“தொடாதே!”: பெண்களுக்கு கே.ராஜன் அறிவுரை!
“இலவசப் பொருட்கள் தரவேண்டி இருப்பதால்தான், மதுக்கடைகளை நடத்தவேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படுகிறது. ஆகவே இலவச பொருட்களை பெண்கள் வாங்கக்கூடாது” என தயரிப்பாளர் கே.ராஜன், சென்னையில் நடந்த தொடாதே பட விழாவில் தெரிவித்தார்.
காதல் சுகுமார் நாயகனாக நடிக்கும், தொடாதே படத்தின், இசை ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப்-ல் நடந்தது.
கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், அலெக்ஸ் இயக்கத்தில் காதல் சுகுமார் – ப்ரீத்தி ஜோடியாக நடிக்கும் படம், ‘தொடாதே’.
படத் தயாரிப்பாளர் ஜெயக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
ராஜேஷ், ஒளிப்பதிவு செய்ய, ராஜா, இசை அமைக்கிறார்.படம் குறித்து இயக்குநர் அலெக்ஸ், “பெரும்பாலான கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ‘போதையில் செய்துவிட்டேன்’ என்றே வாக்குமூலம் அளிக்கிறார்கள்.
ஏழை மக்களின் வருமானம் மதுபானக் கடைகளில் சீரழிகிறது. அதை குடிமகன்கள் புரிந்து கொண்டு, குறைந்தபட்சமாவது திருந்த வேண்டும் என்கிற நோக்கில், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.
‘குடியைத் தொடாதே’ என்பது மட்டுமல்ல.. ‘பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொடாதே’, ‘போதைப் பொருட்களை தொடாதே’ என்னும் சமூகக் கருத்துக்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறேன்” என்றார்.
படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று சென்னையில், படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:
“குடியை தொடாதே என்பதை வலியுறுத்துகிறது இந்த தொடாதே படம். மிகப் பாராட்டுக்குரியது.
ஏனென்றால் குடிப்பழக்கத்தால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்துவிட்டன. எத்தனையோ பெண்கள் தாலி அறுக்கப்பட்டு உள்ளனர்.
குடித்தவிட்டு வந்து, தாயை அடித்து உதைப்பது, குடும்பத்தில் அமைதி இல்லாமல் போவது தொடர்ந்து நடக்கிறது.
நான் வசிக்கும் ராயபுரம் பகுதியில் இரு பள்ளிகள் மற்றும் ஒரு மருத்துவமனை அருகே மதுக்கடையும் பாரும் உள்ளது. அந்த மருத்துவமனையில் தான் நானும் பிறந்தேன்.
அருகில் உள்ள பள்ளி ஒன்றில்தான் நானும் கலைப்புலி தாணுவும் முன்னாள் அமைச்சர் ஒருவரும் படித்தோம்.
அந்த மதுக்கடையை அகற்றக் கோரி, தமிழக மக்கள் இயக்கம் சார்பில் இருபது முறை போராடி விட்டேன். நடக்கவில்லை.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது குறித்து கூறினேன். விதிக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் அகற்றப்படும் என்றார். மேலும், அரசுக்கு நிறைய செலவு.. மானியம், இனாம்.. அதனால் மதுக்கடைகளை மூட முடியவில்லை என்றார்.
ஆகவே பெண்களே, மிக்சி, டிவி, தாலிக்கு தங்கம்.. இப்போது கொடுத்தார்களே பொங்கல் பண்டிகைக்கு 24 பொருட்கள்.. எதுவானாலும் இனாம் வாங்காதீர்கள்.
அரசுக்கு மதுக்கடை மூலம் வரும் 34 ஆயிரம் கோடி வருவாய் மூலம்தான் அவை தரப்படுகின்றன.
ஆகவே இனாம் பொருட்களை வாங்காதீர்கள்.
அதே நேரத்தில், குடும்பத்தில் நிம்மதியைக் கெடுக்கும் மது வேண்டாம் என முதலமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கே.ராஜன் பேசினார்.