்பாளர்): “எல்லாரும் பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வரும்போது, வந்த பணத்தை சேர்த்து வைக்காம சமூக சேவைக்காக இப்படி ஒரு ஓடிடியைத் தொடங்கியிருக்க கிஷோர் சாருக்கு பெரிய வாழ்த்துகள்!”
-
யூகி சேது (நடிகர்): “தியேட்டர்ல சாதாரணமா ஓடின ‘பஞ்சதந்திரம்’ ஓடிடில பிளாக்பஸ்டர்! சினிமா அழகியலே மாறிடுச்சு. 8 வாரம் கழிச்சுதான் ஓடிடில படம் வரணும்னு நிபந்தனை எல்லாம் விதிக்க முடியாது. நல்ல ஜனரஞ்சகமான படங்களை மக்களுக்குக் கொடுங்க!”

