“தியேட்டரே திருவிழாக்கோலம்!”: ‘கருப்பு’ வெற்றி விழாவில்உருகிய சூர்யா!
“இப்படி ஒரு அதிரடி ரெஸ்பான்ஸை நான் சமீப காலத்துல தியேட்டர்ல பார்த்ததே இல்லை!”—’கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் தியேட்டர்களில் அலைமோதும் ரசிகர்களின் ஆரவாரத்தைக் கண்டு, நடிகர் சூர்யா மேடையில் உணர்ச்சிப் பெருக்கோடு பேசியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா-த்ரிஷா கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளை அதிரவைத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. கடந்த மே 15 அன்று ரிலீசான இந்த ஆக்ஷன் கடா விருந்து, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் கலந்துகொண்ட ‘நன்றி தெரிவிக்கும் விழா’ சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
அரை மணி நேர முடிவு!
விழாவில் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா, படம் உருவான கதையை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். “பொதுவாக சமீப காலமா ஒரு கதையைக் கேட்டு, அதில் நடிக்க உடனே சம்மதிப்பது இல்லை. ஆனா, இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆர்.ஜே.பாலாஜி இந்த கதையைச் சொன்னபோது, வெறும் அரை மணி நேரத்துலேயே இதில் நடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, இதில் எல்லாமே கச்சிதமா அமைந்திருந்தது” என்றார்.
இயக்குநரின் விஷன்… கருப்பசாமியின் அருள்!
தொடர்ந்து பேசிய அவர், “இது முழுக்க முழுக்க இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் தனித்துவமான விஷன். தியேட்டர்ல இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு அவர் சொன்ன அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்த வெற்றிப் பயணத்திற்கு பக்கபலமாக நின்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், அனைத்து முடிவுகளையும் சரியாக எடுக்க வைத்த கருப்பசாமிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்தார்.
எதிர்பாராத இமாலய வெற்றி!
“ஒரு நல்ல படம் பண்ணனும்னு ஆசைப்பட்டோம், ஆனா மக்கள் இந்த அளவுக்கு ஒரு எதிர்பாராத இமாலய வெற்றியைக் கொடுப்பாங்கன்னு நினைக்கல. தமிழ்நாடு மட்டுமில்லாம, பிற மாநிலங்களிலும், உலகளவிலும் ‘கருப்பு’ அனைவரையும் கவர்ந்திருக்கிறது. நேரில் வந்து நன்றி சொல்வது என் கடமை” என்று சூர்யா நெகிழ்ச்சியுடன் உரை நிகழ்த்தினார்.
ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கரின் இசை கூடுதல் பலமாக அமைந்து, தியேட்டர்களை துள்ளல் போட வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

