குற்றம் தவிர்: திரை விமர்சனம்

குற்றம் தவிர்: திரை விமர்சனம்

பி. பாண்டுரங்கன் ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் தயாரிக்க, கஜேந்திரா இயக்கத்தில், ரிஷி ரித்விக் நாயகனாக நடித்துள்ள படம், குற்றம்தவிர்.கணவனி இழந்த வினோதினிக்கு, தனது பெண் குழந்தையின் எதிர்காலமும், தம்பி ரிஷி ரித்விக்கை காவல்துறையில் பணிக்கு சேர வேண்டும் என்பதுதான் லட்சியம். சாலையோரத்தில் இட்லி கடை வைத்து நடத்துகிறார். அந்த வருமானத்தில் தம்பியை ஆளாக்குகிறார். சிறு வேலை கூட செய்ய விடாமல், பாசத்தைப் பொழிகிறார்.

ரிஷி ரித்விக்கும் காவல்துறையில் சேர தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அக்காவுக்கும் உதவியாக இருக்கிறார்.

இந்த நிலையில் அக்கா வினோதினிக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறார். இதயத்தில் பிரச்சினை இருக்கிறது உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும் என்கிறார்கள். தம்பி ரிஷிக்கு தெரிந்தால் வருத்தப்படுவார் என்பதால், அவருக்குத் தெரியாமல் மருத்துவமனையில் சேர்கிறார்.

அங்கே பரிதாபமாக இறக்கிறார்.

அவரது இறப்பில் மர்மம் இருப்பதை அறிகிறார் தம்பி ரிஷி. அதன் பிறகு அதிரடி அவதாரம் எடுக்கிறார். அவர் செய்தது என்ன என்பதே மீதிக்கதை.

நாயகன் ரிஷி ரித்விக், ஆக்ஷன் காட்சிகளில் தூள் பறத்துகிறார். அதே போல காதல் காட்சிகளிலும், வில்லன்களிடம் எகிறும் காட்சிகளிலும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.அவரது காதலியாக வரும் நாயகி ஆரத்யாயும் இயல்பாக நடித்து உள்ளார். காதல், சோகம், ஆவேசம் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகனின் அக்காவாக வரும் வினோதினி வழக்கம்போல் இயல்பான நடிப்பை அளித்தி இருக்கிறார். உடல் நலம் முடியாத நிலையை முகபாவத்திலேயே காண்பிக்கிறார். தம்பி மீதான பாசத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

சிறுமி சாய் சைந்தவி யும் சிறப்பாக நடித்து உள்ளார்.

டாக்டராக வரும் ஆனந்த் பாபு, அரசியல்வாதியாக வரும் சித்தப்பு சரவணன், ரவுடியாக வரும் சாய் தீனா, இதர கதாபாத்திரங்களில் வரும் காமராஜ், சென்ட்ராயன் உள்ளிட்டோரின் நடிப்பு ஓகே தான்.

ஶ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் அதே ரகம்தான்.

ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஆனாலும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கஜேந்திரா. மருத்துவமனையில் நடக்கும் மர்ம கொலை, உடல் உறுப்புகள் திருட்டு, மாற்று அறுவை சிகிச்சை, அரசியல்வாதிகளின் ஊழல் என அதிரடி நரம்பு முடிச்சுக்களைப் போட்டு கவர்கிறார். அதே நேரம், திரைக்கதையை இன்னும் இறுக்கி இருக்கலாம்.

ஆனாலும் படத்தைப் பார்க்கலாம்.

Related Posts