“மிகப்பெரும் சாதனை!”: ‘ஒன்மேன்’ படம் குறித்து சத்யராஜ் வியப்பு!
‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ போன்ற காத்திரமான திரைப்படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடம் பிடித்த பன்முகப் படைப்பாளி சங்ககிரி ராஜ்குமார். தற்போது உலக சினிமாவே திரும்பிப் பார்க்கும் வகையில், ஒரு திரைப்படத்தின் அத்தனை துறைகளிலும் தனி ஒருவராகச் செயல்பட்டு, ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களிலும் அவரே நடித்து உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான படைப்புதான் ‘ONE MAN’. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு படைப்பாளி உலக அளவில் படைத்துள்ள இந்த அரிய சாதனைப் படத்தை விளம்பரப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வரும் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் நிகழ்வில், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி மற்றும் ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துகளையும் வியப்பையும் பதிவு செய்தனர்.
நிகழ்வில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், “இந்தப் படத்தின் அத்தனை வேலைகளையும் முழுமையாக முடித்த பிறகு, இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களைச் சந்தித்தேன். உலக சாதனை முயற்சியாக உருவாகியுள்ள இப்படைப்பைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஆலோசனையைக் கேட்டவுடன், அவர் சற்றும் தாமதிக்காமல் பிவிஆர் (PVR) நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினார். பிவிஆர் நிறுவனத்தினரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தபோது, ‘உலகிலேயே இதுவரை யாரும் மேற்கொள்ளாத இத்தகைய மகத்தான முயற்சியைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீங்கள் செய்திருக்கிறீர்கள். இதற்கு எங்களின் முழு ஆதரவு உண்டு’ என்று உறுதியளித்தனர்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், பிந்தைய தொழில்நுட்பப் பணிகளுக்காக இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜாவைச் சந்தித்தேன். என் நோக்கத்தின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட அவர், தனது ஸ்டுடியோவின் சாவியையே என் கையில் கொடுத்து, ‘எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இங்குத் தங்கிப் பணியாற்றுங்கள்’ எனப் பெரும் சுதந்திரம் அளித்தார். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டார்.
இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா:
“ஒரு மனிதனே எல்லா வேலைகளையும் செய்து, அவரே அனைத்துக் கதாபாத்திரங்களிலும் நடித்துப் படம் எடுக்கிறார் என்று கேள்விப்பட்டபோது எனக்குள்ளும் ஒரு பெரிய சந்தேகமும் கேள்விக்குறியும் இருந்தது. ஆனால் அவர் உழைத்த விதத்தைப் பார்த்தபோது அப்படியே வியந்துபோனேன். தொழில்நுட்ப ரீதியாக ஒரு படத்தை எந்தளவுக்கு உயர்தரத்துடன் உருவாக்க முடியுமோ, அதே தரத்தில் இப்படத்தைச் செதுக்கியுள்ளார். இதில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் கதாபாத்திரங்களில் அவரே நடித்திருப்பதுதான் அவருடைய முதல் வெற்றி! நானும், லெனின் பாரதி மற்றும் சுப்பிரமணிய சிவாவும் இப்படத்தைப் பார்த்த பிறகு, ஏற்பட்ட ஆச்சரியத்தில் பத்து நிமிடங்கள் எங்களால் பேசவே முடியவில்லை. இது இந்தியத் திறமையின் உச்சம்!”
இயக்குநர் லெனின் பாரதி:
“தமிழ் சினிமாவுக்கு இது மிக முக்கியமானதொரு திரைப்படம். இதற்கு முன் பல பிரம்மாண்டப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றின் பின்னணியில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகப்பெரிய பொருளாதார பலமும் இருக்கும். ஆனால், எந்தவொரு பின்னணியும் இல்லாமல், தனி மனிதனாக நின்று இத்தகைய இமாலய சாதனையைச் செய்திருக்கிறார் ராஜ்குமார். சினிமாவை காட்டுத்தனமாக நேசிப்பவரால் மட்டுமே இது சாத்தியம்! தோழர் ராஜ்குமார் ஒரு மிக நுட்பமான தெருக்கூத்துக் கலைஞர். இப்படத்தைத் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை எப்படியெல்லாம் திறம்படப் பயன்படுத்தலாம் என்ற அவரின் அனுபவத்தை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.”
இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்:
“முன்பு ரோகிணி மேடம் சொல்லித்தான் ‘வெங்காயம்’ படத்தைப் பார்த்தேன். நல்ல விஷயங்களை அழுத்தமாகச் சொன்ன அந்தப் படம் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டபோது, அதை மீண்டும் ‘சேரன் வழங்கும் வெங்காயம்’ என்று வெளியிட்டு வெற்றிபெறச் செய்தோம். சாமானியர்களிடம் சினிமாவைக் கொண்டு சேர்ப்பதும், சாமானியர்களையும் சினிமாவில் பயன்படுத்த முடியும் என்ற நேர்மறையான கர்வம் கொண்டவர் ராஜ்குமார். ‘ONE MAN’ திரைப்படத்தை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே பார்த்துவிட்டேன். இதில் எந்தக் இடத்திலும் ராஜ்குமார் தெரியமாட்டார், கதாபாத்திரங்கள் மட்டுமே தெரியும். சுமார் 70 லட்சம் பட்ஜெட்டிலும் மிகச் சிறந்த படத்தைக் கொடுக்க முடியும் என நிரூபித்துள்ளார். சினிமா மீது அவர் கொண்ட நேசத்திற்காக, ஒருநாள் தமிழ் சினிமா அவரைக் கொண்டாடியே தீரும்!”
நடிகர் சத்யராஜ்
திரைப்படத்தைப் பற்றியும் சங்ககிரி ராஜ்குமாரின் உழைப்பைப் பற்றியும் பெருமிதத்துடன் பேசிய நடிகர் சத்யராஜ், “சங்ககிரி ராஜ்குமாருடன் எனக்கு ஏற்பட்ட நட்புக்கு முக்கியக் காரணம் தந்தை பெரியார் தான். திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் போன் செய்து ‘அய்யாவின் தொண்டர், அவருக்கு உதவுங்கள்’ என்றபோதுதான் இவரைச் சந்தித்தேன். ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படங்கள் பார்த்து ஏற்கனவே பிரமித்துப் போயிருந்தேன்.
ஆனால், இந்த ‘ONE MAN’ படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு ஒரே குழப்பம். ‘ONE MAN’ என்றால் எப்படி? எல்லா வேலைகளையும் ஒரே ஆள் செய்வது எப்படி சாத்தியம் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை! 125 படங்களில் நடித்த பிறகு ‘வில்லாதி வில்லன்’ என்ற ஒரு படத்தை இயக்கியபோதே நடிப்பது எவ்வளவு சுகமானது என்பதை உணர்ந்தேன். அப்படி இருக்கும்போது அத்தனை வேலைகளையும் அவரே செய்தது மிகப்பெரும் சாதனை! பத்திரிகைகளும் ஊடகங்களும் இந்தப் படம் மக்களைச் சென்றடையப் பேருதவி செய்ய வேண்டும். இவர் வெற்றி பெற்றால்தான் இவரைப் போன்ற புதிய முயற்சிகளுடன் ஏராளமான இளைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவார்கள்” என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வின் நிறைவாகப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்காக ‘ONE MAN’ திரைப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த அனைவரும் சங்ககிரி ராஜ்குமாரின் இணையற்ற உழைப்பையும், உலகத்தரத்திலான இம்மாபெரும் முயற்சியையும் எழுந்து நின்று பாராட்டித் தங்களின் வாழ்த்துகளை மழை போல் பொழிந்தனர்.

