வெப்பன்: விமர்சனம்
குகன் சென்னியப்பன் இயக்கத்தில், சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘வெப்பன்’ ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சூப்பர் பவர் உள்ள மனிதனைப் (சூப்பர் ஹியூமன்) பற்றிய வித்தியாசமான கதை.
பிரபல யூடியூபராக விளங்கும் வசந்த் ரவி, சுற்றுச்சூழல் ஆர்வலர். தவிர சூப்பர் பவர் மனிதர்கள் இருப்பதாக நம்புகிறார்.
இன்னொரு புறம் பளாக் சொசைட்டி என்ற பெயரில் ரகசியக் குழு வைத்து, பயோடெக் நிறுவனத்தின் மூலம் மனிதர்களை பலிகடாவாக்கும் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார் வில்லன் ராஜீவ் மேனன்.
இந்நிலையில், தேனியில் அதிசய நிகழ்வு ஒன்று நடக்க.. தன் யு டியுப் சேனலுக்காக கண்டெண்ட் தேடி அங்கு வசந்த் ரவி செல்கிறார். இன்னொரு புறம், வில்லனின் ப்ளாக் சொசைட்டி நபர்கள் ஒவ்வொருவராக பலியாகிறார்கள்.
இரு தரப்பும் ஒரு புள்ளியில் சந்திக்க, இருவரும் தேடிச் சென்ற சூப்பர் ஹியூமன் நபரைக் கண்டறிந்தார்களா என்பதே கதை.
முதல் பாதியில் நாயகன் வசந்த் ரவி, சாதாரண யூடியூபராக வருகிறார். அவ்வளவுதான். ஆனால், இரண்டாம் பாதியில் அவர்தான் கதையை நகர்த்துகிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல்வாகு, வித்தியாசமான குரல் என கவனத்தை ஈர்க்கிறார்.
ஆனாலும் அதீத நடிப்பை கொஞ்சம் குறைக்கலாம்.
சத்யராஜ் இடைவேளை நெருங்குகையில்தான் வருகிறார். ஆனால் அதிரடியான அறிமுகம். யானையுடன் கட்டிப்பிடித்து விளையாடுவது, இன்னொரு பக்கம் வில்லன்களை தயவு துவம்சம் செய்வது என்று வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகி தான்யா ஹோப் வருகிறார்.. போகிறார்.. அவ்வளவே.
வில்லனாக வரும் ராஜீவ் மேனன், அவரது அடியாள் ராஜீவ் பிள்ளை உள்ளிட்டோர் நிறைய பேசுகிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் அனைத்துமே சிறப்பு.
ஹிட்லர் காலக்கட்டத்தில் சிப்பாய்களுக்கு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சூப்பர் ஹியூமன் சீரம், அதை இந்தியாவுக்கு திருடி வருவது, பல ஆண்டுகள கழித்து அதனை உயிருக்குப் போராடும் தன் மகனுக்கு செலுத்தி பிழைக்க வைக்கும் அப்பா என ஏகத்துக்கு கற்பனை செய்து இருக்கிறார் இயக்குநர். ஓகேதான்.. அதை படமாக்கிய விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அறிவியல் கதை என சொல்லி.. ஆரா, குண்டலினி மூலம் சூப்பர் பவரை எழுப்புவது, புராணக் கதைகள் என்றெல்லாம் கொண்டுவந்து இருக்கிறார்கள்.
க்ளைமேக்ஸ் வரை ட்விஸ்ட்டுகள் தொடர்வது படத்துக்கு பலம். ஆனால் அவற்றில் சில மட்டுமே ரசிக்க வைக்கின்றன.
ஹாலிவுட் பாணியில், ஒரு கோலிவுட் முயற்சி என்கிற அளவில் பாராட்டலாம்.