3 BHK: “சரத்துடன் ஜோடியா நடிச்சா சூப்பர் ஹிட்தான்!”: தேவயாணி உற்சாகம்!

3 BHK: “சரத்துடன் ஜோடியா நடிச்சா சூப்பர் ஹிட்தான்!”: தேவயாணி உற்சாகம்!

ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயாணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘3 BHK’ திரைப்படம்,  ரசிகர்களின்  பேரதரவோடு திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.  அம்ரித் ராம்நாத் ப இசை அமைத்து உள்ளார்.

இந்நிலையில், படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தேவயாணி பேசுகையில், “எனக்கு இந்தப் படத்தில் சாந்தி கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் கிட்டத்தட்ட 30 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். அருண் விஷ்வா மாதிரியான தயாரிப்பாளரை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.

தன்னுடைய படைப்பை நேசித்து, நம்பிக்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் தயாரிப்பாளரை இப்போதுதான் பார்க்கிறேன். நான் ரிலீஸுக்குப் பிறகு திரையரங்குகளில் மக்களின் ரியாக்ஷனைப் பார்ப்பது இதுதான் முதல் முறை.

 

அப்படி ஒரு அருமையான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. திரையரங்குகளில் குழந்தைகள், பெண்கள் என்று எல்லோரும் படம் பார்க்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் ரொம்ப அபூர்வம்.

நாம் வன்முறை, டென்ஷன் என்று தொடர்ந்து படங்கள் பார்த்து வருகிறோம். அப்படியான சமயத்தில் ‘3 BHK’ மாதிரியான குடும்பப் படங்கள் வரும்போது மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள்.

இயக்குநர் ஶ்ரீ கணேஷை நாம் கொண்டாட வேண்டும். அவர் இதுபோல் இன்னும் நிறையப் படங்கள் பண்ண வேண்டும்.

ஶ்ரீ கணேஷ், குடும்பம் சார்ந்த சென்டிமென்ட் கதைகளைக் கொடுக்கக் கூடிய நல்ல எழுத்தாளர் மற்றும் இயக்குநர்.

சரத்குமார் சாருடன் நான் எப்போது இணைந்து நடித்தாலும் அது சந்தோஷமாகவே இருக்கிறது. அவருடன் நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாகவே இருக்கின்றன.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் சைத்ரா, மீதா ஆகியோர் வளர்ந்து வரும் நடிகைகள். என்னைப் போலவே ரொம்ப சிம்பிளாக இருக்கிறார்கள். அவர்களைப் போன்ற நடிகைகள் நமக்குத் தேவை. சித்தார்த் நடிக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமானவையாகவே இருக்கும். அவர் இயக்கம் பக்கத்திலிருந்து வந்தவர் என்பதால், படத்தின் அத்தனை விஷயங்களையும் கவனிப்பார்.” என்றார்.

Related Posts