சரீரம்: திரை விமர்சனம்
ஜி.வி.பி. பிக்சர்ஸ் சார்பில், ஜி.வி. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், சரீரம்.
காதலுக்காக நாக்கை அறுத்துக்கொள்வது உள்ளிட்ட விசயங்களை திரையில் பார்த்து இருக்கிறோம். ஏன், உயிரை இழப்பதை திரையிலும், நிஜத்திலும் பார்த்திருக்கிறோம். அதையெல்லாம் கடந்த ஒரு காதல் ஜோடியைப் பற்றிய கதை இது.
கல்லூரியில் படிக்கிறார் ஹீரோ தர்ஷன் ப்ரியன். அதே கல்லூரியில் படிக்கிறார் ஹீரோயின் சார்மி விஜயலட்சுமி. இருவருக்கும் காதல். காதல் என்றால் அப்படி ஓர் காதல்.
நாயகி, வீட்டுக்கு ஒரே பெண். பெரும் கோடீசுவரர். ஆகவே, அவரை திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் என துடிக்கிறார் தாய் மாமன் எல்.மனேஜ். ஆகவே, நாயகியின் காதலனை அடித்து துவம்சம் செய்து ஆற்றில் தூக்கி வீசுகிறார். அவர் இறந்துவிட்டார் என நாயகி விசம் குடித்து விடுகிறார்.
பிறகு, இருவரும் பிழைத்துவிடுகிறார்கள். குடும்பத்தினரிடமிருந்து தப்பிக்க ஒரு வழியைச் சொல்கிறார் நாயகி. அதிர்ச்சிகரமான அந்த முடிவை நாயகனும் ஏற்கிறார்.
அந்த அதிர்ச்சிகரமான முடிவு எது.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதே சரீரம் படத்தின் கதை.
அறிமுக நாயகன் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாக நடித்து இருக்கிறார், தர்சன்ப்ரியன். காதல் காட்சிகளில் மட்டுமின்றி மோதல் காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார்.
நாயகி சார்மி விஜயலட்சுமியும் சிறப்பாக நடித்து உள்ளார். நாயகனிடம் காட்டும் காதல், தந்தையிடம் வெளிப்படுத்தும் நேசம் என அனைத்து உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தான் கர்ப்பமாக
இருப்பதை அறிந்தவுடன், அவர் எடுக்கும் அதிரடி முடிவு எதிர்பாராதது. அந்த காட்சியில் உணர்ச்சி மயமாக நடித்து கவர்கிறார்.
நாயகியின் தாய் மாமனாக வரும் வில்லன் ஜே.மனோஜ். அதீத சிறப்பாக நடிக்கிறார். கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். மற்றபடி, வில்லனுக்கேற்ற உடல் தோற்றம், நடை உடை பாவனை இருக்கிறது.
நாயகியின் தந்தையாக வரும், புதுப்பேட்டை சுரேஷ், தாயாக வரும் கௌரி, நீதிபதியாக வரும் பாய்ஸ் ராஜன், மருத்துவராக வரும் ஷகிலா, வழக்கறிஞர்களாக வரும் மதுமிதா மற்றும் மிளா, இன்ஸ்பெக்டராக வரும் ஜி.வி.பெருமாள் மலைச்சாமி உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை அளித்து உள்ளனர்.
பாரதிராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.
கே.டோர்னலா பாஸ்கர் மற்றும் பரணி குமார் இரட்டையர்களின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். குறிப்பாக மாமல்லபுர காட்சிகள் கூடுதலாக ரசிக்க வைக்கின்றன.
ஜே.மனோஜின் நடனம், தவசி ராஜின் சண்டைப் பயிற்சி இரண்டுமே சிறப்பு.
தற்போது, காதல் என்பது ஈசல் வாழ்க்கை ஆகிவிடுகிறது. அன்றே துவங்கி அன்றே முடிவது அதிகமாகி விட்டது. இந்த நிலையில் உன்னதமான காதலை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஜி.வி.பெருமாள். நாடக பாணி காட்சிகள், சில இடங்களில் காட்சிகள் நீள்வது என சில குறைகள் இருந்தாலும், இது அற்புதமான காதல் கதை என்பதில் சந்தேகம் இல்லை.
இளைஞர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசித்துப் பார்க்கலாம்.
