விஜய் உத்தரவு: நாள் முழுதும் திரையரங்கில் சினிமா! தயாரிப்பாளர்கள் நன்றி!
தமிழ்த் திரையுலகின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பண்டிகைக் கால வார இறுதிகளில் காலை ஆறு மணி முதல் அதிகாலை இரண்டு முப்பது மணி வரை – அதாவது ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 20 மணி 30 நிமிடங்கள் வரை திரையிட அனுமதி அளித்து உள்ளார் முதலமைச்சர் விஜய். இதனால் குறிப்பிட்ட அந்த நாட்களில் ஆறு காட்சிகள் வரை திரையிடலாம். இதையடுத்து தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றியைப் பொழிந்துள்ளது.
இரண்டாயிரத்து இருபத்து மூன்று ஜனவரியில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தால் அதிகாலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்ட பிறகே தமிழ்நாட்டில் காலை ஒன்பது மணிக்குத் திரையிடப்படும் சூழல் நீடித்தது. இதனால் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் முன்கூட்டியே வெளியாகி, தமிழ்நாட்டின் வெளியீட்டு வாய்ப்பையும் வணிகத்தையும் பாதித்து வந்தது.
தற்போது அனைத்துத் தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்கள் இணைந்து விடுத்த கோரிக்கையை ஏற்று, தகவல் விளம்பரத் துறை அமைச்சர் ஏ ராஜ்மோகன் அவர்களின் பரிந்துரையின் பேரில், முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அவர்கள் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே இரண்டாயிரத்து பதினைந்து முதல் இரண்டாயிரத்து இருபத்திரண்டு வரை தயாரிக்கப்பட்ட இருநூற்று இருபத்து நான்கு திரைப்படங்களுக்கு நிலுவையில் இருந்த மானியத் தொகையை வழங்கித் திரையுலகை மீட்டெடுத்த அரசு, தற்போது இந்தச் சிறப்புக் காட்சி அனுமதியின் மூலம் உலகளவில் ஒரே நேரத்தில் படங்கள் திரையிடப்பட வழிவகுத்து, தமிழ்த் திரையுலகிற்கு மிகப்பெரிய ஆதரவுத் தூணாக உறுதிபூண்டுள்ளது.
தமிழ்த் திரையுலகிற்கு எது தேவை என்பதை உணர்ந்து உடனுக்குடன் செயலாற்றும் அரசுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறது!

