“கல்லை சாமியாக்கி பூஜை… மூட நம்பிக்கை!”: உயர் நீதிமன்றம் கண்டிப்பு
“அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் உள்ளிட்ட மத சின்னங்கள் எவையும் இருக்கக்கூடாது” என்பது அறிஞர் அண்ணா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு. ஆனால் இன்றும், அரசு அலுவலகங்கள் பலவற்றில் கடவுளர் சின்னங்கள், குறியீடுகள் இருப்பதைப் பார்க்கிறோம். அதே போல அரசு அலுவலக வளாகத்தில் வழிபாட்டுத்தலங்கள் இருப்பதையும் காண்கிறோம்.
காவல் நிலையம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் பலவற்றில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதும் வழக்கமாக உள்ளது.
இதை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது, கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம்.
இன்னொரு பக்கம், ஆயுத – சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள், சாலை வரை வந்துவிட்டன.
ஆம், இந்த பண்டிகையை சாலைப் பணியாளர்கள், சாலை ஓரத்தில் இருக்கும் எல்லை கற்களை வைத்து கொண்டாடுவதையும் பார்க்கிறோம்.
‘கல்’ என்றவுடன் இன்னொரு வழக்கு நினைவுக்கு வந்தது.
” சாலையோரம் கல்லை நட்டு வைத்துவிட்டு, துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சாமி சிலை என்று கூறும் மூட நம்பிக்கை தொடர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்தது.
கடந்த வருட நிகழ்வுதான் இது.
செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர், சக்தி முருகன். இவரது நிலத்துக்கு எதிரே குமரேசன் என்பவர் ஒரு கல்லை வைத்து இருக்கிறார். பிறகு அதை சாமி என்று சொல்லி பூஜை செய்ய ஆரம்பித்து இருக்கிறார்.
இந்த கல்லை எடுக்க வேண்டும் என சக்தி முருகன் சொல்லியும் குமரேசன் கேட்கவில்லை. இதையடுத்து அந்தப் பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அங்கோ, “| இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது” என ஒதுங்கிவிட்டனர்.

இதையடுத்து சக்தி முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ” மனுதாரருக்குச் சொந்தமான சொத்தின் எதிரே கல் நடப்பட்டிருப்பது தெரிகிறது. அந்தக் கல்லை ஒரு பச்சை துணியால் மூடி, அதை சிலை என்று அழைக்க ஒருவரால் முயற்சி செய்யப்படுகிறது. சாலையில் ஒரு கல்லை நட்டு, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது.
அதிர்ஷ்டவசமாக கல்லா, சாமி சிலையா என்று முடிவு செய்யும் அதிகாரம் இந்திய நீதித்துறைக்கு வழங்கப்படவும் இல்லை. அதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில், எந்த நீதிமன்றமும் திருச்சபைக்கான அதிகார வரம்பைப் (ecclesiastical jurisdiction) பயன்படுத்துவதில்லை. இந்த வழக்கை விசாரிப்பது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல்.
ஒரு வாரத்துக்குள் கல்லை அகற்ற வேண்டும். அதற்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இப்படி உத்தரவிட்டவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி னந்த் வெங்கடேஷ்.
தற்போது திருப்பரங்குன்றம் மலையில் உள்ள எல்லை கல்லை முன்வைத்து, அது கார்த்திகை தீபம் ஏற்றும் கல் என்கிற வாதம் வைக்கப்படுகிறதே.. அதை வைத்து வழக்கு நடந்து தீர்ப்புகளும் அளிக்கப்படுகிறதே…
இந்த நிலையில் பழைய வழக்கை நினைவுபடுத்துவது நமது கடமை அல்லவா.. அதுதான்!
– டி.வி.சோமு

