“காலத்தை வென்ற கருணைத் திருமுகம் எம்.ஜி.ஆர்.!”: சைதை துரைசாமி புகழஞ்சலி!
எம்.ஜி.ஆர், பிறந்தநாள் இன்று (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மனிதநேய அறக்கட்டளை தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, சோதனைகளை சாதனைகளாக்கிய மனிதநேயத்தின் பிறந்தநாள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை:
சோதனைகளை சாதனைகளாக்கிய எம். ஜி.ஆரின் பிறந்தநாள். இன்று மனிதநேயம் மலர்ந்த நாள். கருணை பிறந்தநாள். முதலேழு. இடை யேழு, கடையேழு வள்ளல்கள் அரசு செல்வத்தையே அள்ளிக்கொடுத்தார்கள். ஆனால் எம். ஜி.ஆர்., உழைத்து சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் சகமனிதனுக்கு கொடுத்து உதவினார். இளமையில் வறுமையில் வாடியபோதும் மனித நேய சிந்தனையை கடைப்பிடித்த எம்.ஜி.ஆரே எல்லோரையும் விஞ்சிய முதல் வள்ளல் என்று சொல்ல வேண்டும்.
பொழுதுபோக்கு அம்சமான சினிமாவை, சிந்திக்கவைக்கும் அறிவாயுதமாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.
ஞானிகள், அறிஞர்கள், தலைவர்களின் சிந்தனைகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்த்த வாத்தியார். பெண்களுக்கு மரி யாதை, முதியோருக்கு மதிப்பு, நெருக்கடியிலும் நேர்மை, சேவை, மனிதநேயம் போன்ற நல்ல பண்புகளை பாடலாக, வசனமாக, காட்சியமைப் பாக சினிமா மூலம் விதைத்தவர்.
பிரசார பீரங்கி சத்துணவுத்திட்டம், தன்னிறைவுத்திட்டம், தெலுங்குகங்கைத்திட்டம், இடஒதுக்கீட்டுப்புரட்சி, ரேஷன் கடைகள், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை, போட்டித்தேர்வின் மூலம் வி.ஏ.ஓ. பதவியை கொண்டுவந்தவர் என்று எம்.ஜி.ஆரின் புதுமைத்திட்டங்களை எல்லாம் பட்டியலிட ஏடுபோதாது.
எம்.ஜி.ஆர் மலர்பாதையில் நடந்தவர் இல்லை. முட்பாதையில் நடந்து சோதனைகள்,சவால்கள், இடையூறுகளை முறியடித்தவர் என்பதற்கு சான்றாக சில உதாரணங்களை சொல்கிறேன்.
தி.மு.கவின் பிரசார பீரங்கியாக செயல்பட்ட எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அந்த 1967 தேர்தலில் எம்.ஜி.ஆரால் பிரசாரம் செய்ய முடியாதநிலை இருந்தபோது கழுத்தில் சுடப்பட்டு கட்டுப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் போஸ்டர்கள் தமிழ்நாடு முழுக்க ஒட்டப்பட்டன.
அந்த போஸ்டரால் கிடைத்த அனுதாப ஓட்டுக்கள் காரணமாகவே தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அண்ணா தமிழ்நாட்டின் முதல் –அமைச்சரானார். தமிழகத்தின் தலையெழுத்தை ஒரெயொரு போஸ்டரில் மாற்றிக்காட்டியவர் எம்.ஜி.ஆர். இந்த உண்மையை சொன்னவர் அண்ணா.
அதேபோன்று எம்.ஜி.ஆரின், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. படம் வெளிவந்தால் புடவைக்கொள்கிறேன் என்று தி.மு.க.வினர் சவால்விட்டனர். இந்தச்சவாலை எதிர்கொள்ளும் வகையில் ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்ற ‘டைட்டில்’ பாடல் மூலம் பதில் சொன்னார். படத்தின் இறுதிகட்டப்பணிகள் சென்னையில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதும், உடனடியாக மும்பைக்கு சென்று படத்தை முடித்தார் எம்.ஜி.ஆர்.
படப்பெட்டியை எரிப்பதற்கு திட்டமிடப்படுவதை அறிந்ததும், முதலில் போலி பெட்டிகள் அனுப்பப்பட்டன. அதன் பின்னர் நிஜமான படப்பெட்டிகள் அனுப்பி படத்தை திரையிட்டு மெகா வெற்றி பெற்றார்.
1980 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு 6 மாதங்களில் சட்டமன்றத்தேர்தல் நடந்தப்பட்டது. என்ன தவறு செய்தேன். ஏன் ஆட்சியைக்கலைத்தார்கள்? என்று நீதிகேட்ட எம்.ஜி.ஆருக்கு 162 தொகுதிகளில் மக்கள் வெற்றியை பரிசாக கொடுத்தார்கள்.
அதேபோல், 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அச்சமயம் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார், உயிரோடு இருந்தாலும் செயல்படமுடியாது என்றெல்லாம் புரளி கிளப்பினார்கள். ஆனால் , மருத்துவமனையில் படுத்தபடியே 1984 தேர்தலில் 195 தொகுதிகளில் வென்று சரித்திர சாதனை படைத்தார்.
சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது எம்.ஜி.ஆர். அரசியலில் இல்லை. எம்.ஜி.ஆர். கட்சி என்றுதான் தி.மு.காவுக்கு ஓட்டு போட்டார்கள். அதேபோன்று எம்.ஜி.ஆர் கட்சி
இரட்டைஇலை என்றே இன்றுவரை அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.அ.தி.மு.க என்றால் மக்களுக்கு தெரிந்ததெல்லாம் எம்.ஜி.ஆர். இரட்டைஇலை மட்டும்தான்.
அதேபோல் எம்.ஜி.ஆருக்கு தெரிந்ததெல்லாம் மக்கள் நலன் மட்டும்தான். அதனாலே கடைசிவரையிலும் ஒவ்வொரு தேர்தலிலும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கும், வாக்குவங்கியுமுயர்ந்துகொண்டே போனது.
அ.தி.மு.க. தொடங்கிய நாள் முதல் இன்றுவரை லட்சக்கணக்கான சாமானியர்கள் பச்சை மையில் கையெழுத்திடுகின்ற பதவிகளைப் பெற காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். இப்படி வரலாற்றில் சாதனை சரித்திரம் படைத்தவரின் பிறந்தநாளை மனிதநேய நாளாக அ.தி.மு.க.வும். எம்.ஜி.ஆர். பக்தர்களும் தொடர்ந்து கொண்டாடுவோம்.
காலத்தை வென்றவர் எம்.ஜி.ஆர்… காவியமானவர் எம்.ஜி.ஆர்.!” என்று சைதையார் இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
