நாளை இறைச்சிகடை இல்லை! இது மனித உரிமை மீறல்!

“சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை – நவம்பர் 15 அன்று ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும்,  பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை!” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை, மனித உரிமை மீறல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சரி, ஏன் இந்த தடை?

சமண (ஜைன) மதத் தலைவரான மகாவீரர் நினைவு தினம் என்பதால்தான் இந்தத்தடை. அம்மதத்தவர், இறைச்சி உண்ண மாட்டார்கள் என்பதால், அனைவருக்குமாக அன்று இறைச்சி தடை செய்யப்பட்டு உள்ளது.

இது சென்னையில் மட்டுமல்ல.. இந்தியா முழுதும் இந்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளூர் அரசு நிர்வாகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இந்தத் தடையை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன?

“உணவு முறை என்பது அவரவர் தனி மனித விருப்பம். அனைவராலும் – சட்டத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட உணவை குறிப்பிட்ட ஒரு சாராருக்காக அனைவருக்கும் தடை விதிப்பது மனித உரிமை மீறல்!” என்கிறார்கள்.

மகாவீரர்  பிறந்ததினமான (மகாவீர் ஜெயந்தி), மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும். அப்போதும் இதுபோல  இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.  ( நாளை அவரது நினைவுதினம் என்பதால் தடை.)

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், 45 லட்சம் சமண மதத்தினர் வாழ்கின்றனர். தமிழகத்தில் 83,359 பேர். மகாவீரரை போற்றும் இவர்களுக்காகத்தான், 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்குமாக இறைச்சி தடை செய்யப்படுகிறது.

இது குறித்து கூறுவோர், “அரேபிய இஸ்லாமிய நாடுகளில் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கும்போது, யாரும் – அதாவது வேறு மதத்தவரும், பொது இடத்தில்  சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ தடை இருக்கிறது. அதவது  நோன்பு துவங்கும் நேரமான சூரிய உதயத்தில் தொடங்கி, சூரிய அஸ்தமனத்தில் முடியும்வரை!  மீறினால்  அபராதமோ சிறை தண்டனையோ விதிக்கப்படும்.

இது தவறு. குறிப்பிட்ட மதத்துக்காக அனைவருக்கும் உண்ண தடை விதிப்பதா என பலரும் பேசுகின்றனர். ஆனால் இந்தியாவிலும் அதே பாணிதான், மகாவீர் ஜெயந்தி மற்றும் அவரது நினைவு நாளில் நடைபெறுகிறது!” என்று ஆதங்கப்படுகின்றனர்.

மேலும், “வீடுகளில் கோழி, ஆடு வளர்ப்பவர்கள் அன்று விரும்பினால் அவற்றை வெட்டி இறைச்சி சமைக்கத்தான் செய்வார்கள். தவிர அசைவ உணவகங்கள் திறந்திருக்கின்றன. இந்த நிலையில்,  இறைச்சி கடைகளை மட்டும் திறக்கக்கூடாது என்பது அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்!” என்றும் கூறுகின்றனர்.

-சோமு

Related Posts