“நான் அறநெறியோடு ஒழுக்கமா வாழறவ!”: கஸ்தூரி ஆவேசம்!

“நான் அறநெறியோடு ஒழுக்கமா வாழறவ!”: கஸ்தூரி ஆவேசம்!

“கவர்ச்சியாக நடிப்பவர் கடவுள் வேடத்தில் தோன்றலாமா” என்கிற விமர்சனத்துக்கு நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், துரை பாலசுந்தரம் இயக்கியுள்ள, ‘ராகு கேது’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது. இது,  ராகு மற்றும் கேது உருவான வரலாற்றைச் சொல்லும் ஆன்மிகப் படம். ,இப்படத்தில் பிரபல நடிகை கஸ்தூரி, கடவுள் பார்வதி வேடத்தில் நடித்து உள்ளார்.

இது குறித்து  ‘இந்து சமத்துவகட்சி தமிழ்நாடு’ அமைப்பின் தலைவர், விக்ரம் ஜி, “ஆபாசமாக நடிக்கும் கஸ்தூரி, கடவுள் பார்வதி வேடத்தில் நடிப்பதா” என தனது எதிர்ப்பை, நமது tamilankural.com இதழில் பதிவு செய்தார்.

அந்த செய்தி..

 ‘ராகு கேது’ சர்ச்சை: “கவர்ச்சி கஸ்தூரி, கடவுளா?” : இந்து அமைப்பு எதிர்ப்பு!

இதைத் தொடர்ந்து நமது tamilankural.com இதழிடம் பேசிய நடிகை கஸ்தூரி, சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார்.

அவர், “அந்தக்காலத்தில் கே.ஆர்.விஜயா துவங்கி இடையில், ரம்யா கிருஷ்ணன், மீனா, குஷ்பு,ரோஜா சமீபத்தில் நயன்தாரா என பல நடிகைகள் குறித்து இப்படிப் பேசுகிறார்கள்.  கவர்ச்சியாக நடித்தால், கடவுள் வேடத்தில் நடிக்கக்கூடாதா?

காதல், நகைச்சுவை, வீரம் என நவரச நடிப்பையும் அளிப்பதுதான் ஒரு  தேர்ந்த நடிகையில் பணி.  அது அந்தந்த படத்துக்கு ஏற்றபடி, கதாபாத்திரத்துக்கு ஏற்படி மாறும்.  அதை சிறப்பாக செய்ய வேண்டும். ஒரு படத்தில் நடித்ததை வைத்து, இன்னொரு படத்தில் நடிக்கக்கூடாது என்பது அறியாமை.தவிர, நான் அதி தீவிர கடவுள் பக்தை.  அற நெறியுடன், ஒழுக்கமாக வாழ்கிறவள்.  பக்திப் படத்தில் நடிப்பதற்காக தனியாக விரதம் இருக்க தேவையில்லை.. ஏனென்றால் வருடம் முழுதும், வாழ்க்கை முழுதும் அப்படித்தான் வாழ்கிறேன். என்னை பக்திப் படத்தில் நடிக்கக்கூடாது என சொல்ல எவருக்கும் உரிமை இல்லை” என்றார் ஆவேசமாக.

தொடர்ந்து பேசிய அவர், “மிகப் பிரபலமான அன்னமய்யா என்கிற தெலுங்கு படத்தில் குருபத்தினியாக நடித்தேன்.  எனது நடிப்பை கொணடாடினார்கள்.  அதே போல இந்த ராகு கேது திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறும். எனது நடிப்பை மக்கள் கொண்டாடுவார்கள்.

இன்னொரு விசயம்.. எனக்கு கண்டனம் தெரிவிக்கும் விக்ரம் ஜி, இந்து மதத்தை வளர்க்க உருப்படியான வேலை ஏதாவது செய்யட்டும்” என்று சொல்லி சிரித்தார் கஸ்தூரி.

 

 

Related Posts