ஆண் கர்ப்பம்!: வருகிறது அதிரடி வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ !

ஆண் கர்ப்பம்!:  வருகிறது அதிரடி வெப் சீரிஸ்  ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ !

“கர்ப்பகால வலியையும் அதன் வேதனையையும் ஆண்களால் உணர முடியாது” என்பார்கள்.  ஒரு ஆணே கர்ப்பமானால் எப்படியிருக்கும் என்ற அதிரடி கற்பனையோடு களம் இறங்கியிருக்கிறது ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant) வெப் சீரிஸ்! மூவி ஸ்க்ரோல் (Movie Scroll) சார்பில் SD.சோமு தேவ் தயாரிப்பில், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ‘அவள் பெயர் ஐட்டம்’ குறும்படத்தின் இயக்குநர் ஷங்கர் நாகதேவன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்க, ரஞ்சனா, தீபா சங்கர், சந்துரு உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் கைகோர்த்துள்ளது.

சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் நாகதேவன் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். கடவுள் ஒரு ஆணின் தலையெழுத்தை மாற்றி எழுதி, அவன் கர்ப்பமானால் என்னவாகும் என்ற கோணத்தில், நண்பர் வீட்டில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளாராம்.

கர்ப்பத்தைச் சுற்றியுள்ள அரசியலையும், அதன் தீவிரத்தையும் பெண்களைத் தவறாகச் சித்தரிக்காமல், அதே சமயம் காமெடி கலந்து சீரியஸாகப் பேசியிருக்கிறது இந்தத் தொடர். முதலில் படமாகத் திட்டமிடப்பட்டு, பின்னர் 5 எபிசோட்கள் கொண்ட வெப் சீரிஸாக மாறியுள்ள இது, விஷ்ணுமணி வடிவின் ஒளிப்பதிவிலும் வசந்த் தருணின் இசையிலும் பட்டையைக் கிளப்ப வருகிறது. வரும் பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக மூவி ஸ்க்ரோல் யூடியூப் தளத்தில் இதன் முதல் எபிசோட் வெளியாகிறது, அதனைத் தொடர்ந்து வாராவாரம் ரசிகர்களை மகிழ்விக்க டிஎஸ்கே அண்ட் டீம் ரெடி!

Related Posts