காங்கிரஸ் ராஜ்யசபா சீட்: திருச்சியை சேர்ந்த டெல்லிக்காரருக்கு ஜாக்பாட்!

காங்கிரஸ் ராஜ்யசபா சீட்: திருச்சியை சேர்ந்த டெல்லிக்காரருக்கு ஜாக்பாட்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக –  காங்கிரஸ் இடையே கூட்டணி முடிவாகி இருக்கிறது. 28 எம்.எல்.ஏ. சீட்டுகளுடன், ஒரு ராஜ்யசபா எம்.பி. இடமும் பெற்று இருக்கிறது காங்கிரஸ்.

அந்த இடத்துக்கு,கிறிஸ்டோபர் திலக் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளது, பலரது புருவத்தை உயர்த்த வைத்து உள்ளது.

சு. திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ்  உள்ளிட்ட சீனியர்கள் பட்டாளமே காத்திருந்த வேளையில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது  தேர்வு.

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

சுமார் 50 வயதான கிறிஸ்டோபர் திலக், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். தமிழக அரசியலில் பெரிய அளவில் ஊடக வெளிச்சம் இல்லாவிட்டாலும், டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்குமிக்க ஒரு நபராக இவர் உருவெடுத்துள்ளார். தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ராகுல் ‘குட் புக்’கில் இடம்

இவர் ‘திருச்சிக்காரர்’ என்பதை விட ‘டெல்லிக்காரர்’ என்றே கட்சி வட்டாரங்களில் அழைக்கப்படுகிறார். அதற்கு முக்கியக் காரணம்,  டில்லியில் செட்டில் ஆகிவிட்டவர் இவர்.

இதற்குக் காரணம்,  அவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகள்.

  • மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக  இவர் நியமிக்கப்பட்டார்.

  • குறிப்பாக, மணிப்பூர் கலவரத்தின்போது அங்குள்ள கள நிலவரங்களை ராகுல் காந்திக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்ததிலும், ராகுலின் மணிப்பூர் பயணத்தை வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததிலும் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.

  • ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்களில் ஒருவராகத் திகழ்வதே இவருக்கு இந்த “ஜாக்பாட்” வாய்ப்பு கிடைக்க முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.


சர்ச்சைகளும் விமர்சனங்களும்

அரசியல் என்று வரும்போது சர்ச்சைகள் தவிர்க்க முடியாதவை. கிறிஸ்டோபர் திலக்கின் இந்த அதிரடி வளர்ச்சி கட்சிக்குள் சில சலசலப்புகளை உருவாக்கியுள்ளது:

  1. சீனியர்களின் அதிருப்தி: தமிழகத்தில் பல தசாப்தங்களாகக் கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு, டெல்லி மேலிடத்திற்கு நெருக்கமானவர் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

  2. வாரிசு அரசியல் நிழல்: ஒருகாலத்தில் கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர் என்பதால், இது செல்வாக்குள்ள தலைவர்களின் சிபாரிசால் கிடைத்த பதவி என்ற பேச்சும் அடிபடுகிறது.

ஏன் இந்தத் தேர்வு?

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸ் மேலிடம் இவரைத் தேர்வு செய்ததற்கு வலுவான காரணங்கள் உள்ளன. தமிழக காங்கிரஸில் ஒரு ‘புதிய முகத்தை’ அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும், சிறுபான்மையின சமூகத்திற்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதும் மேலிடத்தின் திட்டம். மேலும், நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பேசி, தேசிய அரசியலைத் தமிழகத்துடன் இணைக்கும் பாலமாக இவர் இருப்பார் என நம்பப்படுகிறது.

Related Posts