“அம்பாளா தொடர்ந்து ஆடணும்!”: திருநங்கை வர்ஷா!
ராமலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள, ‘வேட்டையாட வாராளே வெட்டுடைய காளி…’ என்ற பாடல் நரம்புகளை முறுக்கேற வைக்கிறது.
பாடலில், அம்பாளாகவே மாறி அதிரவைக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பவர், வர்ஷா.
நாட்டுப்புறவியல் முதுகலை பட்டதாரி. நாட்டுப்புறக்கலைகளில் பல பரிசுகள் பெற்றிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்கிறார்.
ஆனால் இதையெலாலம் சாதிக்க அவர் போராட வேண்டி இருந்தது.
காரணம்.. அவர் ஒரு திருநங்கை..
“புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பக்கத்துல இருக்குற விராலூர் கிராமம்தான் என் சொந்த ஊர். மத்தவங்க என்னை பையனா பாத்தாலும், அஞ்சாவது படிக்கும்போதே எனக்குள்ள பெண்மையை உணர ஆரம்பிச்சேன். கூட படிக்கிற பொண்ணுங்ககூட பேசவும், பழகவும் பிடிக்கும். ஆண்களைப் பார்த்தா இனம் தெரியாத பயம் வரும்” என தனது சிறு வயது நினைவுகளை அசைபோடுகிறார் வர்ஷா.
தொடர்ந்து பேசும் அவர், “எல்லா திருநங்கைகளுக்கும் நேருகிற பிரச்சினைகள் எனக்கும் வந்தது. வீட்டுக்குள்ள இருக்கிறவங்களுக்கு என்னைப் பத்தி குழப்பம்.. வெளியில கேலி கிண்டல்! தாங்க முடியல…! ஒரு கட்டத்தில வீட்ட விட்டு வெளியேறி ஆபரேஷன் பண்ணிகிட்டேன்” என்கிறார் சோகமும் ஆதங்கமும் கலந்த குரலில்.
அவரிடம், “படிப்பில் ஆர்வம் தொடர்ந்தது அல்லவா” என்றோம்.
அதற்கு அவர், “ஆமாம்.. படிக்கணும்கிற வெறி மனசுக்குள்ள எரிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. அந்த நேரத்தில, என் தம்பி துரைராஜ்தான், என்னை புரிஞ்சிககிட்டு, அப்பா அம்மாகிட்டே எனக்காக பேசினான். இப்போ அம்மா, நான், தம்பி ஒன்னாத்தான் இருக்கோம். அப்பா விபத்துல இறந்துட்டாங்க” என்கிறார்.
“பள்ளியைப் போல கல்லூரியிலும் பிரச்சினை இருந்தததா” என்றோம்.

”அப்படி இல்லை. புரிஞ்சுக்கிட்ட சக மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தாங்க.. அதனால பிரச்சினை இல்லே…! ஆனா கழிவறை பிரச்சினை இருந்தது.. மாணவர்கள் போயிட்ட வந்தவுடனே.. காத்திருந்து நான் போவேன். சிறுநீரை அடக்கிவெச்சுக்கிட்டே இருந்ததால உடல் பிரச்சினைகள் ஏற்பட்டுது… இதையெல்லாம் தாண்டித்தான் ட இளங்கலை படிப்பை திருச்சி நேஷனல் கல்லூரியில படிச்சுமுடிச்சேன்” என்றவரிடம், “முதுகலையில நாட்டுப்புறவியல் துறையை தேர்ந்தெடுத்தது எப்படி” என்றோம்.
அதற்கு வர்ஷா, “ஏதோ ஒரு டிகிரி வாங்கணும்னுதான் இளங்கலை சேர்ந்தேன். அத முடிச்சுட்டு, மேற்கொண்டு என்ன படிக்கலாம்னு தேடினப்போதான், நாட்டுப்புறவியலை தேர்ந்தெடுத்தேன்.
காரணம், சின்ன வயசுல இருந்தே வீட்டுக்குத் தெரியாம நடனம் ஆடி பார்ப்பேன். அதையே படிக்கலாம்னு முடிவு பண்ணேன்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல திருநங்கை மாணவரா என்னைப் பார்த்த , பேராசிரியர் தர்மராஜ் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தினார்.. நம்பிக்கை கொடுத்தார்..” என்கிறார் வர்ஷா.
“சக திருநங்ககளுக்கு இலவசமாக, நாட்டுப்புற கலை கற்றுத்தரும் எண்ணம் எப்படி வந்தது..” என்றோம்.
“நாட்டுப்புறக்கலை மீதான ஈடுபாட்டால அது பற்றி படிச்சேன். தமிழ்நாடு முழுதும்.. அதையும் தாண்டி நிகழ்ச்சிகள் செய்யறேன். அப்பத்தான், நமக்குத் தெரிஞ்ச கலையை சக திருநங்கைகளுக்கும் கத்துத்தரலாமே.. அதன் மூலமா அவங்களுக்கு வருவாய் கிடைக்குமேனு யோசிச்சேன்.. உடனே அதை செயல்படுத்த ஆரம்பிச்சிட்டேன்” என்றார்.
“கலன் படத்தில், அதிரவைக்கும் உங்கள் அம்பாள் நடனம் அனைவரையும் கவர்ந்திருக்கிறதே” என்றோம்.
அதற்கு அவர், “ஏற்கனவே அம்பாள், காளி வேடங்கள் போட்டு கலை நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கிறேன். அப்போது நான் நானாகவே இருக்கமாட்டேன். அது ஒரு தனி அனுபவம். இந்த நிலையில கலன் பட இயக்குநர் வீரமுருகன், அம்பாள் நடனம் ஆட வாய்ப்பு கொடுத்தார். மகிழ்ச்சியா ஒப்புக்கிட்டேன். பார்த்தவங்க பாராட்டும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு!” என்றவரிடம், “உங்கள் எதிர்கால லட்சியம் என்ன” என்றோம்.
“அம்பாளா தொடர்ந்து ஆடணும்! தொடர்ந்து திருநங்கைகளுக்கு நாட்டுப்புறக் கலைகளைக் கத்துக்கொடுக்கணும், யாரோட தயவும் இல்லாம சுயமா அவங்க நிக்கணும்! அதுதான் என் வாழ்க்கை லட்சியம்!” என்கிறார் வர்ஷா.
வர்ஷாவின் ஆட்டம் தொடரட்டும்!
– தமிழ் இனியா
