ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய முடியுமா?
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது அனைவருக்கும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரம், ‘அப்படி தடை செய்ய தமிழக அரசால் முடியுமா?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முதலில் ஆன்லைன் சூதாட்டம் எப்படி மக்களை ஏமாற்றுகிறது என்று பார்ப்போம்.
இணையம் மூலம் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும்போது, அவருக்கு எதிராக சிலர் விளையாடுவதாக காண்பிக்கும். ஆனால் அவருக்கு எதிராக விளையாடுவது, மனிதர்கள் அல்ல… கம்ப்யூட்டர்தான்!
அப்படி ஓர் புரோகிராமை செட் செய்துதான் மக்களை ஏமாற்றுகிறார்கள். நம்மிடம் இருக்கும் சீட்டுகள் அனைத்தும் அந்த கம்ப்யூட்டருக்கு தெரியும். ஆகவே நாம் எந்த சீட்டை போட்டாலும் பதிலுக்கு நமக்கு செட் ஆகாத சீட்டை கம்ப்யூட்டர் போடும்.
ஆனாலும் ஆரம்பத்தில் சில விளையாட்டுகளில கம்ப்யூட்டர் தோற்று, நமக்கு பணம் வரும்.
நாம் அந்த சூதாட்டத்துக்கு அடிமையாகிவிடுவோம். பிறகு காசைப் பிடுங்க ஆரம்பிப்பார்கள்.
ஆனால் நம்மால் சூதாட்டத்தில் ஈடுபடாமல் இருக்க முடியாது.
சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சத்தை இழந்த இளைஞரும், “நான் ஏமாற்றப்படுகிறேன் என்று தெரிந்தும்.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும் என்னால் அந்த சூதாட்டத்தை விளையாடாமல் இருக்க முடியவில்லை..” என்று குறிப்பிட்டு இருந்தார்… இதனாலேயே தற்கொலையும் செய்துகொண்டார்.
இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் இந்தியாவில் மட்டும் ரூ. 25 ஆயிரம் கோடி புரள்கிறது!
இந்நிலையில்தான், ஆந்திர மாநில அரசு, “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுங்கள்!” என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியது.
ஏனென்றால், இணையம் என்பது உலகளாவியது. இதில் எந்த இணைய தொடர்பை (வலைதளங்களை) தடை செய்ய வேண்டுமானாலும், Internet Service Providers(ISP) எனப்படும் இணைய சேவை வழங்குனர்களுக்கு மத்திய அரசுதான் உத்தரவிட வேண்டும்.
ஆனால் ஆந்திர அரசின் கோரிக்கையை மத்திய அரசு செவிமெடுக்கவில்லை.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும், ஆப்களையும் தடை செய்ய வேண்டுமென இரு முறை கடிதம் எழுதியும் பலனில்லை.
இத்தனைக்கும், ஆன்திர மாநில அரசு, இந்தத் தடைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில்தான், அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா, “இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் நடக்கும் சூதாட்டம், ரம்மி, போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க மாநில அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை அரசின் உத்தரவுகளை மீறி நடத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் போட்டியாளர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
இரண்டாவது முறையாக அதே தவறைச் செய்தால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவோர் பிடிபட்டால் அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடுவோர் மீதுதான், மாநில அரசு வழக்கு தொடுக்க முடியும். அந்த சூதாட்டத்தை தடை செய்வதோ, நடத்துவோரை பிடிக்கவோ மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை.
ஆகவேதான், ஆந்திர அரசு, ‘இந்த சூதாட்டத்தை விளையாடுவோர், பேங்க் அக்கவுண்ட் எங்கள் மாநிலத்தில் இருந்தால், அந்த பண பறிமாற்றத்தைச் செய்யக்கூடாது” என உத்தரவிட்டது.
மீறி பணப்பறிமாற்றம் நடந்தால் அதைக் கண்டறிந்து, பண பறிமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.
இந்த முறையில் தான் தமிழ்நாட்டிலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை.. செய்ய முடியும்.
மத்திய அரசு மனது வைத்தால்தான் இந்தியா முழுதும் இந்த சூதாட்டத்தை தடை செய்ய முடியும்.
ஏன் மத்திய அரசு தயங்குகிறது என்று தெரியவில்லை.
இதற்கிடையே இச்சூதாட்டத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு செய்யப்பட்டது.
அப்போது நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி கேட்ட கேள்வி, மத்திய அரசுக்கும் பொருந்தும்.
அந்த கேள்வி:
“ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு சட்ட வரையறை செய்துள்ளதா? இதுவரை ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை?”
-யாழினி சோமு

