நிர்வாகம் பொறுப்பல்ல: திரை விமர்சனம்
டி ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ் கார்த்தீஸ்வரன் இயக்கி நடிக்க, உடன் ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், நிர்வாகம் பொறுப்பல்ல.
இசை: ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு: என் எஸ் ராஜேஷ்
நாயகன் கே, பலே கில்லாடி. ஆன்லைன் மோசடி, ரூ.250க்கு செல்போன் தருவதாக ஏமாற்று என நம்பர் 2 நாயகனாக வலம் வருகிறார். அவரது பித்தலாட்டங்கள் என்னென்ன, இறுதியில் அவர் பிடிபட்டாரா என்பதே கதை.
கே என்கிற மெகா கில்லாடி கதாபாத்திரத்தில் கார்த்தீஸ்வரன் நடித்து உள்ளார்.
எதிர்மறை கதாபாத்திரம் என்றாலும், அவரது ஜாலியான நடிப்பு ஈர்க்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ஸ்ரீநிதி இளமையான அழகான காவல் அதிகாரி. நடிப்பிலும் குறையில்லை.
அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, பைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாறும் கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன். பரிதாபத்தை வரவழைக்கிறார்.
ஆதவன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை ஓகேதான்.
என் எஸ் ராஜேஷின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
நடிகராகவும் இயக்குனராகவும் எஸ் கார்த்தீஸ்வரன் தனது முத்திரையைப் பதித்து இருக்கிறார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.. நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள்.
பார்த்து ரசிக்க மட்டுமல்ல.. பாடம் கற்கவும் வேண்டிய படம்.

