நேர்மைப் பணியாளர் பத்மாவுக்கு, ரப்பர் தேசம் அளித்த கவுரவம்!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையை நெகிழ்ச்சியுடன் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 11-ஆம் தேதி தி.நகரின் ஒரு சாலையில் அவர் குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்தபோது, அங்கே கேட்பாரற்று கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். உள்ளே பார்த்தபோது 45 சவரன் தங்கம் மின்னியது. ஒரு துளி தடுமாற்றமும் இன்றி, உடனடியாக அந்தப் பையை அருகில் இருந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். உரியவரிடம் அந்த நகைகள் சேர்ந்தபோது, பத்மாவின் நேர்மை அகிலமெங்கும் பரவத் தொடங்கியது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கினார். நடிகர் ரஜினிகாந்த், தனது இல்லத்திற்கு பத்மாவை அழைத்துத் தங்கச் சங்கிலி பரிசளித்தார்.
பத்மாவின் இந்த நேர்மையின் வீச்சு தமிழகத்தோடுநின்றுவிடவில்லை; கடல்கடந்து மலேசியா வரை எதிரொலித்தது.
அந்நாட்டின் சட்டத்துறை துணை அமைச்சர் மு. குலசேகரன், பத்மாவின் நேர்மையை அறிந்து நெகிழ்ந்தார். நேரில் வந்து பத்மாவை வாழ்த்த நினைத்தார். தவிர்க்க இயலாத பணி காரணமாக, தன் உதவியாளர் வடிவுக்கரசியைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
பத்மா பணியாற்றும் இடத்திற்குத் தேடிச் சென்ற வடிவுக்கரசி, அமைச்சர் மு.குலசேகரன் அன்பாக அளித்த தங்க மோதிரத்தை அளித்தார். அப்போது வீடியோ காலில் பத்மாவிடம் பேசி நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார் அமைச்சர் குலசேகரன்.
இந்த கௌரவத்திற்குப் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான ஒற்றுமை இருக்கிறது.
பத்மாவின் வறுமையை அமைச்சர் குலசேகரன் உணர்வுப்பூர்வமாகப் புரிந்துகொண்டதற்குக் காரணம், அவரும் அத்தகைய எளிய பின்னணியில் இருந்து வந்தவர் தான்.
மலேசியாவில் உள்ள பேராக் மாநிலத்தின் சித்தியவான் நகரில் 1957-ல் பிறந்தார் குலசேகரன். இவரது தந்தை முருகேசன் வீராசாமி மற்றும் தாயார் விசாலாட்சி ஆகியோர் ரப்பர் தோட்டத் தொழிலாளிகள். அவர்களின் ஒன்பது பிள்ளைகளில் ஒருவர்தான் குலசேகரன்.
ரப்பர் தோட்ட வேலை என்பது எளிதானது அல்ல. விடிந்தும் விடியாத பொழுதில், ஏற்ற இறக்கமான மலைப் பாதைகளைக் கடந்து ரப்பர் தோட்டத்துக்குச் செல்ல வேண்டும். கனத்த பால் வாளிகளைச் சுமந்து திரியும் அந்த உழைப்பு, வெறும் வியர்வை அல்ல; அது அந்தத் தொழிலாளர்களின் உதிரம். வியர்வையாக மட்டுமின்றி நேரடியாகவே ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள் வேறு.
இவ்வளவு சிரமமான வேலைக்கு கூலியோ மிகக் குறைவு.
அந்த வறுமை நிலையிலும் அரும்பாடுபட்டு குலசேகரனை லண்டனின் ‘லிங்கன்ஸ் இன்’ நிறுவனத்தில் படிக்க வைக்க அனுப்பினார்கள் பெற்றோர். அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்று, மலேசியாவின் மனிதவள அமைச்சராகப் பணியாற்றி, தற்போது சட்டத்துறை துணை அமைச்சராக உயர்ந்திருக்கிறார் குலசேகரன்.
ஆனாலும் முந்தைய வறிய வாழ்க்கையை அவர் மறக்கவே இல்லை. எளிய மக்களுக்காகவே போராடினார். உதாரணமாக தனது குழந்தைகளை கட்டாய மதமாற்றம் செய்துவிட்டார்கள் என கதறிய தாய்க்கு, சட்டப்போராட்டம் நடத்தி நீதி பெற்றுத் தந்ததைச் சொல்லலாம். இப்படி நிறைய!
குலசேகரனின் இந்த போராட்ட குணமும், எளியவர் மீதான அக்கறையும்தான் இன்று திருவல்லிக்கேணி பத்மாவின் மீது அன்பைப் பொழிய வைத்து இருக்கிறது.
அதனால்தான் தனது உதவியாளர் வடிவுக்கரசியிடம், “தூய்மைப் பணியாளர் பத்மாவை, அவர் பணிபுரியும் இடத்துக்கே சென்று, இந்த அன்பளிப்பை வழங்க வேண்டும்” என்று பணித்திருக்கிறார்.
பெருஞ்செயல் புரிந்த எளியோருக்கு, இன்னொரு எளியோர் அளிக்கும் அன்புப் பரிசுக்கு ஈடேது!

