அனோமி: விமர்சனம்: மர்ம முடிச்சுகளும்… மரண கணக்குகளும்!
மலையாளத்தில் ஒரு வித்தியாசமான அறிவியல் கலந்த த்ரில்லர் படத்தைக் கொடுக்க இயக்குநர் ரியாஸ் மரத் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றதா என்றால் கேள்விக்குறிதான்!
கதை: தடய அறிவியல் நிபுணரான சாரா, காணாமல் போன தன் தம்பியைத் தேடிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், ஒரு பழைய வழக்கினால் தன் நற்பெயரை இழந்த போலீஸ் அதிகாரி ஜிப்ரான் . இவர்கள் இருவரும் ஒரு மர்மமான தொடர் கொலை வழக்கிற்காக ஒன்றாக இணைகிறார்கள். அந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரு விசித்திரமான ‘கணித சூத்திரம்’ (Equation of Death) என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிப்பு:
படத்தில் இரண்டு துருவங்களாக பவானாவும் ரஹ்மானும் செயல்படுகிறார்கள்.
-
பவானா (சாரா): நீண்ட இடைவேளைக்குப் பிறகு பவானாவுக்கு இது ஒரு ‘பவர்புல்’ ரீ-என்ட்ரி. தம்பியைத் தேடும் ஒரு அக்காவாக, அதே சமயம் ஒரு புத்திசாலித்தனமான ஃபோரன்சிக் நிபுணராக அவர் காட்டும் முதிர்ச்சி அபாரம். குறிப்பாக, மர்மமான அந்த ‘ஈக்வேஷன்’ (Equation) பற்றி அவர் துப்பு துலக்கும் காட்சிகள் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் ரஹ்மான் வந்த பிறகு பவானாவின் கதாபாத்திரம் ஓரங்கட்டப்பட்டது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றம்.
-
ரஹ்மான் (ஜிப்ரான்): தோல்வியடைந்த ஒரு போலீஸ் அதிகாரியாக ரஹ்மான் தனது அனுபவத்தை நச்சென்று காட்டியிருக்கிறார். குற்றவாளிகளைத் துரத்தும் போதோ, தனது பழைய கறையைத் துடைக்கப் போராடும் போதோ அவர் காட்டும் உடல்மொழி கச்சிதம்.
ஒளிப்பதிவு:
இந்தத் திரைப்படத்தின் முதுகெலும்பே சுஜித் சாரங்கின் கேமரா வேலைப்பாடுகள்தான். க்ரைம் சீன்களில் அவர் பயன்படுத்தியிருக்கும் அந்த அடர் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களின் ‘கலர் கிரேடிங்’ படத்திற்கு ஒரு சர்வதேசத் தரத்தைத் தருகிறது.
இரவு நேரத் தேடுதல் வேட்டைகளில் கேமரா நகரும் விதம், ஒருவித பதற்றத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது. மழையில் நனையும் காட்சிகள் மற்றும் ஆய்வகக் காட்சிகளில் ஒளியமைப்பை (Lighting) அவர் கையாண்ட விதம் ஒரு ‘நியோ-நாயர்’ (Neo-noir) ஸ்டைலைக் கொடுக்கிறது.
இசை:
‘அனிமல்’ பட புகழ் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் தான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
படத்தின் மர்மத்தை ஒவ்வொரு காட்சியிலும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் மூலமே கடத்தியிருக்கிறார். ஒரு த்ரில்லர் படத்திற்குத் தேவையான அந்த ‘நிசப்தம்’ மற்றும் ‘திடுக்கிடும் சத்தங்களை’ மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். சில இடங்களில் இசை காட்சிகளை விடவும் பலமாக நின்று, நம்மைக் கதையோடு ஒன்ற வைக்கிறது.
எடிட்டிங்:
-
படம் சுமார் 152 நிமிடங்கள் (2 மணி நேரம் 32 நிமிடம்) நீடிக்கிறது. ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லருக்கு இது மிக அதிகம். பல காட்சிகள் தேவையற்று நீட்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் இன்னும் கொஞ்சம் கறாராகக் கத்திரிக்கோல் போட்டிருந்தால், படம் ஒரு ‘ரேசி த்ரில்லராக’ மாறியிருக்கும்.
இயக்கம்:
இயக்குநர் ரியாஸ் மரத் ஒரு மிகப்பெரிய கனவோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. அறிவியலையும் குற்றப் பின்னணியையும் இணைத்து ஒரு புதுமையான கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக அவரைப் பாராட்டலாம்.
ஆனால், திரைக்கதையில் பல இடங்களில் ‘டெரிவேட்டிவ்’ (Derivative) அதாவது மற்ற ஹாலிவுட் படங்களின் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் படம் ‘பர்சனல் ஸ்டோரியா’ அல்லது ‘போலீஸ் இன்வெஸ்டிகேஷனா’ என்பதில் குழம்பி, இரண்டிற்கும் நடுவில் சிக்கிக்கொள்கிறது. மேக்கிங்கில் காட்டிய அந்தத் துல்லியத்தை, கதையைச் சுவாரசியமாக நகர்த்துவதில் அவர் இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.
பார்க்கலாமா?
வழக்கமான மசாலாப் படங்கள் இல்லாமல், புதிதாக முயன்றிருக்கிறார்கள். அதுவும் வெறும் க்ரைம் த்ரில்லர் என்று இல்லாமல், அதோடு அறிவியல் கலந்து கொடுத்து ரசிக்க வைக்கிறார்கள். ஆகவே அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.
ரேட்டிங்: 3.9/5

