இன்று மார்கழி மாதப் பிறப்பு… சிறப்புகள் என்ன?
மாதங்களில் மிகவும் சிறப்பான மாதம் மார்கழி… ஏனேன்றால் பகவத்தீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்’ மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் “மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்” என்று கூறுகிறார்.
இந்த மார்கழி அத்தைனை சிறப்பான மாதமாகும். அதிகாலை எழுந்து நீராடி விட்டு’’ வாசலில் கோலம் போட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து அதன் மேலே பூக்கள் வைத்து மார்கழியை வரவேற்கிறோம்.
‘பீடு’ என்றால் ‘பெருமை’ என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி ‘பீடை’ என்றானது.
நம் வாழ்வில் இதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திருநாளில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என வணங்கப்படும் மாதம் இதுவாகும்.
ஆண்டாள் மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள். இதுவே இந்த மாதத்தின் பெருமையை நாம் உணர்வதற்கு சான்றாகும்.
அதிகாலையில் இருந்தே, கோவில்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.
சிறப்பான மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
உலக நன்மைக்காக திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷமே எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான் நடைபெற்றது.
கோகுலத்தில் இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு அனைவரும் துன்பத்தில் இருந்தார்கள், அந்த சமையத்தில் கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு கூறுகிறது.இதற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் கொண்டதும் இந்த மார்கழி மாதத்தில் தான்.
சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்றாகும்.
ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் நீராடி இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுங்கள்….. உள்ளத்தை தூய்மை படுத்தி இறைவன் அருள் பெற்று அனைத்து செல்வங்களையும் பெறுங்கள்…..