“மங்கை அரிராஜன் பொய் சொல்கிறார்!”: இயக்குநர் தளபதி காட்டம்!
தன்மீது,சின்னத்திரை சங்கத் தலைவர் மங்கை அரிராஜன் தெரிவித்திருப்பது, பொய்ப்புகார்கள் என மறுத்துள்ளார் முன்னாள் தலைவர் தளபதி.
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தளபதி, சங்கப் பணத்தில் 60 லட்சம் ரூபாய்க்கும் மேலாக கையாடல் செய்ததாக, சங்க தலைவர் அரிராஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.
உறுப்பினர் கட்டணத்துக்கு ரசீது அளிக்காமலும், சங்க வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தாமலும் தளபதி மோசடி செய்துவிட்டார், அறக்கட்டளை விபரங்களை தெரிவிக்காமல் மறைக்கிறார் என்றும் புகார் கூறினர்.
( செய்தி: இயக்குநர் சங்க முன்னாள் தளபதி மீது மோசடி புகார்!)
இது குறித்து சங்க முன்னாள் தலைவர் தளபதியை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர், “தொடர்ந்து எட்டு ஆண்டுகளில் மூன்று முறை தலைராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். சிறப்பாக செயல்பட்டேன். கொரோனா காலத்தில் ஊறுப்பினர்களுக்கு பல உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.
உதவி இயக்குநர்களின் சம்பள விவகாரம் என்பது தயாரிப்பாளர்கள் கையில் இருக்கிறது. அதாவது, சிறு முதலீட்டில் எடுக்கப்படும் தொடர்களுக்கும், பெரிய பட்ஜெட் தொடர்களுக்கும் ஒரே மாதிரி ஊதியம் தர இயலாது என அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தயாரிப்பாளர் தரப்புக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினேன். பேசினேன்.
இந்நிலையில்தான் தேர்தல் வந்தது. என்னை எதிர்த்துப் போட்டியிட்ட மங்கை அரிராஜன், எட்டே நாட்களில் உதவி இயக்குநர் ஊதிய பிரச்சினையை தீர்ப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். முப்பதே வாக்குகளில் என்னை வென்றார்.
ஆனால் இன்று 108 நாட்கள் ஆகியும் அதற்கான முயற்சியை அவர் எடுக்கவில்லை. ஆகவே வேண்டுமென்றே என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்.

தேர்தலுக்கு முன்பே, இந்த குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வழக்கு தொடுத்தார். அதை கோர்ட் நிராகரித்தது.
அறக்கட்டளை குறித்து பேசுகிறார். சங்க உறுப்பினர்களுக்கு கல்வி, மருத்துவ உதவித்தொகை, ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக துவங்கப்பட்டதே அந்த அறக்கட்டளை. நான் நிர்வாக அறங்காவலராக இருக்கிறேன். அரவிந்தராஜ் உள்ளிட்ட ஏழு பேர் அறங்காவலர்கள்.
சங்கத்துக்கு இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வந்து, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆனால் அறக்கட்டளைக்கும் சங்கத்துக்கும் தொடர்பு இல்லை.
தற்போது அவர் காவல் துறையில் புகார் செய்ததைத் தொடர்ந்து, நான் சென்று விளக்கம் அளித்துள்ளேன்.
ஆகவே அரிராஜன், தனது பொய்ப்புகார்களை தவிர்த்து, சங்கத்தின் – உறுப்பினர்களின் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும்” என்றார் தளபதி.
