கருப்பு: REVIEW: கருப்பு கோட் Vs கருப்பசாமி!

கருப்பு: REVIEW:  கருப்பு கோட் Vs கருப்பசாமி!

திரைப்படங்களில் வரும் அம்மன் சாமிகள், தனிப்பட்ட முறையில் பக்தைகள் படும் துயரத்தைப் போக்க, மனித அவதாரம் எடுத்து வரும். இதில் கருப்புசாமி,  பொது நோக்கத்துக்காக அவதாரம் எடுத்து வருகிறது.


கதை:  

கேரளாவிலிருந்து தன் மகளின் மெடிக்கல் ஆபரேஷனுக்காக நகையோடு வரும் ஒரு ஏழைத் தந்தை (இந்திரன்ஸ்). அந்த நகையைத் திருடர்கள் கொள்ளையடிக்க, போலீஸோ 60 பவுன் நகைக்கு 45 பவுன் மட்டுமே மீட்டுத் தருகிறது. அதையும் உடனே தராமல் கோர்ட்டுக்கு அலைக்கழிக்கிறார்கள். இவர்களின் வழக்கை எடுக்கும் வழக்கறிஞர் ஆர்.ஜே.பாலாஜியோ, நீதியைப் பெற்றுத் தராமல் ஃபீஸ் பிடுங்கி ஏமாற்றுகிறார்.

மனம் உடைந்த அந்த தந்தை, கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பசாமிக்கு மிளகாய் அரைத்துப் பூசி தன் குமுறலைக் கொட்டுகிறார். பக்தனின் குரல் கேட்டு, அநீதியை அழிக்க ‘வேட்டை கருப்பாக’ என்ட்ரி கொடுக்கிறார் சூர்யா! வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சேர்ந்து நடத்தும் மாஃபியாவை, மனித உருவெடுத்து வந்து கருப்பசாமி எப்படி வெளுத்து வாங்கி நீதியை நிலைநாட்டுகிறார் என்பதே படத்தின் அதிரடி க்ளைமாக்ஸ்!

நடிப்பு: 

  • சூர்யா (வேட்டைக் கருப்பு):  படம் தொடங்கி 30 நிமிடங்கள் கழித்துத்தான் என்ட்ரி. ஆனால், வந்த பிறகு சின்ன சின்ன ஹியூமர், அதிரடி, முரட்டு எலிவேஷன் என ஒட்டுமொத்த ஸ்கிரீனையும் ஆக்கிரமிக்கிறார்.  ஆனால், கெஸ்ட் ரோல் போல வந்து செல்வதால் ஏமாற்றம் ஏற்படுவது உண்மை.

  • இந்திரன்ஸ்: படத்தின் மற்றொரு ஹீரோ! மகள் இறந்து கோர்ட்டில் அவர் அழும் காட்சிகளில் நம் கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிறார்.

  • ஆர்.ஜே.பாலாஜி: கத்தியை தூக்காமல் புத்தியைப் பயன்படுத்தி வில்லத்தனம் செய்யும் நெகட்டிவ் ரோல். இவரது கக்கச்ச பேச்சு, உடல்மொழி காமெடிக்கு ஓரளவு செட் ஆகும்.  எஸ்.ஜே.சூர்யாவை வில்லன் கதாபாத்திரத்துக்கு போட்டிருக்கலாம்.   ஏன்..  இந்தப் படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் வரும் நட்டியைக் கூட  இந்த பாத்திரத்தில் நடிக்க வைத்து இருக்கலாம்.

  • த்ரிஷா:  இவர் இன்னொரு கெஸ்ட் ஆக்டர். பெரிய  அளவில் நடிப்பதற்கோ.. அட அதுகூட வேணாம்… துள்ளலான டூயட்.. கொஞ்சம்(!) கவர்ச்சி காட்சி.. ஊஹூம் எதுவுமே இல்லை!


இசை:

            ருப்பசாமியின் ஆவேசங்களுக்கு  சாய் அபயங்கர் அளித்திருக்கும் பின்னணி இசை தியேட்டரை அதிரவைக்கிறது. பாடல்களும் ஓகேதான்.


ஒளிப்பதிவு: 

ஜி.கே. விஷ்ணுவின் கேமரா மேஜிக்கில் படம் அனல் பறக்கிறது! சூர்யாவை ‘கருப்பு’ கெட்டப்பில் காட்டிய பிரேம்கள் ஒவ்வொன்றும் மாஸ் ரகம்.

