விமர்சனம்: துரிதம்: வேகம்.. விவேகம்!

விமர்சனம்: துரிதம்: வேகம்.. விவேகம்!

சண்டியர் படத்தில் ஹீரோவாக நடித்த ஜெகன், நடிக்கும் இரண்டாவது படம். 

நாயகியை வில்லன் கடத்த.. நாயகன் மீட்பதுதான் கதை. ஆனால் இப்படி ஒற்றை வரியில் சொல்ல முடியாதபடி விறுவிறுப்பாக,சுவாரஸ்யமாக அளித்திருக்கிறார்கள். தவிர, உறுத்தல் இல்லாமல் சமூகத்து சில செய்திகளையும் சொல்லி இருக்கிறார்கள்.ஆகவே முதலில், படக்குழுவினருக்கு ஒரு பூச்செண்டு.

தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய நாயகி, ரயிலை தவறவிட.. வேறு வழியில்லாமல் ஹீரோவின் டூ வீலரில் பயணிக்கிறாள். வழியில் வண்டி பிரச்சினை செய்ய.. லிப்ட் கொடுப்பது போல வரும் வில்லன், நாயகியை கடத்திச் செல்கிறான்.  ஹிரோயினை தேடிக் கண்டுபிடித்து காப்பாற்றுகிறார் ஹீரோ.

ஒரு புறம், நாயகியை கடத்திச் செல்லும் வில்லன், அவனைத் துரத்திச் செல்லும் ஹீரோ.. இன்னொரு வாகனத்தில் ஹீரோவின் நண்பன், அடுத்து.. மகளைத் தேடி வரும் ஹீரோயின் அப்பா, ஹீரோயின் பயணிக்கும் பஸ், ரயில்.. இப்படி முழுக்க முழுக்க வாகனங்களை வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் படம். தமிழில் இதுதான் முதல் முயற்சியாக இருக்கலாம்.

 நாயகன் ஜெகன், ஏற்கெனவே சண்டியர் படத்தில், ஹீரோவாக ரசிக்கவைத்தவர். இதிலும் அப்படித்தான்.

நாயகி மீதான காதல்.. அது நடக்காத சோகம்.. காதலைச் சொல்லிவிட மாட்டோமா என்கிற தவிப்பு.. காதலி கடத்தப்பட்டவுன் ஏற்படும் நாயகி ஈடன், உற்சாகமான இளம்பெண். கதாபாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்.

குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த ( அமரர்)  பூ ராமுவுக்கு இதில் சற்றே வில்லன் சாயல் வேடம். வழக்கம்போல் இதிலும் ஜொலிக்கிறார். கண்டிப்பான அப்பாவாக ஏ.வெங்கடேஷ், ஹீரோவின் நண்பனாக பால சரவணன் என அனைவருமே இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

இசையமைப்பாளர் நரேஷ் விறு விறு திரைக்கதைக்கு ஏற்ப பரபர பின்னணி இசையைக் கொடுத்து படத்தின் வேகத்தை அதிகரித்து உள்ளார்.  இரு பாடல்களும் அருமை. அதில் ஒன்றை ஆண்ட்ரியா பாடி அசத்தி இருக்கிறார்.

அதே போல  வாசனின் கேமராவும் டாப் கியரில் பயணிக்கிறது.

வசனங்கள் இயல்பு.. தவிர தரமான பஞ்ச்.

“அவ கட்டைய வச்சிருக்கிறது உன்னை தாக்குறதுக்கு இல்லே.. தன்னை பாதுகாக்க..”

“பலாத்காரம் பண்ணிட்டு இவ டிரஸ் ஆபாசமா இருந்துச்சுனு சொல்லுவாங்க”  – இதெல்லாம் சில சாம்ப்பிள்கள்.

ஆரம்பத்தில் இருந்தே விறு விறு திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கிறார் சீனிவாசன். நாயகன் ஜெகன்தான் படத்தை தயாரித்து இருக்கிறார். தயாரிப்பாளர் ஜெயகனையும் பாராட்ட வேண்டும்.

65 நாட்கள், 40 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் சமரசம் செய்துகொள்ளவில்லை.

பரபரப்பான த்ரில்லரை, மக்களுக்கு தேவையான கருத்துக்களோடு சொல்லி இருப்பதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

கடத்தல் துரத்தல் என்று வேகம் இருக்கும் அதே கதையில்,  போலி சாமியார், லஞ்ச போலீஸ், சாதி வெறி, ஆணாதிக்கம் என பல விசயங்களை சொல்லி இருக்கும் விவேகம் பாராட்டத்தக்கது.

 வாழ்த்துகள்!

Related Posts