கருப்பு: REVIEW: கருப்பு கோட் Vs கருப்பசாமி!
பொதுவாக திரைப்படத்தில் வரும் அம்மன் சாமிகள், தனிப்பட்ட முறையில் பக்தைகள் படும் துயரத்தைப் போக்க, மனித அவதாரம் எடுத்து வரும். இதில் கருப்புசாமி, பொது நோக்கத்துக்காக அவதாரம் எடுத்து வருகிறது.
கதை:
கேரளாவிலிருந்து தன் மகளின் மெடிக்கல் ஆபரேஷனுக்காக நகையோடு வரும் ஒரு ஏழைத் தந்தை (இந்திரன்ஸ்). அந்த நகையைத் திருடர்கள் கொள்ளையடிக்க, போலீஸோ 60 பவுன் நகைக்கு 45 பவுன் மட்டுமே மீட்டுத் தருகிறது. அதையும் உடனே தராமல் கோர்ட்டுக்கு அலைக்கழிக்கிறார்கள். இவர்களின் வழக்கை எடுக்கும் வழக்கறிஞர் ஆர்.ஜே.பாலாஜியோ, நீதியைப் பெற்றுத் தராமல் ஃபீஸ் பிடுங்கி ஏமாற்றுகிறார்.
மனம் உடைந்த அந்த தந்தை, கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பசாமிக்கு மிளகாய் அரைத்துப் பூசி தன் குமுறலைக் கொட்டுகிறார். பக்தனின் குரல் கேட்டு, அநீதியை அழிக்க ‘வேட்டை கருப்பாக’ என்ட்ரி கொடுக்கிறார் சூர்யா! வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சேர்ந்து நடத்தும் மாஃபியாவை, மனித உருவெடுத்து வந்து கருப்பசாமி எப்படி வெளுத்து வாங்கி நீதியை நிலைநாட்டுகிறார் என்பதே படத்தின் அதிரடி க்ளைமாக்ஸ்!
நடிப்பு:
-
சூர்யா (வேட்டை கருப்பு): தியேட்டரைத் திருவிழாவாக மாற்றிய நாயகன்! படம் தொடங்கி 30 நிமிடங்கள் கழித்துத்தான் என்ட்ரி. ஆனால், வந்த பிறகு சின்ன சின்ன ஹியூமர், அதிரடி, முரட்டு எலிவேஷன் என ஒட்டுமொத்த ஸ்கிரீனையும் ஆக்கிரமிக்கிறார். ‘அன்பான ஃபேன்ஸுக்கு’ இது செம மாஸ் கம்-பேக்!
-
இந்திரன்ஸ்: படத்தின் மற்றொரு ஹீரோ! மகள் இறந்து கோர்ட்டில் அவர் அழும் காட்சிகளில் நம் கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிறார். தமிழ் சினிமாவில் இவருக்குப் பெரிய ரவுண்டு இருக்கு!
-
ஆர்.ஜே.பாலாஜி: கத்தியை தூக்காமல் புத்தியைப் பயன்படுத்தி வில்லத்தனம் செய்யும் நெகட்டிவ் ரோலில் செம சாதுர்யம்!
-
த்ரிஷா: வழக்கமான சப்போர்ட்டிங் ரோல் தான் என்றாலும், கச்சிதமாகச் செய்து ஸ்கோர் செய்கிறார். நட்டி நடராஜன் நீதிபதியாக வந்து சிண்டிகேட் அமைக்கும் காட்சிகளில் கச்சிதம்.
இசை:
சாய் அபயங்கர்: படத்தின் மிகப்பெரிய பலமே இவரது இசைதான். பாடல்கள் சிலருக்கு ஏமாற்றத்தைத் தந்திருந்தாலும், பின்னணி இசையில் (BGM) தியேட்டரையே தெறிக்கவிட்டிருக்கிறார்.
-
கருப்பசாமி என்ட்ரி கொடுக்கும் காட்சிகளிலும், முதல் சண்டைக் காட்சியிலும், இடைவேளையிலும் இவருடைய முரட்டுத்தனமான BGM படத்திற்குப் பயங்கர எனர்ஜியைக் கொடுத்து தூக்கி நிறுத்துகிறது!
ஒளிப்பதிவு:
ஜி.கே. விஷ்ணுவின் கேமரா மேஜிக்கில் படம் அனல் பறக்கிறது! சூர்யாவை ‘கருப்பு’ கெட்டப்பில் காட்டிய பிரேம்கள் ஒவ்வொன்றும் மாஸ் ரகம்.
இன்டர்வெல் பிளாக்கில் சூர்யா – ஆர்.ஜே.பாலாஜி சந்திக்கும் காட்சியையும், ஆக்ஷன் பிளாக்குகளையும் பிரம்மாண்டமாகப் படமாக்கி ரசிகர்களுக்குக் காட்சி விருந்து படைத்திருக்கிறார்.
எடிட்டிங்
திரைக்கதை எங்கும் தொய்வில்லாமல் நகர்வதற்கு எடிட்டிங் கச்சிதமாக உதவியுள்ளது. இருப்பினும், சண்டைக் காட்சிகளில் கொ]்சம் கத்திரி போட்டிருக்கலாம்.
கலை இயக்கம்
தற்போது செட் என்பது தெரியாத அளவுக்கு கலை இயக்கத்தில் கலக்குகிறார்கள். இதற்கு ஏ.ஐ. டெக்னாலஜியும் உதவுகிறது. ஆனால் இதில், பார்த்தவுடனேயே அந்தக் காலத்து செட் என தெரியும் அளவுக்கு செட்கள் இருக்கின்றன.
இயக்கம்:
இயக்குநராக ஆர்.ஜே.பாலாஜி சூர்யா ரசிகர்களுக்கும், சாமானிய சினிமா ரசிகர்களுக்கும் சேர்த்தே பெரிய விருந்து படைத்திருக்கிறார்.
“நீதிமன்றத்திற்கு வந்தால் தண்டனை கிடைத்துவிடும் என நம்புகிறோம், ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதே தண்டனைதான்” என்று 30 வருடமாக கோர்ட்டில் எடுபிடியாக இருக்கும் கேரக்டர் பேசும் வசனம் யதார்த்தமான சாட்டை அடி! இடைவேளைக்குக் பின் வரும் ஒவ்வொரு காட்சியும் தியேட்டர் மொமண்ட்ஸ்!
படத்தின் ப்ளஸ்:
-
வேட்டை கருப்பாக சூர்யாவின் வெறித்தனமான ஆட்டம் மற்றும் மாஸ் கம்பேக்!
-
தியேட்டரில் 2 நிமிடங்கள் இடைவிடாத விசிலை அள்ளிய அந்த சர்ப்ரைஸ் எலிமெண்ட்.
-
இந்திரன்ஸின் எமோஷனல் நடிப்பு மற்றும் படத்தின் ஸ்ட்ராங்கான வசனங்கள்.
-
ஏகப்பட்ட சுவாரஸ்யமான ‘ரெஃபரன்ஸ்’ காட்சிகள்.
மைனஸ்:
கலை இயக்கம்.
பைனல் கமெண்ட்:
ஆங்காங்கே சின்னச் சின்ன லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும், முதல் பாதி எமோஷனல், இரண்டாம் பாதி முழுக்க பியூர் கமர்ஷியல் மாஸ் என ‘கருப்பு’ படம் ரசிகர்களுக்கு ஒரு பக்கா திருவிழா கொண்டாட்டம்!
ரேட்டிங்: 4.35

