‘Toxic’ பட விழா விபத்து: சென்னை நிகழ்ச்சி ரத்து!

 ‘Toxic’ பட விழா விபத்து: சென்னை நிகழ்ச்சி ரத்து!

நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கான மாணவர்களும் ரசிகர்களும் அலைகடலெனத் திரண்டிருக்க, மேடையில் என்ட்ரி கொடுத்தார் நடிகர் யஷ். அரங்கமே அதிரும் வகையில் விசில் சத்தமும் ஆரவாரமும் பிளந்தெடுக்க, அவர் உரையாற்றத் தொடங்கிய நொடியில் எதிர்பார்க்காத அந்த விபத்து நிகழ்ந்தது!

மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பிரமாண்ட ஸ்பீக்கர் பெட்டியும், கனமான இரும்பு விளக்குச் சட்டகமும் நிலைதடுமாறி கூட்டத்தின் மீது சாய்ந்தன. கண்மூடித் திறப்பதற்குள் நடந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைய, ஒரு மாணவி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பதறிய அமைப்பாளர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

கூட்டத்தில் சலசலப்பு எழுந்ததும், சட்டென்று பேச்சை நிறுத்திய யஷ், மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பதற்றத்துடன் விசாரித்தார். அசம்பாவிதம் ஏதும் பெரிதாக இல்லை என்று ஏற்பாட்டாளர்கள் உறுதிசெய்த பின்னரே அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

முன்னதாகவே காவல்துறையினர் எவ்வளவோ எச்சரித்தும், கட்டுக்கடங்காத கூட்டம் மேடையை நோக்கி முண்டியடித்தது. சிலர் ஸ்பீக்கர் அமைப்புகளின் மீது ஏற முயன்றதே இந்தத் திடீர் விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருந்த, டாக்சிக் பட நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சி நாளை நடைபெறும் என தெரிகிறது.

Related Posts