மதகஜராஜா விழா: “காதலர்களான விஷால் – சுந்தர் சி!”: குஷ்பு ஆதங்கம்!
கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’.
ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா போன்ற மறைந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் சுந்தர்சியுடன் அவருக்கு இது முதல் படம்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் மிகவும் சோர்வாக காணப்பட்டார். பாரம்பரிய உடையில் அவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நிலையில் கண்களில் கண்ணாடி போட்டுக்கொண்டு உற்சாகம் இல்லாமல் காணப்பட்டது அவரது ரசிகர்களை கேள்வி எழுப்ப வைத்தது.
அவரால் மேடையில் மைக்கை பிடித்து பேசக்கூட முடியாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் அவருக்கு படக்குழுவினர் சேரை போட்டு அமர வைத்தனர். இந்நிலையில் அவருக்கு ஜுரம் இருப்பதாகவும் அதனால்தான் அவரால் பேச முடியவில்லை என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது,
“மதகஜராஜா படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பேன் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஒரு இயக்குனராக அவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராமல் ஆரம்பித்த ஒரு சந்தோஷமான நிகழ்வு இது. சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு 12 மணி அளவில் திருப்பூர் சுப்பிரமணியம் எனக்கு போன் செய்தார். இந்நேரத்தில் அழைக்கிறாரே என நினைத்தால் மதகஜராஜா படத்தை பார்க்க தயாரிப்பாளர் அழைத்தார், பல வருடங்கள் ஆகிவிட்டதால் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்தபடி பார்க்க சென்றால் படம் சூப்பராக இருப்பதாகவும் கூறி படத்தைப் பற்றி அரை மணி நேரம் ரசித்து பேசினார்.
மேலும் சென்டிமென்டாக என்னுடைய குருநாதர் மணிவண்ணன் கடைசியாக நடித்த படம் இது. அவர் நிச்சயமாக மேலிருந்து என்னை ஆசிர்வாதம் செய்வார் என நினைக்கிறேன். அதேபோல மறைந்த நடிகர் மனோபாலா இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், ரிலீஸானால் என்னுடைய ரேஞ்சே வேற என்று சொல்லிக் கொண்டிருப்பார். குறிப்பாக இந்த படத்தில் விஷால், சந்தானம், மனோபாலா மூவரும் இடம் பெறும் ஒரு 15 நிமிட காட்சி இருக்கிறது. என்னுடைய படங்களிலேயே என் ஃபேவரைட் காமெடி காட்சி என்றால் இதுதான் என்று சொல்வேன்” என்றார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசும்போது,
“ ஒவ்வொரு பாடலையும் சுந்தர்.சி சார் கூட இருந்தே வாங்கிய விதம் அவ்வளவு அழகாக இருந்தது. இந்த படத்தில் பாடலை உருவாக்கும் போது சுந்தர் சி தான் பாடலின் முதல் வரிகளை எல்லாம் எடுத்துக் கொடுப்பார். அப்போது நானும் அவரும் இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான பாடலை உருவாக்க வேண்டும், ஏடாகூடமான வார்த்தைகளை எல்லாம் போட்டு ஜாலியாக இருக்க வேண்டும், மிகப்பெரிய இசை மேதைகள் எல்லாம் இந்த பாடலைப் பார்த்து டென்ஷன் ஆகி இது என்னடா இசைக்கு வந்த சோதனை என்கிற அளவுக்கு பேச வேண்டும் என ஒரு பாடலை உருவாக்க முடிவு செய்தோம்.
அதற்காக விஷாலை பாடவைப்பது என முடிவுசெய்தோம். அந்த பாடலை தான் விஷால் பாடியுள்ளார்” என்று கூறினார்.
நடிகர் விஷால் பேசும்போது,
“இப்போது படைப்பாளிகளுக்கு சுதந்திரம் கொடுத்து படம் தயாரிக்கும் ஜெமினி போன்ற நிறுவனங்கள் இங்கே இல்லை. அதனால் ஜெமினி போன்ற நிறுவனங்கள் மீண்டும் பட தயாரிப்பில் முழுமூச்சுடன் இறங்க வேண்டும். குறிஞ்சி பூ 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் என்பார்கள். அதுபோல 12 வருடம் கழித்து இந்த மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது. பழைய படம் போலவே இருக்காது. அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்” என்றார்.
நடிகை குஷ்பு பேசும்போது,
“இந்த 30 வருட வாழ்க்கையில் என் கணவர் சுந்தர் சி தூக்கமில்லா இரவுகளை கழித்தது என்றால் இந்த மதகஜராஜா படத்திற்காக தான். இந்த படத்திற்காக அவ்வளவு கடின உழைப்பை எல்லோருமே கொடுத்திருக்கிறார்கள். இந்த இந்த படம் துவங்குவதற்கு முன்பு நானும் விஷாலும் தான் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தோம். ஆனால் இந்த படத்திற்குப் பிறகு ஆம்பள, ஆக்சன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற துவங்கியபோது என்னை கழட்டி விட்டு அவர்கள் இருவரும் காதலர்கள் போல மாறிவிட்டார்கள்” என்றார்.
