இந்தியாவுக்குள் ‘தனி நாடு!’ ஏற்கும் உச்ச மன்றம்?!
எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, முக.ஸ்டாலின் ஆகியோராலேயே அகற்ற முடியாத ஆக்கிரமிப்பு!
தலைப்பைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதைவிட அதிர்ச்சி, ஒரு தனிநாடாக, ஒரு அமைப்பு இயங்குவதாக குறிப்பிட்டது, நாம் அல்ல.. நீதிமன்றம்தான். அதுவும் தமிழ்நாட்டில்தான்.
சாஸ்திரா பல்கலைக் கழகம் என்றால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். “இந்த பல்கலை மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.. இந்த பல்கலைக்கு மத்திய அமைச்சர் வருகை புரிந்தார்..” என்றெல்லாம் அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
சமீப காலமாக, நீதிமன்றங்களில் நில ஆக்கிரமிப்பு புகாரில் இந்த பல்கலை கண்டிக்கப்பட்டதையும் படித்திருப்பீர்கள்.
இந்த ஆக்கிரமிப்பு, இன்று நேற்றல்ல.. சண்முகா பொறியியல் கல்லூரியாக துவங்கிய போதே துவங்கிவிட்டது.
தஞ்சை அருகே திருமலை சமுத்திரம் என்கிற இடத்தில். ஆரம்பிக்கப்பட்டது சண்முகா பொறியியல் கல்லூரி. அப்போதே சுமார் இருநூறு ஏக்கர் வாங்கி இருந்தார்கள். அதில் சுமார் ஐம்பது ஏக்கர் அரசின் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டனர் என புகார் எழுந்தது. பிறகு 31.37 ஏக்கர் என உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நிலம், சிறைத் துறைக்குச் சொந்தமானது. அங்கு, ‘திறந்தவெளிச் சிறைச்சாலை’ அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு, ஏற்கெனவே பிறப்பித்திருந்தது.
1985ல் தாசில்தார் முதன் முதலில் பல்கலைக்கழகத்திற்கு வெளியேற்ற நோட்டீஸ் (Eviction Notice) வழங்கினார்.
ஆனால் பல்கலை அசையவில்லை. ஆக்கிரமிப்பை விட்டு வெளியேறவே இல்லை.
தொடர்ந்து நோட்டீஸ்கள் வழங்கப்பட்டும் பலனில்லை.
ஒரு கட்டத்தில், அந்த நிலத்திற்குப் பதிலாக வேறு இடத்தைத் தருவதாக கூறியது. ஆனால், தமிழ்நாடு அரசு அதனை நிராகரித்தது.
இதனை எதிர்த்துப் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாட.. நீதி மன்றம் பல்கலையை சாட.. அரசு நடவடிக்கை எடுக்கும்போது தடை கிடைக்க.. பிறகு மீண்டும் அரசு நீதிமன்றத்தை நாட.. அரசு, “அந்த இடம் அரசுக்கே சொந்தம். ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்” என்று தீர்ப்பளிக்க..
ஒரு படத்தில் வடிவேலுவிடம் முத்துக்காளை, “செத்து செத்து” விளையாடுவாரே.. அப்படித்தான் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 9ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு,” 4 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
அடுத்த சில நாட்களிலேயே, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட 31.37 ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்கு ‘திறந்தவெளி சிறைச்சாலை’ அமைப்பதற்காகச் சிறைத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இப்போது மறுபடி அதே ட்விஸ்ட்..
உடனடியாக சாஸ்த்ரா பல்கலை, உச்ச நீதிமன்றத்தை நாடியது.
சரி.. இதற்கு முன் நீதிமன்றங்கள், இந்த ஆக்கிரமிப்பு குறித்து என்ன சொல்லி இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
சென்னை உயர் நீதிமன்றம் “ஒரு கல்வி நிறுவனம் சட்டத்தை மதிப்பதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சமூகத்திற்கு நற்பண்புகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆனால், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ‘ஆக்கிரமிப்பாளராகத் தான் செயல்பட்டுள்ளது. நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று தெரிந்தே அதில் கட்டுமானங்களை எழுப்பியது மிகப்பெரிய தவறு. இது சமூக நீதிக்கும் பொது நலனுக்கும் எதிரானது’. பல ஆண்டுகளாக நிலத்தை மீட்கவிடாமல் சட்டப் போராட்டங்கள் மூலம் தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
ஆக்கிரமிப்புக்குப் பதிலாக வேறு நிலத்தைத் தருகிறோம் என்பது அரசு நிலத்தைப் பண்டமாற்று முறைப்படி பேரம் பேசுவது (Bartering government land) ஆகும். இது சட்டத்தின் ஆட்சியைப் பகிரங்கமாக மீறுவதே. இதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறின.
2022ல் உச்ச நீதிமன்றமும், “பல்கலைக்கழகம் என்பது மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் சட்டத்தையும் போதிக்கும் இடமாக இருக்க வேண்டும். ‘ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் சாம்ராஜ்யத்தை உருவாக்குவது’ ஏற்கத்தக்கதல்ல. உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் எங்களுக்குத் தெரியவில்லை.” என்றது.
