இளையாராஜா திட்டுவாரா?: ‘மெய்யழகன்’ படத்தில் ட்விஸ்ட்!

இளையாராஜா திட்டுவாரா?: ‘மெய்யழகன்’ படத்தில் ட்விஸ்ட்!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ’96’ திரைப்படத்தின் மூலம், அனைவரையும் கவர்ந்தவர் இயக்குநர் பிரேம் குமார். வணிக ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தது அந்தத் திரைப்படம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது கார்த்தி, அரவிந்சாமி, திவ்யா ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் ‘மெய்யழகன்’ படத்தை இயக்கி உள்ளார்.

ஜோகிகா – சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், வரும் 27ம் தேதி வெளியாகிறது.

96 படத்துக்குப் பிறகு பிரேம்குமார் இயக்கும் படம், கிராமத்து வாழ்க்கையை வெளிப்படுத்தும் டீசர், ர்த்தி – அரவிந்சுவாமி இணைந்து நடிப்பது, 2டி தயாரிப்பு, சக்தி பிலிம் பேக்டரி வெளியீடு என படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இவை எல்லாவற்றையும்விட எதிர்பார்ப்பை எகிற வைத்த விசயம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்று பார்ப்போம்..!

96 திரைப்படத்தில், 90களில், இளையராஜா இசையில் வெளியான சில பாடல்களை பயன்படுத்தி இருப்பார்.

இதைத்தொடர்ந்து இளையராஜா, “பீரியட் படம் என்றால், அந்தக் காலகட்டத்துக்கு ஏற்றமாதிரி, நீங்களே ஒரு பாடலை இசையமைக்க வேண்டும். இன்னொரு இசையமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்துவது தவறு.
காரணம், அவர்களிடம் ஸ்டஃப் இல்லை; இது ஒரு வீக்னஸ். ஆண்மையில்லாத செயல்” என்று காட்டமாக பே(ஏ)சினார்.

இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் ’96’ படத்தைப் பார்த்தரசிகர்கள், “அந்தத் திரைப்படத்தில், 90-களில் இருந்த பள்ளி வாழ்க்கையைக் குறிக்க பல குறியீடுகள் ரசிக்கும்படி இருக்கும். ஹெர்குலஸ் சைக்கிள், ஹீரோ பேனா, இங்க் தெளித்த சட்டை, சாக்பீஸ், மர ஸ்கேல் என மலரும் நினைவுகளை தட்டி எழுப்பி இருப்பார் இயக்குநர் பிரேம்குமார். இந்த வரிசையில், ஒரு குறியீடாகத்தான் இளையராஜாவின் திரைப்பாடல்களின் சில வரிகளைகையும் பயன்படுத்தி இருப்பார். அதாவது, 90-களில் ஹிட்டான இளையராஜா – ஜானகி பாடல்களை மட்டும், பின்னணி இசைக்கருவிகள் இல்லாமல் பயன்படுத்தினார்.

மற்றபடி, பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, அந்த படத்துக்காக இசையமைத்த ‘அந்தாதி’, ‘காதலே காதலே’, ‘கரை வந்த பிறகே’ போன்ற அற்புதமான பாடல்கள், ரசிகர்களை மயக்கின.

உண்மையில் இளையராஜாவை உயர்த்தும் படமாக 96 அமைந்தது. இதை இளையராஜா அறியாமல் ஏசிவிட்டார்” என்று ஆதங்கப்பட்டனர்.

தவிர 96 படக்குழுவினர், “உரிய அனுமதி பெற்றே, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தினோம்” என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினர்.

இந்த சர்ச்சை அடங்கவே நீண்டகாலம் ஆனது.

இப்போது அதே, 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமாரின் இயக்கத்தில் மெய்யழகன் படம் உருவாகி இருக்கிறது.

இதன் பிரமோசன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “இந்தப் படத்திலும் இளையராஜா பாடல்கள் இருக்கின்றன” என்றார்.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்து உள்ளது.

எந்தெந்த பாடல்களை பயன்படுத்தி இருப்பார் இயக்குநர், இதற்கும் இளையராஜா காட்டமாவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

– டி.வி.சோமு

Related Posts