கண்ணகி சிலை பீடம் சேதம்!: நாட்டிற்கு தீய அறிகுறியா? : பிரபல ஜோதிடர் விளக்கம்!

‘சென்னையில் உள்ள கண்ணகி சிலையின் அடித்தளம் சேதமடைந்துள்ளது, நாட்டிற்கு கெடு பலன்களை ஏற்படுத்தும்!’ என சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.
 
தி.மு.க., முதன்முதலில் 1967 தமிழ்நாடு சடமன்றத் தேர்தலில் வென்று அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைத்தது. அவர், 1968 இல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார். அப்போது சென்னை மெரீனா கடற்கரையில் பல்வேறு தமிழ் ஆளுமைகளுக்கு சிலைகள் வைக்கபட்டன. அதில் ஒரு சிலையாக, சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கு சிலை வைக்கபட்டது.
சேதமடைந்துள்ள கண்ணகி சிலை பீடம்..
ஜெ. ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக இரண்டாவதாக முறையாக 2001 ஆண்டு பொறுப்பேற்றார். டான்சி நிலபேர வழக்கில் தண்டணை பெற்ற அவர், முதல்வராக பதவி ஏற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
 
இதன்பிறகு 2001 திசம்பர் 10 அன்று இரவோடு இரவாக கண்ணகி சிலை அங்கிருந்து அகற்றபட்டது. சரக்குந்து மோதி, அதன் பீடம் சேதமடைந்து விட்டதால் சிலை அகற்றப்பட்டதாக அரசு விளக்கம் கூறியது. சிலை எங்கு உள்ளது என்ற தகவலும் யாருக்கும் தெரிவிக்கபடவில்லை. சிலையின் பீடமும் அகற்றபட்டு அந்த இடத்தில் விரைந்து சாலை அமைக்கபட்டது.
 
‘முதல்வராக இருந்த ஜெயலலிதா தினமும் போயஸ் தோட்டதில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு செல்லும் வழியில் இச்சிலை உள்ளது; தலைவிரிகோலமாக உள்ள அந்த சிலையை ஜெயலலிதா பார்ப்பதால் அவரது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. இதை ஜோதிடர்கள் கூறியதால், கண்ணகி சிலை அகற்றப்பட்டது!’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
 
தமிழ் அமைப்புகளும் எழுத்தாளர்களும் தமிழறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடற்கரையில் வேறு ஒரு இடத்தில் கண்ணகி சிலை நிறுவப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனாலும், சிலையை மீண்டும் நிறுவவே இல்லை.
 
கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு எதிராகவும் சிலையை மீண்டும் அங்கே நிறுவவேண்டும் என்று, தமிழறிஞர் மா.நன்னன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு, கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி மீண்டும் அமைந்தது. இதன் பிறகு அருங்காட்சியகத்தில் வைக்கபட்டிருந்த கண்ணகி சிலை மீண்டும் சிலையை புணரமைக்கப்பட்டு, 2016 ஜூன் 3 அன்று மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.
ஜோதிடர் முனைவர் என்.ஞானரதம்
இப்படி கண்ணகி சிலையை வைத்து, ஜோதிட கணிப்புகள், செண்ட்டிமெண்ட்டுகள் வலம் வந்த நிலையில், சமீபத்திய நிவர் புயல் காரணமாக, சிலையின் பீடம் சேதமடைந்துள்ளது.
 
இதையடுத்தே, சமூகவலைதளங்களில், “பீடம் சேதமடைந்தது நாட்டிற்கு கெடு பலன்களை உருவாக்கும்!” என சிலர் பதிவிட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடரும், குருபிரம்மா ஜோதிட நிலைய நிறுவனருமான முனைவர் என்.ஞானரதத்தை தொடர்பு கொண்டு பேசினோம்.
 
அவர், “புயல் காரணமாக, கண்ணகி சிலை பீடம் மட்டுமல்ல.. மெரினா கடற்கரையில் உள்ள இதர சிலை பீடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தவிர புயல் பாதித்த பல மாவட்டங்களிலும் பலவித சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் ஜோதிட விளக்கத்தை கற்பித்து பேசுவது மூடத்தனமாகும்! நான் ஜோதிடத்தில் ஆராய்சசி செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன்.  ஜோதிடத்தில் எங்கும் இது போல, புயலால் பாதிக்கப்படும் சிலை, பீடங்களுக்கான பலன், பரிகாரம் என்று எதுவும் இல்லை.  எதற்கெடுத்தாலும் ஜோதிடத்தைத் தொடர்புபடுத்தி பேசுபவர்கள் இனியேனும் சிந்திக்க வேண்டும்” என்று சுருக்கமாகவும், சுருக்கென்றும் மனதில் தைப்பது போன்ற விளக்கத்தை அளித்தார்.
 
இந்நிலையில்,   சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் சிலையின் சேதமடைந்த  பீடத்தின் பகுதியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், மெரீனா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள மற்ற சிலைகளையும்  ஆய்வு செய்து வருகின்றனா்.
 
–  சோ.சுந்தரம்
 

Related Posts