திரு.மாணிக்கம்: திரைப்பட விமர்சனம்: முத்து
எவ்வளவு இக்கட்டான நேரத்திலும், நேர்மையாக வாழும் ஒரு மனிதனின் கதை.
கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் கடை நடத்துகிறார் நாயகன். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள். பொருளாதார பிரச்சினைகள் உண்டு என்றால், அனைவரிடத்திலும் அன்பைச் செலுத்தி மன நிறைவாகவே வாழ்கிறார்.
அவரிடம் லாட்டரி டிக்கெட் வாங்குகிறார் ஒரு முதியவர். தனது பணம் தொலைந்துவிட்டதால், பணம் கொடுத்துவிட்டு டிக்கட்டை பெற்றுக் கொள்வதாகச் சொல்லி செல்கிறார்.
அந்த டிக்கெட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுகிறது.
அந்த முதியவரைத் தேடி பயணிக்கிறார் லாட்டரி கடைக்காரர்.. இடையில் அவரை தவறாக புரிந்துகொண்டு போலீஸ் விரட்டுகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.லாட்டரி கடை நடத்துபவராக சமுத்திரகனி. நல்ல கணவனாக காதல் மனையிடிம் நடந்துகொள்வது, நல்ல தகப்பனாக மகள்களிடம் பாசம் காட்டுவது, அனைவரிடத்திலும் நேசத்தை வெளிப்படுத்துவது என சிறப்பாக நடித்து உள்ளார்.
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் அனன்யா, கல்லூரி, காதல் என்று இளம் வயது கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவராக இருந்தாலும், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாய், என்று முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்ப கஷ்ட்டம் தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும், கணவரின் நேர்மையால் அது முடியாமல் போகும்போது, உள்ளுக்குள் எழும் கோபத்தை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி நல்ல நடிகையாக முத்திரை பதிக்கிறார்.
முதியவர் கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பாரதிராஜா. அவரிடம் லாட்டரி டிக்கெட்டை நீட்டும்போது, “நான்தான் பணம் தரலையே.. நீங்களே வச்சுக்குங்க..” என்கிற போதும், “பாதியாவது….” என்று இழுக்கும்போதும் நெகிழ வைக்கிறார்.
அதே போல பாசமிக்க மனிதராக வந்து உள்ளத்தைக் கவர்கிறார் நாசர். வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், கருணாகரன்,சாம்ஸ், ஸ்ரீமன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் இயல்பாக நடித்து உள்ளனர்.
ஆனால், லண்டன் ரிட்டர்னாக நடித்திருக்கும் தம்பி ராமையா, காமெடி என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைாக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா கண்கள் கேரள பகுதிகளை கம்கள் குளிர எடுத்துத் தந்திருக்கிறது.
சமுத்திரக்கனியின் பயணம் வெற்றி பெறுமா என்ற பதற்றத்தை ரசிகர்களுக்கு கடத்தி இருக்கிறார் படத்தொகுப்பாளர் குணா.
எழுதி இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி, எளிமையானவர்களின் நேர்மையான வாழ்க்கையை இயல்பாக அளித்து இருக்கிறார். லாட்டரி- பரிசு – நேர்மை.. என வேறு கதைகளை நாம் பார்த்திருந்தாலும் சொன்ன விதத்தில் வேறுபட்டு அசத்துகிறார் இயக்குநர்.
அனைவரும் பார்க்கலாம்.