‘சிறை’: திரை விமர்சனம்: களப்பாலில் துளி ஹைட்ரஜன் பெராக்சைடு!
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக, ஸ்லலித் குமார் தயாரிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்க, விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் அக்ஷய் குமார், அனிஷ்மா என பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை மறுநாள் (25.12.2025) அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
காவல்துறையும், சட்டத்துறையும் ‘கடமைக்காக’ எப்படி மூர்க்கமாக செயல்படுகிறது, இதனால் அப்பாவிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, ஒரு காவலருக்கும், கைதிக்குமான சம்பவங்களின் வழியே சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள்.
காவலர் கதிரவன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு. அயர்ன் செய்து போட்ட விரைப்பான உடை போல, கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். சில கேள்விகளுக்கு மவுனத்தையும் முறைப்பையும் பதிலாகத் தருவது.. சில சமயங்களில் மனதில் பட்டதை பேசுவது என அறச் சீற்றம் கொண்ட காவலராக நடித்து கவர்கிறார்.
தான் கோர்ட்டுக்குச் செல்லாவிட்டால், கைதியான இளைஞனின் வாழ்க்கையே பறிமோகுமே என பதைபதைக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.
கைதி அப்துல் ரவுப் கதாபாத்திரத்தில் வருகிறார் அறிமுக நாயகன் அக்ஷய் குமார். அட.. முதல் படமா இது?
பரிதாமும், பதற்றமும் கொண்ட முகமும், கண்களும் முதல் காட்சியிலேயே அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. தன்னையே சுற்றி வரும் காதலி மீது பேரன்பு இருந்தாலும், சூழல் கருதி தயங்குவது, தன் தாயை ஒருவன் அடித்துவிட்டான் என்றதும் ஆக்ரோசமாவது, நீதிபதியிடம் கதறுவது என சிறப்பாக நடித்து இருக்கிறார்.
நாயகியின் அக்கள் கணவன் கதாபாத்திரத்தில் வருகிறார் ரகு இசக்கி. கொடூர குடிகார கணவனை கண்முன் நிறுத்துகிறார். குழந்தை இல்லாத விவகாரத்தில் மனைவி ஆதங்கப்பபட, அப்போது இவர் வெளிப்படுத்தும் ஆத்திரம், நாயகனின் தாயாரைத் தாக்க முற்படும் ஆவேசம் என, ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகப் போகிறார். இது இவருக்கான வெற்றி. தமிழ்த் திரையுலகில் சரியான வில்லன் இல்லாத குறையை போக்கிவிடுவார்!
நாயகி அனிஷ்மாவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஒரு புறம் தந்தையை கொன்ற காதலன், இன்னொரு புறம் காதலை எதிர்க்கும் குடும்பம்.. இரண்டுக்கும் நடுவில் உண்மை அறிந்து காதலனுக்காக நிற்கும் அவரது கதாபாத்திரம் ஈர்க்கிறது. வெறும் டூயட் ஹீரோயினாக இல்லாமல், சிறப்பாக நடிக்க பல வாய்ப்புகள்.. அவை அத்தனையையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் ரம்யா சுரேஷ், நாயகியின் அக்காவாக வரும் பானு, காவலராக வரும் ஹரி சங்கர், ஆனந்ததம்பிராஜா என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே ஓடி வரும் பின்னணி இசை… அற்புதம்!
மதேஷ் மணிக்கத்தின் ஒளிப்பதிவு அருமை. கிராமம், சிறை, பேருந்து காட்சி என ஒவ்வொன்றையும் நாம் நேரில் பார்ப்பது போல உணரவைக்கிறார்.
பிலோமின் ராஜின் எடிட்டிங் சிறப்புதான். நாயகனின் காதல் பிளாஷ்பேக்கில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.
‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ், இப்படத்தின் கதையை எழுதி, இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியுடன் இணைந்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்.
இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை இரண்டும் செயல்படும் விதம்.. அதனால் அப்பாவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை மிக அழகான கதையாக – மனதில் தைக்கும்படி – சொல்லி இருக்கிறார்கள்.
பாராட்டுகள்.
தவிர, கைதி அப்துல் ரவூப் முஸ்லிம். அதனால, துப்பாக்கியில லோட் பண்ணி எடுத்து வந்தேன் என ஒரு காவலர் சொல்ல.. காவல் அதிகாரி, “ஈழத்தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டது இதே பெயரைக் கொண்ட தமிழர்தான். மதத்தை ஏன் பார்க்கிறீர்கள்..” என விளாசுவது அருமையான காட்சி. அவசியமான காட்சி.
அதே நேரம், அந்த கைதி கதாபாத்திரம் “தப்பிக்க நினைச்சேன்.. ஆனா என் பெயரை வச்சு இங்கே வாழ முடியுமா என்ற பயம் வந்துருச்சு, நான் முஸ்லிம் என்பதால் அரசு வழங்கும் கட்டணமில்லா வழக்கறிஞர்கள் என் வழக்கை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்பதெல்லாம் இல்லாத அதீதம்.
கதைக்களம் தமிழ்நாடு. இங்கே அப்படியான சூழல் இல்லை.
பாதிக்கப்படும் இஸ்லாமியர்களுக்காக அந்த மத வழக்கறிஞர்களே வாதாடுவது என்பது மிகக் குறைவு.
தவிர.. பாபர் மசூதி இடிப்பின்போது, அதை எதிர்த்து போராடியவர்களில் தமிழ்நாடு மதம் பார்க்கவில்லை.. இந்த போராட்டங்களில் சிறைப்படுத்தப்பட்டவர்களின் பட்டியலை தேடி எடுத்துப் பார்த்தால் இது புரியம்.
