தோழர் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு ‘போராட்டமே வாழ்க்கை’ நூல் வெளியீடு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணுவுக்கு கடந்த டிசம்பர் 26 அன்று நூறாவது பிறந்தநாள்.
அவர் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது நூற்றாண்டு தொடக்க விழா.
பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு. 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது
இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.
சாதிய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர்.
இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில், தோழர்நல்லகண்ணுவின் முழுமையான போராட்ட வாழ்வை, மூத்த பத்திரிகையாளர் மணா, ‘போராட்டமே வாழ்க்கை’ என்ற தலைப்பில் சிறப்பாக எழுதி உள்ளார்.
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல், சென்னை, நந்தனத்தில் உள்ள தோழர் திரு. நல்லகண்ணுவின் வீட்டில் இன்று (08.01.2025) வெளியிடப்பட்டது.
