வேம்பு: திரைப்பட விமர்சனம்

வேம்பு: திரைப்பட விமர்சனம்

எத்தனை தடைகள் வந்தாலும், ஒரு பெண் நினைத்தால் தகர்த்தெறிந்து சாதிக்கலாம் என்று சொல்லும் படம், வேம்பு.

செங்கல் சூளையில் வேலை செய்யும் அப்பா,  குடும்பத்தைக் கவனிக்கும் அம்மா,  எப்போதும் அறிவுரை சொல்லும் பாட்டி ஆகியோருடன் வாழ்கிறாள் நாயகி, வேம்பு.  பட்டம் படித்துமுடித்து, அரசு வேலைக்கு முயற்சிக்கிறாள். சிறு வயதில் இருந்தே சிலம்பம் ஆடுவதில் கைதேர்ந்தவள்.

அவளது மாமன்,  சொந்தமாக போட்டோ ஸ்டுடியோ வைத்து இருக்கிறான். இருவருக்கும் திருமணம் நடக்கிறது.  அன்றே ஒரு விபத்தில் அவனது கண்பார்வை பறிபோகிறது.

புது வாழ்க்கை, இருளான சோகம்… எதிர்காலம் குறித்த கவலை.. இதையெல்லாம் அந்த இளம்பெண் சமாளித்தாளா என்பதுதான் மீதிக்கதை.

நாயகி வேம்புவாக ஷீலா நடித்து இருக்கிறார்.  கம்பு சுற்றும் வேகம்,  மாமனிடம் காட்டும் நேசம்,  பிரச்சினை வந்தவுடன் துவண்டுவிடாமல் போராடும் தன்னம்பிக்கை என ஜொலிக்கிறார்.  ஆனால்  அவர் பள்ளி – கல்லூரி மாணவி,  இளம் மனைவி என்பதையெல்லாம்தான் ஏற்க மனம் மறுக்கிறது.

நாயகியின் மாமனாக – போட்டோ ஸ்டூடியோ ஓனராக வருகிறார் ஹரி கிருஷ்ணன். வழக்கம்போல இயல்பான – எளிமையான நடிப்பால் கவர்கிறார்.  ( கண்பார்வை பறிபோன பிறகுதான், பேந்த பேந்த விழிக்கிறார்.)

மாரிமுத்து, கர்ணன், ஜானகி  உள்ளிட்ட அனைவருமே, தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி பகுதி கிராமங்கள், மலைப்பகுதியை கண் முன் நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.குமரன்.

மணிகண்டன் முரளி இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக,  மஞ்சனத்தி, உப்பு புளி மாங்கா ஆகிய பாடல்கள் கூடுதலாக ரசிக்க வைக்கின்றன.

பெண் ஒரு சக்தி – அவள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற தன்னம்பிக்கையை பாடம் போல் சொல்லாமல், சுவாரஸ்யமான கதை வழியே விதைக்கும் இயக்குநர் ஜஸ்டின் பிரபு பாராட்டுக்கு உரியவர்.  இன்னொரு விசயம் மகளை தலை நிமிர வாழ வைக்க எண்ணும் தந்தை, நல்லது செய்ய நினைக்கும் எம்.எல்.ஏ.,  தொழிலாளிகளுக்கு உதவும் முதலாளி என பாசிடிவான மனிதர்களை படம் நெடுக உலவவிட்டு இருக்கிறார். அதற்கும் பாராட்டுகள்.

 

 

 

Related Posts