ஏன்.. இப்போது திருப்பரங்குன்றத்தில் இந்து தீவிரவாதிகள் பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். இதை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்புவதிலும், போராட்டம் நடத்துவதிலும் தமிழ் நாடு மதம் பார்ப்பதில்லை.
அது மட்டுமல்ல.. இந்த விவகாரத்தில், இந்து ப்ரியர்களின் சூழ்ச்சிகளை முறையடிக்க சட்டப் போராட்டம் நடத்தி வருபவர், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன்.
அங்கே தர்கா தரப்பில் நியாயங்களை, வழக்காடு மன்றத்தில் எடுத்து வைப்பவர்கள் மோகன், வனஜநாதன் உள்ளிட்ட வழக்குறைஞர்கள்.
இன்னொரு விசயம்… தி காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி என இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் (பொய்ப்) படங்களை எதிர்ப்பதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருந்தது.
இந்த நிலையில், “முஸ்லிம் பெயரோட வாழ பயமா இருக்கு” என்பதை அழுத்தமாக பதிய வைக்கும் முயற்சி எதிர் வினையை உருவாக்கும்.
இஸ்லாமிய மக்களுக்கு, “தமிழ் நாட்டிலும் இதுதான் நிலையா” என்கிற ஆதங்கத்தை ஏற்படுத்தும்.
இன்னொரு பக்கம், இந்து ப்ரியர்கள், “பார்த்தீர்களா.. இல்லாததை எல்லாம் சொல்கிறார்கள்” என்று பேசுவதற்கு வாய்ப்பாகும். இதுவும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்..
ஆம்.. இல்லாத பிரச்சினையை கிளப்பிக்கொண்டே இருந்தால், இருக்கும் பிரச்சினை கவனத்தை ஈர்க்காமல் போய்விடும்.
ஆகவே, ஈழத்தமிழருக்காக உயிர்த் தியாகம் செய்த அப்துல் ரவுப் பற்றி சொன்னதோடு நிறுத்தி இருக்கலாம்.
தவிர காவல்துறை, சட்டத்துறையின் சரியில்லாத நிலைபாடுகளால், பாதிக்கப்படுவது அனைத்து சாதி, மத, இன மொழி மக்களும்தான்.
கடந்த (2024ம்) வருட கணக்குப்படி, இந்தியா முழுதும் நான்கு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெறும் விசாரணை கைதிகளாகவே அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களது வழக்குகள் நகரவே இல்லை. இதனால் பலர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்குமோ அந்த காலத்தை விட அதிக நாட்கள் சிறையில் வாடுகிறார்கள்.
அதே நேரம், மதுரை சி.பி.எம். கவுன்சிலர் லீலாவதியை கொன்றவர்களுக்கு முன் விடுதலை அளித்தது திமுக அரசு.. தர்மபுரியில் பேருந்தைக் கொளுத்தி மூன்று மாணவிகளைக் கொன்ற அதிமுகவினருக்கு முன் விடுதலை கொடுத்தது அதிமுக அரசு.
ஒன்றிய முன்னாள் அமைச்சர் ராஜீவ் காந்தியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சிறையில் அடைத்தன அரசுகள். நீதிமன்றம் அவர்களை விடுவித்தும் கூட, “இலங்கையைச் சேர்ந்தவர்கள்” என்பதைச் சொல்லி, இன்னும் திருச்சி சிறையில் (சிறப்பு முகாம்!) அடைத்துள்ளன அரசுகள்.
ஆக விசாரணை கைதிகளாகவே வருடக்கணக்கில் அடைபட்டு கிடப்புது, விடுதலை அடைந்தும் வெளியே செல்ல முடியாத நிலை.. ஆனால் கட்சி சார்ந்த குற்றவாளிகளுக்கு முன் விடுதலை.
இதில் சுட்டிக்காட்ட வேண்டியது அரசியல் கட்சிகளின் நடவடிக்கையை. அதற்கு தைரியம் இல்லை. ஆகவே பொத்தாம் பொதவாக, “தமிழ்நாடே மோசம்.. வழக்கறிஞர்களே மோசம்” என்று இந்தப் படத்தில் சொல்கிறார்கள்.
பொதுப் பிரச்சினையை மதத்தோடு தொடர்பு படுத்துவது (தமிழ்நாட்டில்) இல்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். தவிர படத்தின் நல்ல நோக்கத்தை சிதைக்கும்.
தூய பாலில், ஹைட்ரஜன் பெராக்சைடை (H₂O₂) கலப்படம் செய்வோர் உண்டு. இதைக் கலந்தால் பால் கூடுதல் வெண்மை நிறம் பெறும், பாலின் அடர்த்தி அதிகரிக்கும்.
ஆனால், உடலுக்குக் கேடு. இந்த, கைதியும் தூய பால் போ நன்றாகவே இருக்கிறது. அதில் கலப்படம் செய்வது, சமுதாயத்துக்குக் கேடு.
ஆகவே, ஈழத்துக்காக தன்னுயிரை ஈந்தஅப்துல் ரவூப் பற்றி குறிப்பிடும் காட்சி இருக்கட்டும். மற்ற இரு வசனங்களை நீக்க வேண்டும்.)
மற்றபடி அவசியமான, சிறந்த படமாக இருக்கும் சிறை வெற்றிபெற வாழ்த்துகள்.
(மைனா, பருத்தி வீரன் படங்களை நினைவுபடுத்துகிறது.. ஆனால் இநதப் படத்தின் மெஸேஜ் வேறு என்பதால் உறுத்தவில்லை..)
– டி.வி.சோமு

