கெணத்த காணோம்: விமர்சனம்: பூதம் கிளப்பிய அரசியல் ஆட்டம்!
ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை ஆகிய சிறப்பான படங்களை கொடுத்த இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் இறுதிப் படைப்பு இது.
ஆர்.பி. டாக்கீஸ் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ பேனர்களின் கீழ் ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படம், சமூகப் பிரச்சினை ஒன்றை கவனத்தை ஈர்க்கும் வகையில் சொல்லி இருக்கிறது.
கதைக்களம்: ராமநாதபுரத்தின் வறண்ட கிராமம். திண்டாடுகிறார்கள் மக்கள். ஊரின் தண்ணீர் தேவையை தீர்க்க, அரசு எந்திரம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாங்களே கிணறு தோண்ட நினைக்கிறார்கள். அதில் டைனோர் கிளம்புகிறது!
இதனால் ஏற்படும் பரபரப்பு, அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களே கதை.
நடிப்பு: நாயகனாக நிமிர்ந்து நிற்கும் யோகி பாபு!
‘மண்டேலா’ படத்திற்குப் பிறகு யோகி பாபுவுக்கு இது ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸ். நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்த அவரை, இதில் ஒரு எதார்த்தமான கிராமத்து மனிதராகவும், சீரியஸான ஆளுமையாகவும் பார்க்க முடிகிறது. குறிப்பாக, எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பு பலரையும் கண்கலங்க வைக்கிறது.
இவரது காதலியாக வரும் லவ்லினுக்கு அவ்வளவாக காட்சிகள் இல்லை. புதை பொருள் ஆராய்ச்சியாளராக வரும் ரைச்சல் ரபேக்கா, கிட்டதட்ட வில்லியாக கவர்கிறார்.
இதர கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைப்பாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
இசை: நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, பாடல்களை ரசிக்க வைக்கிறது. தவிர, காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசை படத்துக்கு பலம். குறிப்பாக யோகிபாபுவின் காதல் காட்சி, அவரது தாத்தா இறந்தவுடன் வரும் சோக இசை என நிவாஸ் கவனிக்க வைக்கிறார்.
கலை: சின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் கலை இயக்கத்தில் ஈர்க்கிறார், பி.எல். சுபேந்தர். குறிப்பாக, யோகிபாபுவின் வீடு, அந்த கோயில் ஆகியவற்றை நிஜம் போலவே உருவாக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு: கலை நேர்த்தியை, அற்புதமாக படம் பிடித்து இருக்கிறது வி. தியாகராஜனின் கேமரா. எப்போது இடியும் என்று இருக்கிற வீடு, கிராமத்து கோயில், அகழ்வாராய்ச்சி இடம் என அனைத்தையும் சிறப்பாக படம் பிடித்துள்்ளார்.
இயக்கம்: தனது முந்தைய இரு படங்களைப்போலவே இந்தப் படத்தையும் சமூக அக்கறையுடனும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் அளித்து இருக்கிறார் சுரேஷ் சங்கையா. கிராமத்து மக்கள், குடிநீருக்காக அல்லாடுவது, அரசு எந்திரங்களோ அதைப் பற்றிக் கவலைப்படாமல் அகழ்வாராய்ச்சியில் கவனம் செலுத்துவது என எதார்த்தத்தை ஈர்ப்புடன் சொல்லி இருக்கிறார். வெறும் காதல், ஆடல், பாடல், சண்டை என இல்லாமல் தனது வழக்கமான பாணியில் முத்திரை பதித்து இருக்கிறார் சுரேஷ் சங்கையா.
நிறைகள்:
-
எதார்த்தம்: படத்தில் வரும் உரையாடல்கள், அந்த கிராமத்து நையாண்டி மற்றும் மக்களின் வாழ்வியல் முறை ‘லைவ்’ ஆகப் படமாக்கப்பட்டுள்ளது.
-
தொழில்நுட்பம்: இயல்பான ஒளிப்பதிவு, ரசிக்க வைக்கும் இசை, அளவான நடிப்பு, கச்சிதமான எடிட்டிங்,
-
சமூக செய்தி: தண்ணீரின் முக்கியத்துவத்தையும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையையும் நறுக்கென்று சொல்லியிருப்பது. அதிலும் அவல நகைச்சுவையுடன் சொல்லி ரசிக்க வைத்தது.
குறை:
லாஜிக் மீறல்கள்: கதையின் ஓட்டத்தில் சில இடங்களில் லாஜிக் இடித்தாலும், காமெடிக்காக அதைத் தாண்டிச் செல்ல முடிகிறது.
இறுதித் தீர்ப்பு: ‘எப்போதோ வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்கிறோம் என்கிற பெயரில், இப்போது வாழும் மக்களை வதைக்கலாமா’ என்கிற அவசியமான கேள்வியை எழுப்பி இருக்கிறது இந்தத் திரைப்படம். சமூகஅக்கறையுடன் கூடிய, சுவாரஸ்யமான படைப்பு. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