 இன்டர்வெல் பிளாக்கில் சூர்யா – ஆர்.ஜே.பாலாஜி சந்திக்கும் காட்சியையும், ஆக்ஷன் பிளாக்குகளையும் பிரம்மாண்டமாகப் படமாக்கி ரசிகர்களுக்குக் காட்சி விருந்து படைத்திருக்கிறார்.


எடிட்டிங்  

திரைக்கதை எங்கும் தொய்வில்லாமல் நகர்வதற்கு எடிட்டிங் கச்சிதமாக உதவியுள்ளது. இருப்பினும், சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.


 கலை  

தற்போது செட் என்பது தெரியாத அளவுக்கு கலை இயக்கத்தில் கலக்குகிறார்கள்.  இதற்கு ஏ.ஐ. டெக்னாலஜியும் உதவுகிறது. ஆனால் இதில்,  பார்த்தவுடனேயே  அந்தக் காலத்து செட் என தெரியும் அளவுக்கு செட்கள் இருக்கின்றன.இயக்கம்:   

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும்  அதிகார அத்துமீறல்களை சொல்ல விரும்பி இருக்கிறார். அதற்காக பாராட்டலாம். “நீதிமன்றத்திற்கு வந்தால் தண்டனை கிடைத்துவிடும் என நம்புகிறோம், ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதே தண்டனைதான்” என்று 30 வருடமாக கோர்ட்டில் எடுபிடியாக இருக்கும் கேரக்டர் பேசும் வசனம் யதார்த்தமான சாட்டை அடி!

ஆனால்.. ஆனால்…

தட்டையாக மக்களை அணுகும் சட்டங்கள்,  அதன்  ஓட்டைகளை வைத்து அதிகார வர்க்கம் எளிய மக்களை டார்ச்சர் செய்வது குறித்தெல்லாம் இயல்பாகவே அருமையான படங்கள் எடுக்கலாம். ஏன்,  இதே சூர்யா நடித்த “ஜெய் பீம்” அப்படிப்பட்ட படம் தானே!

இதில் ஏன் ‘கடவுளை’ புகுத்த வேண்டும்…  “நீதிமன்றங்களில் நடக்கும் முறைகேடுகளில் இருந்து கடவுள்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்” என்ற கருத்து எவ்வளவு அறியாமை! தவிர, “ஹூம்.. ஆண்டவன் விட்ட வழி” என மக்கள் இதிலும் அடங்கிப்போகும் மனநிலையை உருவாக்குமே!

அதவும், அந்த ‘கருப்பு சாமி’க்கு குறிப்பிட்ட பகுதியில்தான் பவர் என  ஏரியா ஒதுக்கியது, கடவுள் நம்பிக்கை உள்ளோரை கேலி செய்தது இன்னும் உறுத்துகிறது.

நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவகங்களில் வழிபாட்டுத்தலங்கள் இருக்கக்கூடாது என்பது சட்டம். விதி.  இதை அறிவார்ந்த  இயக்குநர் உணரவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

“வெள்ள சாமினனா மன்னிச்சிரும்.. நம்ம கருப்பு சாமி மன்னிக்காது…” என கிறிஸ்துவர்களை குறிவைத்தது ஏன்.. இவரது மூக்குத்தி அம்மன் படத்திலும் இதுபோன்ற காட்சிகள் இருக்கும்.

விஜயகாந்த் நடித்த அலையோசை படத்தில் இருந்து “போராடடா.. ஒரு வாளேந்தடா..” பாடலை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அந்தப் படத்தில் ஹீரோ பாடுவதாக வரும். மக்களுக்கா, பொதுவுடமை கருத்துக்களோடு வரும்.

இதை, இந்தப் படத்தில் ஊரை ஏமாற்றும் வில்லன் நடத்தும், பொய்ப் போராட்டத்துக்கு வைத்திருக்கிறார். இதுவும் பெரும் தவறு.


 படத்தின் ப்ளஸ்:

  • வேட்டை கருப்பாக சூர்யாவின் வெறித்தனமான ஆட்டம் மற்றும் மாஸ் கம்பேக்!

  • இந்திரன்ஸின் எமோஷனல் நடிப்பு மற்றும் படத்தின் ஸ்ட்ராங்கான வசனங்கள்.

மைனஸ்:

      சட்டத்தைவிட கடவுளை நம்பு  என வாய்ப்பே இல்லாத பக்கம் ரசிகர்களை தள்ளி விடுவது..

    “கடவுள்” கருப்பசாமிக்கே  ஏரியா பிரித்தது..

      மக்களுக்கான குரலாக அலையோசை படத்தில்  ஒலித்த  பாடலை,  வில்லனுக்காக பயன்படுத்தியது.

     மோசமான கலை இயக்கம்.

ரேட்டிங்: 2.3/5

Related Posts