“வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை!”: வேடன் ஆவேசம்!
பொதுவாகத் தனிப்பட்ட முறையில் பரப்பப்படும் வீண் வதந்திகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. ஆனால், இப்போது சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றித் திட்டமிட்டு ஒரு பொய்யானத் தகவல் பரப்பப்படுவதால், உண்மையை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவகம் தொடங்கப்போவதாகவும், அதுகுறித்து நான் அறிக்கை விட்டதாகவும் சில பதிவுகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. இந்தத் தகவல் முற்றிலும் பொய்! இப்படி எந்தவொரு அறிக்கையையும் நான் வெளியிடவில்லை. சவூதியில் மட்டுமல்ல, எந்த வளைகுடா நாட்டிலும் உணவகம் தொடங்கும் திட்டம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. எந்த நிறுவனத்துடனும் கூட்டணி, விண்ணப்பம், தொழில் சார்ந்த நடவடிக்கைகள் என எதுவுமே நடக்கவில்லை.
நான் சவூதி அரேபியாவிற்குச் செல்வது ஒரு மேடைக்கலைஞனாக மட்டுமே! அங்கிருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அன்பான அழைப்பின் பேரிலேயே அந்தப் பயணம் அமைகிறது. என்னை அழைக்கும் ஒவ்வொரு நாட்டின் சட்ட திட்டங்கள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை நான் எப்போதும் முழுமையாக மதிக்கிறேன். அதற்கு எதிராக எந்தக் கருத்தையும், செயலையும் நான் ஒருபோதும் செய்ததில்லை.
இது ஒன்றும் முதன்முறை நடக்கும் சம்பவம் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் எனது கலை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும், மக்களிடன் கிடைக்கும் வரவேற்பும் உச்சத்தைத் தொடும்போதெல்லாம், இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்கள் முளைப்பது தற்செயலானது அல்ல! எனது இசைப்பயணத்தையும், என் மீது நம்பிக்கை வைத்துள்ள ரசிகர்களுடனான பந்தத்தையும், சர்வதேச ஏற்பாட்டாளர்களுடனான தொழில்முற உறவையும் உடைக்க நடக்கும் சதி இது.
நான் எங்கிருந்து வந்தேன் என்பதை ஒருபோதும் மறந்ததில்லை! எந்தப் பின்னணியும் இல்லாமல், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட இடத்திலிருந்து, என்னை நம்பிய மக்களின் ஆதரவால் மட்டுமே இந்த உயரத்தை அடைந்துள்ளேன். அந்த நம்பிக்கைதான் என் மிகப்பெரிய பலம்; அதுவே என் பொறுப்பும் கூட!
ஒரு கலைஞன் தன் சொந்த உழைப்பால் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் செய்யும் சூழ்ச்சி இது. ஆனால், இதுபோன்ற திட்டமிட்ட தாக்குதல்களால் எனது கலைப்பயணத்தை ஒரு அங்குலம் கூடத் தடுத்து நிறுத்த முடியாது.
இந்தப் பொய்களைப் பரப்பிய சமூக வலைத்தளக் கணக்குகளை எனது குழு தீவிரமாகக் கண்காணித்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளது. அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மக்களுக்கு என் அன்பான வேண்டுகோள்: எந்தவொரு தகவலையும் பகிரும் முன், அதன் உண்மைத் தன்மையை ஒருமுறை ஆராய்ந்து பாருங்கள். நேரில் தொடர்பு கொண்டு விசாரித்து, உண்மை அறிந்து எனக்கு ஆதரவாக நின்ற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
இப்படிப்பட்ட கீழ்த்தரமான பிரச்சாரங்களால் எனது இசையையோ, எனது பயணத்தையோ சற்றும் அசைக்க முடியாது.
நமது அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் சந்திப்போம்!
ஜெய் பீம்” – இவ்வாறு வேடன் தெரிவித்து உள்ளார்.

