வெஞ்சென்ஸ்: திரை விமர்சனம்: 2042-ன் அரசியல் சதுரங்கம்!
கால இயந்திரத்தில் ஏறி 2042-க்கு ஒரு விசிட் அடித்திருக்கிறார் இயக்குனர் ராகுல் அசோக். ஆதரவற்ற மூதாட்டியாக சச்சு கதை சொல்ல, ஒரு இளைஞன் ஆர்வமாகக் கேட்பதுதான் இந்த ‘வெஞ்சென்ஸ்’
“மூலைக்கல் ஆனார் ஒதுக்கப்பட்டவர்” என்ற பழமொழிக்கு ஏற்ப, பள்ளிப் பருவத்தில் ஓரம் கட்டப்பட்ட நாயகி அபர்ணதி, சமூகத்தின் மீதான கோபத்தை உழைப்பாக மாற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி கெத்து காட்டுகிறார். அரசியல்வாதிகளை துச்சமாக மதிக்கும் அவரது நேர்மைக்குக் கிடைப்பதோ சஸ்பெண்ட் ஆர்டர்.
இதற்கிடையில், ‘தாய் நாட்டின்’ (சென்சார் பயத்தில் தமிழ்நாடு என சொல்லாமல் விட்டிருக்கிறார்கள்!) தேர்தலை வெல்லத் துடிக்கும் பிரதமர், அபர்ணதியின் மூளையைத் தன் பக்கம் இழுக்கிறார். நேற்றைய எதிரிகள் இன்று அபர்ணதியின் காலடியில்! அதேசமயம், டெல்லியில் இருந்துகொண்டே பிரதமர் நாற்காலிக்கு ஸ்கெட்ச் போடும் கில்லாடி ஜான் விஜய், தாய் நாட்டின் தேர்தலைத் தன் கைக்குள் கொண்டுவரத் துடிக்கிறார். இந்த அதிகாரப் போட்டியில் அபர்ணதி ஜெயித்தாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
அபர்ணதியின் நடிப்பு செம மாஸ்! கலெக்டர் கெத்தில் ஒரு ஆளுமையாகவே மிரட்டுகிறார். சரவண சுப்பையா சம்பந்தப்பட்ட அந்தச் சிக்கலான காட்சியில் அவர் காட்டியிருக்கும் தைரியம் ‘வேற லெவல்’. வில்லத்தனத்தில் ஜான் விஜய் மிரட்டினாலும், இடையில் கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’ கொடுத்துப் பொறுமையைச் சோதிக்கிறார். காளி வெங்கட் எப்போதும் போல தன் இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.
அபர்ணதிக்கும் ஜான் விஜய்க்கும் ‘மூளைக்கார’ இமேஜ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, முதலமைச்சர் இளவரசு, எதிர்க்கட்சித் தலைவர் லிவிங்ஸ்டன் என மற்ற அத்தனை பேரையும் ஏதோ ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் போலச் சித்திரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சைதன்யா போன்ற நடிகரை பி.ஏ-வாகச் சுருக்கியிருப்பதும் ஏனோ?
எம். எஸ்.பிரபுவின் கேமரா கச்சிதம், கார்த்திக் ராஜாவின் இசை பலம். தற்கால அரசியல் நிகழ்வுகளைத் திறமையாகப் படத்தில் நுழைத்திருக்கும் இயக்குனர் ராகுல் அசோக், க்ளைமாக்ஸில் சச்சுவை வைத்து ஒரு ‘ட்விஸ்ட்’ கொடுத்திருக்கிறார். ஆனால் அது புரியாமல் தியேட்டரை விட்டு வெளியே வருபவர்கள் மண்டையைப் பிடித்துக்கொள்வது நிச்சயம்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இந்தக் கதைக்கு எதற்காக 2042 என்ற ஃபியூச்சரிஸ்டிக் பின்னணி என்பதைப் புரிய வைக்கவில்லை. போதாக்குறைக்கு, பார்ட்-2 வரும் என்று சொல்லி அந்தரத்தில் முடித்திருக்கிறார்கள்.
