ரூபன்’ திரைப்பட விமர்சனம்

ரூபன்’ திரைப்பட விமர்சனம்

காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வாழும்  மக்கள், மலைத்தேனை எடுத்து விற்று வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், அவர்களை  கிராம மக்கள் ஒதுக்கி வைக்கிறார்கள்.

இந்த நிலையில்,தேன் எடுக்க, காட்டுக்குச் செல்லும் நாயகன், அங்கு ஒரு கைக்குழந்தையை காண்கிறார். அந்த குழந்தையை எடுத்து வந்து தனது மனைவியிடம் தருகிறார். குழந்தை இல்லாத அந்த தம்பதி, குழந்தையை பாசத்துடன் வளர்க்கிறார்கள்.

இதற்கிடையில், காட்டில் விலங்குகளை வேட்டையாடும், வில்லன் கோஷ்டியினர் தாங்கள் செய்யும் தவறுகளை நாயகன் மீது போட, ஊர் மக்களும் நாயகனை தவறாகப் பார்க்கிறார்கள்.

இந்த சூழலில், ஊர் மக்களில் சிலர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோடுகிறார்கள். அவர்களுடன் நாயகனும் சபரிமலைக்கு செல்ல விரும்புகிறார். ஆனால், ஊர் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், தன் மகன் மூலமாகவே மாலை போட்டு தனியாக சபரிமலை செல்ல தீர்மானிக்கிறார்.

அப்போது, காட்டுக்குள் சிலர் மர்மமான முறையில் இறந்துக்கிடக்க, அவர்களை புலி கொன்றுவிட்டதாக நம்பும் வனத்துறையினர், கிராம மக்களின் சபரி மலை பயணத்திற்கு தடை விதிக்கிறார்கள். ஆனால், புலி இருப்பதை மறுக்கும் கிராம மக்கள், இந்த மர்ம மரணங்களுக்கு நாயகன் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். கிராம மக்களின் குற்றச்சாட்டில் இருந்து நாயகன் மீண்டாரா, மர்ம மரணங்களின் பின்னணி என்ன என்பதே கதை. இதை, ஆன்மீகம், ஃபேண்டஸி, கமர்ஷியல் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக வரும், விஜய் பிரசாத் இயல்பாக நடித்துள்ளார். அதே நேரம் காட்சிகளில் தூள் பறத்துகிறார்.

நாயகியாக வரும் காயத்ரி ரெமா, கனமான கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்து உள்ளார். குறிப்பாக, குழந்தையின்மை சொல்லி ஊர் மக்கள்  அவமானப்படுத்தப்படும் போது அவர் குமையும் காட்சிகளைச் சொல்லலாம்.

வழக்கம்போல் சார்லி நடிப்பு சிறப்பு. ஆனால் அவரை பத்து வயது சிறுவனுக்கு அப்பாவாக ஏற்க முடியவில்லை.

கஞ்சா கருப்பு மிகக் குறைவான காட்சியில் வந்தாலும் அசல் கிராமத்துக்காரராக வந்து மனதில் பதிகிறார்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். காடு, ஊர் என அவரது கேமரா அத்தனையையும் அருமையாக பதிவு செய்திருக்கிறது.

அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

காட்டுக்குள் பயணிக்கும் அனுபவத்தை அளித்து இருக்கிறார்எழுதி இயக்கியிருக்கும் ஐயப்பன்.

மொத்தத்தில் ‘ரூபன்’ ரசிக்கவைக்கிறது.

அதே நேரம் இன்னொரு சிந்தனையும் வராமல் இல்லை.

கொரோனாவுக்கு பயந்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. மக்களும் வெளியில் செல்ல – தங்கள் தங்கள் கடவுளை தரிசிக்கவே பயந்தார்கள். உடல் நலம் குன்றினால் மட்டும் மருத்துவர்களை நாடி ஓடினார்கள்.

இதுதான் எதார்த்தம்.

ஆனால் புலியால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை என சபரிமலைக்கு சிலர் கிளம்புவதாக காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர்.

திறமையான இயக்குநர், திறமையான குழுவினருடன் அறிவுபூர்வமான படங்களை அளிக்க வேண்டும்; தமிழ் மக்களுக்கு பயனுள்ளவர்களாக விளங்க வேண்டும். வாழ்த்துகள்.