இதோ… கடந்த 9ம் தேதி சென்னை உயர் நீதிமன்றமும் இதே கருத்தையே வலியுறுத்தியது.
ஆனால் இப்போது, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு “சாஸ்திரா நடத்துவது லாபம் ஈட்டும் தொழிற்சாலை அல்ல; இது ஒரு கல்வி நிறுவனம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலம் இதில் அடங்கியுள்ளது. எனவே, இதை ஒரு வெறும் ஆக்கிரமிப்புப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்” என்கிறது.
அது மட்டுல்ல, “தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறைச் செயலாளர், சட்டம் மற்றும் சிறைத் துறைச் செயலாளர் .மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து சமாதானமான முடிவை எடுக்க வேண்டும்” என்றது. ( இந்த மூவர் குழுவுடன், நடைமுறை செயல்பாட்டுக்காக தஞ்சை மாவட்ட ஆட்சியரும் நான்காவது நபராக இருப்பார்.)
நமது கேள்விகள் இவைதான்:
1. “சாஸ்திரா லாபம் ஈட்டும் தொழிற்சாலை அல்ல.. சேவை செய்யும் கல்வி நிறுவனம்” என்கிறது உச்ச நீதி மன்றம்.
சாஸ்திரா ஆரம்பத்தில் சண்முகா இன்ஜினியரிங் என்று 1984ல் துவங்கப்பட்ட போதே இந்த ஆக்கிரமிப்பை செய்திருக்கிறது. பின்னாட்களில் “சேவை செய்வோம்” என்று நினைத்தா ஆக்கிரமித்தார்கள்..
2 இருக்கட்டும்.. கல்வி நிறுவனங்கள் சேவை செய்பவை. அவற்றின் ஆக்கிரமிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால் இதுவரை கல்வி நிலையங்களின் ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டனவே.. அவற்றைத் அரசு அந்தந்த கல்வி நிறுவனங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமா..
2 சரி.. சாஸ்த்ரா செய்வது சேவையா… அதற்கு ஒரு உதாரணம்…
சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்ந்த சீனிவாச ராவ், வெங்கடராமன், ரமேஷ், சீனிவாச மூர்த்தி ஆகிய நான்கு மாணவர்கள், படிப்பை பாதியிலேயே விட்டுச் செல்ல விரும்பினர். அப்போது பல்கலைக்கழக நிர்வாகம், எஞ்சிய ஆண்டுகளுக்கும் சேர்த்து முழு கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழை வழங்க முடியும் என்று நிபந்தனை விதித்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் எஸ். புஷ்பவனம் தஞ்சை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
“பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பொது அறிவிப்பின்படி, ஒரு மாணவர் வெளியேறினால், அவர் செலுத்திய கட்டணத்திலிருந்து ஒரு சிறிய தொகையை (சுமார் ரூ.1000) மட்டும் கழித்துக்கொண்டு மீதித் தொகையைத் திரும்ப வழங்க வேண்டும். அதை மீறி சாஸ்த்ரா செயல்படுகிறது.
சான்றிதழ் முடக்கம்: மாணவர்களின் அசல் சான்றிதழ்களைக் கட்டணத்திற்காகப் பிணையாக வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றார்.
நுகர்வோர் நீதிமன்றம், “சாஸ்த்ரா செய்வது தவறு. மாணவர்களை படிக்காத காலத்துக்கு கட்டணம் செலுத்த நிர்ப்பந்திப்பது சட்டப்படி தவறு” என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துத சாஸ்த்ரா. “பாதியில் படி்பபை விட்டாலும், முழு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது நிகர்நிலை பல்கலையான எங்கள் பல்கலை விதி. எங்களுடைய விதிகளை மாற்ற நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை” என்றது.
அந்தச் சமயத்தில்தான் உயர் நீதிமன்ற நீதிபதி வாசுகி, “நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கேள்வி கேட்கிறீர்களே, நீங்கள் என்ன தனி நாடா?” என்று சாடினார். (தீர்ப்பு: தீர்ப்பு (WP.(MD) Nos.13993 to 13995 of 2012)
இதிலிருந்து, சாஸ்த்ரா ஒரு வணிக நிறுவனமாகவே செயல்படுகிறது என்பதுதானே தெரியவருகிறது!
அப்படிப்பட்ட சாஸ்திராவின் ஆக்கிரமிப்பை, அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்கிற அர்த்தத்தில் குழுவை அமைத்திருக்கிறது உச்ச மன்றம். அதுவும் தலைமைச் செயலாளர் தலைமையில்.
சண்முகா பொறியியல் கல்லூரியாக 1984ல் துவங்கியபோதே ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது. அப்போதே இதை மீட்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. அப்போது எம்.ஜி.ஆர். முதலமைச்சர். அதன் பிறகு, கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ், இப்போது மு.க.ஸ்டாலின்…
இன்னமும் அழுத்தமாக ஆக்கிரமிப்பு இடத்தில் உட்கார்ந்திருக்கிறது சாஸ்த்ரா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வாசுகி சொன்னதை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது:
“சாஸ்த்ராவே.. நீங்கள் என்ன தனி நாடா?”
– டி.வி.சோமு

