சல்லியர்கள்: திரை விமர்சனம்
ஐசிடபுள்யூ (ICW) நிறுவனம் சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரிக்க, கிட்டு இயக்கத்தில் சத்தியா தேவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், ‘சல்லியர்கள்’.
வெவ்வேறு கொள்கை, அரசியல் பகை உள்ள நாடுகள் எல்லாம் ஒரே புள்ளியில் இணைந்து, அழித்த இனம் ஈழத் தமிழினம்.
அந்த இனத்துக்காக தனது உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்ப்பணித்த தலைவன் பிரபாகரன்.
அவர்களது போராட்டம் சாதாரணமானதுஅல்ல. உலகமே எதிர்த்து நின்று கொடூர தாக்குதல்களை நடத்திய வேளை.. தங்களது புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை – எந்த வசதிகளும் இல்லாத – தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனப்படும் – சிறிய, மண் சுரங்க அறைகளில்,வைத்து சிகிச்சை அளித்த சம்பவத்தை கண்முன் நிறுத்துகிறது சல்லியர்கள் திரைப்படம்.
சல்லியர்கள் என்பது, போர்ச்சூழலிலும் எதிரிகளையும் பாகுபாடின்றி காப்பாற்றும் செவிலியர்களை குறிக்கும்.
ஆம்… போரில் எதிரிகளால் காயம்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போராளிகளை மீட்க, உயிருக்கு அஞ்சாமல் போராளிகளைக் காப்பாற்றிய, செவிலியர்கள் குறித்த திரைப்படம். விடுதலைப் புலிகள் அமைப்பில், செவிலியர்கள் அணிக்கு சல்லியர்கள் அணி என்றுதான் பெயர்.
இந்தப் படத்தின் நாயகியாக – பெண் மருத்துவராக – வரும் சத்யா தேவி, ஒரு நிஜப் போராளியை கண் முன் நிறுத்தி இருக்கிறார். நாயகியின் தந்தையாக bரும் கருணாஸ், சிங்கள ராணுவ வில்லனாக திருமுருகன், மருத்துவர் செம்பியனாக வரும் மகேந்திரன் என அநைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.
முஜிபூர் ரஹ்மானின் கலை இயக்கம், நம்மை போர்க்களத்துக்குக் கொண்டு சென்று விடுகிறது. ராணுவ இடம், பதுங்கு குழி என அனைத்தையும் அதி சிறப்பாக அளித்து இருக்கிறார்.
அப்துலின் மேக் அப் சிறப்பு.
அவற்றை தனது சிறப்பான கேமராவால் படம் பிடித்து அளித்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவம்.
இவற்றுக்கு இன்னும் மெருகேற்றுகிறது கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் ஆகியோரின் இசை.
சி.எம். இளங்கோவனின் படத்தொகுப்பு கச்சிதம்.
கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர்எஸ்.ஆர்.சரவணனின் சண்டை இயக்கம், போர்க்களத்தையே திரையரங்குக்குக் கொண்டு வந்துவிட்டது.
ஓர் இயக்குனராக அனைத்து விதத்திலும் தன்னை நிரூபித்து இருக்கிறார் கிட்டு. எடுத்துக்கொண்ட கரு, அதை சொன்ன விதம் என அனைத்தும் சிறப்பு.
ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்கிறார். குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்றுகிறார்.அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு சுழற்றுகிறார்.
காட்சிப் படுத்தலின் சிறப்புக்கு இது ஓர் உதாரணம்.
சாதி, மதம், இனம் எல்லாம் விடுங்கள்.. மனிதர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் இது.
ரேட்டிங்: 4.1/5
